Back
Home » திரைவிமர்சனம்
காலா - படம் எப்படி இருக்கு? ஒன் இந்தியா விமர்சனம்
Oneindia | 7th Jun, 2018 01:54 PM

சென்னை: பாட்டாளி மக்களின் 'நிலம் எங்கள் உரிமை' கோரிக்கையை, உலகுக்கு உணர்வுப்பூர்வமாக உரக்க சொல்கிறது காலா.

நடிகர்கள் - ரஜினிகாந்த், நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி,சம்பத் ராஜ், சாயாஜி சிண்டே, அஞ்சலி பாட்டில், திலீபன், மணிகன்டன், பங்கச் திரிப்பதி, ரவி காலே, ரமேஷ் திலக், அருள் தாஸ், அரவிந்த் ஆகாஷ், சாக்ஷி அகர்வால், அருந்ததி, சுகன்யா, நிதிஷ்,

இயக்கம் - பா.ரஞ்சித், ஒளிப்பதிவு - ஜி.முரளி,

இசை - சந்தோஷ் நாராயணன்,

படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத்,

கலை - டி.ராமலிங்கம், ஒலிக்கலவை - ஆண்டனி பிஜே ரூபன்,

ஸ்டன்ட் - திலீப் சுப்பராயன்

மும்பையின் மையப்பகுதியான தாராவியில் வாழும் தமிழர்களை காக்கும் காவல் வீரன் காலா (ரஜினி). மனைவி செல்வி (ஈஸ்வரி ராவ்), நான்கு மகன்கள், பேரக்குழந்தைகள் என கூட்டுக் குடும்பமாக தாராவியில் வாழ்ந்து வருகிறார். மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் கட்சியின் தலைவரான ஹரிதேவ் (நானா படேகர்) தாராவியை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், குடிசைகளை அகற்றிவிட்டு நவீன வீடுகள் கட்டித்தரும் 'தூய்மை மும்பை' திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார். இதனை செயல்படுத்த தனது கட்சி பிரமுகரான விஷ்ணு பாயை (சம்பத் ராஜ்) நியமிக்கிறார். ஆனால் அதனை செயல்படுத்த காலா தடையாக இருக்கிறார். தமது படை தளபதியாக இருக்கும் இரண்டாவது மகன் செல்வத்தைக் கொண்டு (திலிபன்) அடாவடியாக எதிரிகளை காலா அடக்குகிறார். மறுபுறம் அடிதடியை விரும்பாத இளைய மகன் லெனின்(மணிகன்டன்), அஞ்சலி பாட்டிலுடன் இணைந்து மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தியும், விழிப்புணர்வை ஏற்படுத்தியும், தாராவியை சொர்க்கமாக்கும் வேலையை செய்கிறார்.

இதற்கிடையே தன்னார்வ தொண்டரான ரஜினியின் முன்னாள் காதலி சரினா (ஹூமா குரேஷி), தான் பிறந்த இடமான தாராவிக்கு மீண்டும் வருகிறார். ரஜினியின் மகன் லெனினுடன் இணைந்து தாராவியின் முகத்தை மாற்றும் வேலையில் ஈடுபடுகிறார். காலாவும், சரினாவும் மலரும் நினைவுகளில் மூழ்க, மனைவி செல்வி மனக்குழப்பத்துடன் கோபம் கொள்கிறார்.

இந்நிலையில், காலாவை போட்டுத்தள்ள சம்பத் ராஜ் போடும் ஸ்கெட்சில், அப்பாவி இளைஞன் ஒருவன் கொல்லப்படுகிறான். இதற்கு பழி தீர்க்கிறார் காலா. இதையடுத்து, மெயின் வில்லன் ஹரிதேவ் நேரடியாக களத்தில் இறங்குகிறார். காலாவும், ஹரிதேவும் நேரடி மோதலில் ஈடுபட, கடைசியில் ரஜினி எப்படி தாராவியை காப்பாற்றுகிறார் என்பது மீதிக்கதை.

நடிகர்கள்..

ரஜினி - காலாவில் ரஜினியின் நடிப்பு வேற லெவல். பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுவது, மனைவியிடம் பம்மி விழிப்பது, சரினாவை பார்த்ததும் காதலில் மூழ்குவது, எதிரிகளை கண்களாலேயே அடக்குவது என கிளாசாக மிரட்டி இருக்கிறார். கபாலியை போல், ரஜினிக்குள் இருக்குள் ஒரு நல்ல நடிகனை அழகாக வெளிகாட்டி இருக்கிறார். குறிப்பாக எந்த ஈகோவும் பார்க்காமல், இயக்குனரின் நடிகராக நடித்துக் கொடுத்திருக்கிறார்.

