Back
Home » திரைவிமர்சனம்
'சக்க போடு போடு ராஜா' படம் எப்படி? #SPPRReview
Oneindia | 23rd Dec, 2017 07:49 AM

ஹீரோவுக்கும், வில்லனுக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு, கடைசியில் வில்லன் மனம் திருந்தி ஹீரோவுடன் சேர்ந்து கேண்டிட் க்ரூப் போட்டோவோடு சுபம் போடும் கே.எஸ்.ரவிகுமார் ஜானர் படம்தான் இந்த 'சக்க போடு போடு ராஜா'. காமெடியன் சந்தானம் ஹீரோவாக நடித்து பல படங்கள் பெண்டிங்கில் வரிசையில் நிற்கும்போது, இந்தப் படம் மட்டும் முந்தி வெளிவந்திருக்கிறது. சேதுராமன் இயக்கிய இந்தப் படத்தில் வைபவி சாண்டில்யா ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

நண்பனின் காதலியை அவரது ரௌடி அண்ணனின் எதிர்ப்பை மீறி அவனோடு சேர்த்து வைக்கிறார் சந்தானம். இந்த விஷயம் தெரிந்து அடையாளம் தெரியாத சந்தானத்தை தேடுகிறது அண்ணன் க்ரூப். இவர்களிடமிருந்து தப்பித்த சந்தானம் பெங்களூருக்கு செல்கிறார். அங்கு ஹீரோயின் வைபவியை பார்த்ததும் டூயட் சாங் பாடுகிறார். அந்தப் பெண் அங்கிருக்கும் பிரபல ரௌடியின் தங்கச்சி. 'இந்தப்புள்ள நம்மளை விட கோவக்காரியா இருக்கும்போலயே' என அவரது அண்ணனே நினைக்கும் அளவுகு காலேஜ் படிக்கும் ரௌடி தங்கச்சி வைபவி ஜூனியர் பசங்களையெல்லாம் விதவிதமாக ராகிங் செய்கிறார். அதற்கு கூடவே நின்று சிரிக்கவென அஞ்சாறு செட் ப்ராப்பர்டி கேர்ள்ஸ். அவரது திமிரை பார்த்து வியந்துபோகும் சந்தானம் பிடிச்சா அந்த மீன் தான் என காதலில் குதிக்கிறார்.

வேண்டுமென்றே அவரைச் சீண்டி, பிறகு கண்டுகொள்ளாமல் கடந்து தன்னைச் சுற்ற வைக்கிறார். எத்தனையோ படங்களில் சாக்லேட் பாய்ஸ் கையாண்ட அதே யுத்தி. அதிலும், 'நான் டூ பீஸ்ல வந்து அவனை பீஸ் பீஸாக்கப்போறேன்' என ஸ்விம்மிங் ட்ரெஸ்ஸோடு தனது தோழிகளிடம் சவால் விடும் காட்சியில் தியேட்டரே கைதட்டுகிறது. (பாவத்த.. வந்த வரைக்கும் லாபம்னு நினைச்சிருப்பாய்ங்களோ..!) காதல் மீன் பிடிக்க சந்தானம் ஒரு குளத்தில் இறங்க, 'கடல்ல இருக்குற மீனுனா வலை போட்டுப் பிடிக்கலாம்.. இவன் கடாய்ல இருக்குற மீனு... எப்படி புடிக்கிறேன் பாரு' என கடாயில் குதிக்கிறார். சாரி ஸ்விம்மிங் பூலில் குதிக்கிறார். அப்போதும் கண்டுகொள்ளாமல் 'நீ யாரும்மா கோமாளி' எனக் கடந்துபோகிறார் நம்ம ஹீரோ சந்தானம்.

அப்படி இப்படி அந்தப் பொண்ணையும் லவ் பண்ண வச்சுட்டாரு. சிக்கல்கள் இல்லாமயே இருதலைக் காதல் உருவாகுது. லவ்வர் 'ஹாய்'னு மெசேஜ் பண்ணினா நாம என்னங்க பண்ணுவோம்..? ரிப்ளை பண்ணுவோம்... அதுதானேய்யா உலக வழக்கம். ஆனா சந்தானம், அந்தப் பொண்ணு வாட்ஸ்-அப்ல டபுள் டிக் காட்டுறதுக்கு முன்னாடி எகிறிகுதிச்சு அவங்க வீட்டுக்கே போய் ஹாய் சொல்லிட்டுதான் மூச்சே வாங்குவாரு. அவரோட அண்ணனுக்கு இவங்க லவ் பண்ற மேட்டர் தெரிஞ்சிடுச்சு. சந்தானத்தை போட்டுத்தள்ள ரோபோ சங்கர்ங்கிற டெரரான ரௌடியை அனுப்புறார். அவர் ஸ்கெட்ச் போட்டு தூக்க முயற்சி பண்றார். புத்திசாலித்தனமா அதையெல்லாம் தகர்க்கிறார் சந்தானம். புத்திசாலித்தனமா... நோட் பண்ணிக்கோங்க யுவர் ஹானர்.

