Back
Home » திரைவிமர்சனம்
கொடிவீரன் விமர்சனம் #KodiveeranReview
Oneindia | 8th Dec, 2017 04:38 PM

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: சசிகுமார், மஹிமா, சனுஷா, பூர்ணா, பால சரவணன், விதார்த்

ஒளிப்பதிவு: எஸ் ஆர் கதிர்

இசை: என் ஆர் ரகுநந்தன்

தயாரிப்பு: கம்பெனி புரொடக்ஷன்ஸ்

இயக்கம்: எம் முத்தையா

படத்தின் டிஸ்கஷன் அநேகமாக இப்படித் தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்...

முத்தையா: அண்ணே... இந்த வாட்டி வலுவா ஒரு கதைண்ணே... நம்ம மண்மணம் மணக்க மணக்கச் சொல்றோம்...

சசிகுமார்: ஆமாண்ணே... குட்டிப்புலி மாதிரி எதுவும் 'சாயம்' வேணாம்ணே... சோஷியல் மீடியால ரொம்ப காச்சறாங்க.

முத்தையா: ம்ஹூம்... அந்த வேலையே இல்லண்ணே.... இந்த வாட்டி உங்க வேட்டில மட்டும்தாண்ணே சாயம்.. வேற எந்த சாயமும் இருக்காதுண்ணே.

சசிகுமார்: சரி... அந்த 'ஒத்தை வரி'யைச் சொல்லுண்ணே.. கேப்போம்.

முத்தையா: அண்ணே... நம்ம தேனிப்பக்கம் ரெண்டு ஊருண்ணே... ரெண்டு அண்ணனுங்க. ரெண்டு தங்கச்சிங்க. ஒரு அண்ணன் ஹீரோ... அதான் நீங்க. உங்க தொழில் சாமியாடி. இன்னொரு அண்ணன் வில்லன். அதுக்கு பசுபதியப் போட்றலாம்ணே. அவருக்கு சட்டவிரோதமான அத்தனை தொழிலும் உண்டு. ஆனா ரெண்டு பேருமே பாசக்காரவக. தங்கச்சிக்கு ஒண்ணுன்னா, 'சின்னத்தம்பி அண்ணனுங்'களுக்கு ஆயிரம் மடங்கு மேல செய்யக் கூடியவங்க. இந்த ரெண்டு பேத்துக்கும் முட்டிக்குது ஒரு கட்டத்துல. அதுக்குக் காரணமும் தங்கச்சிங்கதாண்ணே. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர்றதும் அந்த தங்கச்சிங்கதாண்ணே! எப்படிண்ணே ஒத்தவரி...?

சசிகுமார்: நல்லாத்தேன் இருக்கு... ஆனா நான் ஏற்கெனவே இந்த மாதிரி கதைல நடிச்ச மாதிரி இருக்கே முத்தையா... குட்டிப்புலில ரெண்டு அம்மா... இதுல ரெண்டு தங்கச்சிங்க. அதுலயும் சாயவேட்டி, சாமியாடி. இதுலயும் அதே. என்ன அந்த மஞ்ச தலைப்பா மட்டும்தான் மிஸ்ஸிங்.

முத்தையா: அண்ணே... நம்ம ஊர் கதைண்ணே... நம்மாளுங்க பூரா ரெண்டு மூணு கெட்டப்புலதானேண்ணே திரிவாய்ங்க. ஆனா, கதைக்குள்ள ஏகப்பட்ட ட்விஸ்டு வச்சிருக்கண்ணே... தங்கச்சிங்க மாப்ளைங்களாலதாண்ணே பிரச்சினையே வருது. வில்லனோட தங்கச்சி மாப்ள வில்லங்கம் பண்றார். உங்க தங்கச்சி மாப்ள வழக்குப் போட்டு உள்ள தள்ளப் பாக்குறார். மாப்ளைகளைக் காப்பாத்த நீங்க ரெண்டு பேரும் மோதிக்கிறீங்க. இந்த ட்விஸ்ட்டு ஓக்கேவாண்ணே!

சசிகுமார்: ம்ம்... சரி.. நீங்க ஸ்க்ரிப்டை ஆரம்பிங்க!

முத்தையா: ரொம்ப சந்தோஷம்ணே... தலைப்பு கொடிவீரன்ணே... அதான் உங்க பேரு படத்துல.