நானா படகேர் - ஒரு அரசியல் கட்சி தலைவராகவே திரையில் அப்படியே அச்சு அசலாக வாழ்ந்திருக்கிறார். தன்னை விட ஒரு பவர் புல்லான வில்லன் காலாவுக்கு இருக்க முடியாது என நிரூபித்திருக்கிறார். இரண்டாம் பாதி முழுவதையும் ஆக்கிரமித்துக்கொள்கிறார்.

ஈஸ்வரி ராவ் - இவர் தான் காலா படமே என சொல்லும் அளவுக்கு, காட்சிக்கு காட்சி ஸ்கோர் செய்கிறார். கணவனின் முன்னாள் காதலியை பார்த்து பொறாமைபடுவது, கணவனிடம் சண்டைபோடுவது போல், அவர் இசைவுக்கு ஏற்ற மாதிரி நடந்துகொள்வது என செல்விக்கு உயிர்கொடுத்திருக்கிறார். ஒரு நல்ல ரீ-என்ட்ரி ஈஸ்வரி ராவுக்கு. அழகாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஹூமா குரேஷி - காலாவின் காதலியாக உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மிகவும் சிரமப்பட்டு, அழகாக தமிழ் பேசி நடித்திருக்கிறார். உதடசைவு அவ்வளவு கட்சிதம்.

சமுத்திரக்கனி - வள்ளியப்பனாக காலாவுக்கு துணை நிற்கும் அருமையான பாத்திரம். வழக்கம் போல் பிசிரில்லாமல் நடித்திருக்கிறார். எப்போதும் போதையில் இருக்கும் ஒருவனை அப்படியே திரையில் காட்டியிருக்கிறார்.

திலீபன்- வத்திக்குச்சி திலீபனா இது என அசத்தியிருக்கிறார் திலீபன். காலாவின் படைதளபதியாக, முரட்டுக்காளையாக திமிறியிருக்கிறார்.

மணிகன்டன் - விக்ரம் வேதா மணிகன்டனுக்கு இந்த படம், நிச்சயமாக நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திகொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சூப்பர் மணிகன்டன்.

அஞ்சலி பாட்டில் - ஒரு போராளி மராட்டி பெண்ணை பக்காவாக திரையில் கொண்டு வந்திருக்கிறார். அப்ளாஸ் அஞ்சலி.

இவர்களை தவிர படத்தில் நடித்துள்ள அனைவருமே தங்கள் கடைமையை சரியாக செய்திருக்கிறார்கள்.

இயக்கம்...

பா.ரஞ்சித்துக்கு ரஜினியுடன் இது இரண்டாவது படம் என்பதால், அவரை சரியாக புரிந்துகொண்டு நல்ல கதை களத்தை தேர்வு செய்து பாத்திரங்களை படைத்திருக்கிறார். அறுபது வயதான ஒரு வீரன், நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பான் என்பதை அழகாக காட்சிபடுத்தி இருக்கிறார். உழைக்கும் மக்களுக்குகே நிலம் சொந்தம் என்ற கருத்தை, ரஜினியை வைத்து வெளியுலகுக்கு உணர்த்த முற்பட்டிருக்கிறார். அதற்கு ஏற்ற வகையில் வசனங்களும் மிக உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. மெரினா புரட்சி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ரஜினியின் சமூக விரோதிகள் கருத்து உள்ளிட்டவைகளுக்கு படத்தில் பதில் இருக்கிறது.

அதேபோல ரஜினி, ஹூமா குரேஷி காதல் பிளாஷ் பேக் காட்சிகளை, கிராப்பிக்சில் சொன்ன விதமும் பாராட்டுக்குரியது.

முதல் பாதி காதல், சென்டிமென்ட் ஆக்ஷன் என விறுவிறுப்பாக நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். அதுமட்டுமல்லாமல், வில்லன் கதாபாத்திரம் ஹீரோவைவிட செம வெயிட்டாக இருக்கிறது. அதை சமன் செய்திருந்தால், ரஜினி ரசிகர்களுக்கு பக்கா விருந்தாக இருந்திருக்கும்.

மற்றவை...

ஜி.முரளியின் ஒளிப்பதிவும், ராமலிங்கத்தின் கலை வேலைபாடுகளும் அபாரம். மும்பை தாரவியை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் சுமாராகவே இருக்கிறது. காட்சியின் வேகத்தையும், விறுவிறுப்பையும் கூட்டும் வகையில் பின்னணி இசை அமைக்கப்படவில்லையோ என தோன்றுகிறது.

மற்றபடி காலா சொல்ல வரும் செய்தி இந்த உலகுக்கு உரக்க சொல்லப்பட வேண்டும். அந்த வகையில் காலா, ரஜினி பாதி, ரஞ்சித் பாதி கலந்து செய்த கலவை.

   
 
ஆரோக்கியம்