இங்கதான் ஒரு மாபெரும் மிகப்பெரிய பயங்கரமான ட்விஸ்ட். சந்தானம் காதலிக்கிற பொண்ணுக்கும் முன்னாடி நண்பனுக்கு கல்யாணம் பண்ணி வச்ச பொண்ணுக்கும் ஒரே அண்ணன். ஆமா அவரோட தங்கச்சிதான் ரெண்டு பேரும். அதுபோக இவங்களுக்கு இருக்குற இன்னொரு அண்ணன் தான் பெங்களூர் டான். ரெண்டு அண்ணன்களும் சென்னை, பெங்களூர்னு தொகுதி எல்லைகளைப் பிரிச்சுக்கிட்டு பார்டர் தாண்டாத ராவான ரௌடிகள். சின்ன அண்ணன் தன் தங்கச்சியை பார்த்தவரை விசிட்டிங் கார்டு கொடுக்குற மாதிரி துப்பாக்கியால டப்புனு போடுவார். பெரிய அண்ணன் தீபாவளி பொங்கலுக்கு கிரீட்டிங் கார்டு கொடுக்குற மாதிரி பக்கத்துல கூப்பிட்டு சொருகிருவார்.

இந்த ரெண்டு முரட்டு பீசுக கண்ணுலயும், மூளையிலயும் மண்ணைத் தூவி, 'புத்திசாலித்தனமா' எப்படி ஹீரோயினைக் கைபிடிக்கிறார்ங்கிறதுதான் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் கதை. இந்தக் குடும்பத்துக்கு சரத் லோஹிதஸ்வா எதிரி. தங்கச்சிகளை போட்டுத்தள்ள பிளான் பண்றார். ஏன் தங்கச்சிகளை கொல்ற முடிவெடுக்கிறார்ங்கிறதுக்கு ஒரு குட்டி ஃபிளாஷ்பேக்கும் வருது. ரெண்டு அண்ணன்கள்கிட்டயிருந்து தப்பிக்கிறதோட, எதிர்தரப்பு வில்லன்கிட்ட இருந்தும் கடுமையா சண்டை போட்டுக் காப்பாத்தி ரசிகர்கள் மத்தியில் ஹீரோவா தன்னை நிறுவ போராடுறார். ஆக்‌ஷன் ஹீரோவா ஃபார்ம் ஆகுறதுக்காகவே வில்லன்கள் இவரை அப்பப்போ தாக்குறாங்க. எல்லாம் ஒரு சாண் வயித்துக்கு தான் சார் மொமென்ட்!

ஆக்‌ஷன் ஹீரோவான சந்தானம் ஆனா ஊனானா சண்டை போடக் கிளம்பிடுறார். சந்தானம் அடிச்சு தெறிக்க விடுறதுல அடியாட்கள் தலைகீழா விழுந்து தண்டால் எடுக்குறாங்க. கனல் கண்ணன் மாஸ்டர் சந்தானத்தை வச்சு செம காட்டு காட்டிருக்கார். காமெடியும் நானே ஆக்‌ஷனும் நானேன்னு ஆல்ரவுண்டர் வேலை பார்க்காம, விவேக், ரோபோ சங்கர், பவர் ஸ்டார் சீனிவாசன், மயில்சாமி, லொல்லுசபா சுவாமிநாதன்னு சிலபல காமெடியன்களும் படத்தில் இருக்காங்க. சில இடங்களில் சலிச்சுப்போன மொக்கையைப் போட்டாலும் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார் விவேக்.

சந்தானத்தின் சில வசனங்கள் செமையாகவும், சந்தானம் ஃபேன்ஸ் சமூகம் கொண்டாடும் அளவுக்கும் இருக்கிறது. விடிவி கணேஷ், விவேக் ஆகியோரும் டைமிங் காமெடியில் சிரிப்பு மூட்டுகிறார்கள். சந்தானத்துக்காக படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் ஒரு காமெடி என்டர்டெயினராக இருக்கும். ஆனால், புதுசா எதுவுமே இல்லாத பழைய கால சுத்தல். சந்தானம் நடிச்சதாலும், சில குபீர் காமெடிகளாலும் மட்டுமே படம் தப்பிக்குது.

சிம்பு இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளரா அறிமுகமாகியிருக்கார். 'அஞ்சு ரூவா காக்கா பிரியாணி துன்னா காக்கா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும்?' எனும் டயலாக் தான் அவரது பின்னணி இசை கேட்கும்போது திடீரென நினைவுக்கு வந்து தொலைக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் தொடங்கி சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் அம்மா உஷா டி.ராஜேந்தர் உட்பட பலரை பாட வெச்சுருக்கார் சிம்பு. 'காதல் தேவதை' பாட்டு மட்டும் கொஞ்சம் சுமார். மற்ற எந்தப் பாடலும் நினைவில் நிற்கவே இல்லை. அறிமுகப்படுத்துன சந்தானத்துக்கு நல்லா செஞ்சு விட்டுட்டீங்க தெய்வமே!

படத்தில் தனக்கு வராத ஆக்‌ஷனை எல்லாம் வம்புடியா பெர்ஃபார்ம் பண்ணின சந்தானத்துக்கு அடுத்து, ரொம்ப கஷ்டப்பட்டவர் விடிவி கணேஷ் தான். தனக்கு நல்ல நாள்லயே வரவே வராத பிரபுதேவா டான்ஸ் ஸ்டெப்லாம் கஷ்டப்பட்டு பண்ணிருக்கார். பாவம், படத்தோட புரொடியூசர் அவர்தான்!

 
ஆரோக்கியம்