சசிகுமார்: டபுள் ஓகேண்ணே..

-இப்படித்தான் பேசி முடிச்சிட்டு ஷூட்டிங் போயிருப்பாங்க போல, சசிகுமாரும் இயக்குநர் முத்தையாவும். ஏற்கெனவே தான் இயக்கிய குட்டிப்புலி, மருது படங்களின் டெம்ப்ளேட்டில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து மீண்டும் சசிகுமாருக்கு மாட்டிவிட்டிருக்கிறார் முத்தையா.

கதையிலோ, காட்சி அமைப்பிலோ பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. பஞ்ச் வசனங்கள் என்ற பெயரில் கடுப்பேற்றுகிறார்கள்.

'செஞ்சிருவேன்... செய்ய வப்பேன்...'

'போட்ருவேன்... போட வப்பேன்'

'உனக்கு எமன் நான்தான்... அப்படின்னா உன்னோட எமன் நான்தான்'... - சில பஞ்ச் சாம்பிள்கள்!

மதுரை, தேனிப் பக்கம் போனா எந்த மூலைலிருந்து அருவா பாயுமோ என பயந்து நிற்கும் அளவுக்கு கங்கணம் கட்டிக் கொண்டு கோடம்பாக்கத்தில் வேலைப் பார்க்கிறார்கள் இப்போதைய மண்ணின் மைந்தர்கள்.

மெனக்கெட்டு நடிக்க வேண்டுமே என்ற கஷ்டம் எதையும் சசிகுமாருக்குத் தரவில்லை இயக்குநர் முத்தையா. 'அண்ணே... எண்ணெய் வச்சு படிய வாரிய தலை. நெத்தி நிறைய திருநீறு, பொட்டு, நீங்க சிரிக்கிறீங்களா, அழுவுறீங்களான்னு கூட தெரிஞ்சிக்க முடியாத அளவுக்கு தாடி, மீசை... அப்பப்போ யமஹால போறீங்க... கம்பு சுத்துற மாதிரி ரெண்டு டான்ஸ் போடுறீங்க...' - இப்படித்தான் அவர் கேரக்டர் பற்றிச் சொல்லியிருப்பார் முத்தையா என்று நினைக்கிறேன். அதை இம்மி கூடப் பிசகாமல் செய்திருக்கிறார் சசி!

நாயகிகளில் மஹிமா பரவாயில்லை. ஆனால் அவருக்கு சசிகுமார் மீது காதல் வருவதும், அவர்களின் காதல் காட்சிகளும் ஏனோ தானோ ரகம்.

தங்கைகளாக சனுஷா, பூர்ணா வருகிறார்கள். உடல் குண்டடித்திருந்தாலும், சனுஷாவின் அந்த குழந்தைத்தனமான முகபாவங்கள் ரசிக்க வைக்கின்றன. பூர்ணா பெரும்பாலும் ஒரே மாதிரி உர்ரென்று வந்து போகிறார்.

பால சரவணனின் நகைச்சுவைதான் படத்தில் பெரிய ஆறுதல். பசுபதியின் வில்லத்தனம் எரிச்சலூட்டுகிறது. அவர் மாப்பிள்ளையாக வரும் கேரக்டரும் அப்படியே. 'இந்தாள சீக்கிரம் போட்டுத் தள்ளுய்யா' என்கிறார்கள் ரசிகர்களே!

அளவான நடிப்பைத் தந்திருக்கிறார் விதார்த்.

எஸ் ஆர் கதிரின் ஒளிப்பதிவில் புழுதி பறக்கிறது. அந்த மீன் பிடித் திருவிழா சற்றே வித்தியாசம். ரகுநந்தனின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே கேட்ட மாதிரிதான் உள்ளன. பின்னணி இசையின் டெசிபலைக் குறைத்திருக்கலாம்.

மதுரைப் பக்கத்து கிராமத்துக் கதைகள் இப்படித்தான் என்று ஒரு டெம்ப்ளேட் உருவாக்கிக் கொண்டு அதையே திரும்பத் திரும்பப் படமாக்குவது சசிகுமார் - முத்தையாக்களுக்கு வேண்டுமானால் அலுக்காமல் இருக்கலாம். ஆனால் பார்வையாளர்களுக்கு?

 
ஆரோக்கியம்