Back
Home » திரைவிமர்சனம்
கோலிசோடா 2 - படம் எப்படி இருக்கு? ஒன்இந்தியா விமர்சனம்!
Oneindia | 24th Jul, 2018 03:49 PM

சென்னை: வலியோருக்கு எதிராக பொங்கும் பாதிக்கப்பட்ட எளியோர், அவர்களை எப்படித் திருப்பி அடிக்கின்றனர் என்பது தான் கோலிசோடா 2வின் கதைக்களம்.

நடிகர்கள் - சமுத்திரக்கனி, கௌதவ் வாசுதேவ் மேனன், பாரத் சீனி, வினோத், இசக்கி பரத், , சுபிக்‌ஷா, கிரிஷா, ரக்‌ஷிதா மற்றும் பலர்

தயாரிப்பு - ரப் நோட் புரொடக்சன்ஸ்

இயக்கம், ஒளிப்பதிவு - விஜய் மில்டன்

படத்தொகுப்பு : தீபக்

இசை - அச்சு ராஜமணி

கோலிசோடா முதல் பாகத்தில் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் சில சிறுவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி பேசிய இயக்குநர் விஜய் மில்டன், தற்போது கோலிசோடா 2வில் வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு வர முயற்சி செய்யும் சில இளைஞர்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் போன்றவற்றைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

படத்தின் தொடக்கத்திலேயே சமுத்திரக்கனி கைது செய்யப்படுகிறார். கௌதம்மேனன் விசாரணையில், அவர் மூன்று இளைஞர்களைக் குறித்து பேசுகிறார். அந்த மூன்று இளைஞர்களுமே வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என விரும்புகிறவர்கள். ஒருவர் ஆட்டோ டிரைவர். அவர் கார் வாங்க வேண்டும் என விரும்புகிறார். மற்றொருவர் ரவுடியிடம் வேலை பார்ப்பவர். அவரிடம் இருந்து விலகி வேறு நல்ல வேலைக்குச் செல்ல விரும்புகிறார். மூன்றாவது நபர் பேஸ்கட்பால் பிளேயர். இவர் ஒரு கோப்பையை வென்று விட ஆசைப் படுகிறார். அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் கனி உதவுகிறார்.

ஆனால், இவர்களது வாழ்க்கையில் விதி விளையாடுகிறது. அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்படும் இந்த மூன்று எளியவர்கள், எப்படி அதில் போராடி வெற்றி பெறுகிறார்கள் என்பதே கதைக்களம்.

மூன்று இளைஞர்களின் கனவுகளை சொன்ன விதம், அவர்கள் எப்படி ஒரு புள்ளியில் சந்தித்து பிறகு எப்படி அது சிதைகின்றது எனக் காட்டுவது, மூன்று வில்லன்களை ஒரே ஜாதி என்ற புள்ளியில் இணைப்பது என திரைக்கதை அமைத்த விதத்தைப் பாராட்டலாம். ஆனால், மூன்று இளைஞர்கள் 200, 300 பேரை அடித்து, உதைத்து பந்தாடுவது எல்லாம் நம்பத்தகுந்த விதத்தில் இல்லை.

படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தவர்களில் முக்கால்வாசி பேர் புதுமுகங்கள். ஆனால் அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அவர்கள் தவிர சமுத்திரகனி, கௌதம் மேனன், சரவணன் சுப்பையா, செம்பன் வினோத் ஜோஸ் என நான்கு இயக்குநர்களின் நடிப்பிற்கும் கைதட்டல் தரலாம். ஒரு சில காட்சிகளே ஆனாலும், கௌதம்மேனனின் குரல் நம் மனதிற்குள் பாய்கிறது. ஆனால், செம்பன் வினோத் ஜோஸின் பின்னணிக் குரலும், சமுத்திரகனியின் ஒட்டுத்தாடியும் மட்டும் கொஞ்சம் உறுத்துகிறது. ரோகிணி மற்றும் ரேகா கதாபாத்திரங்களை இன்னும் கொஞ்சம் நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள வகையில் அமைத்திருக்கலாம்.

'ஏழ்மையை ஒழிக்குறேன்னு ஏழைகளையே ஒழிக்குறாய்ங்க' போன்ற நறுக் வசனங்கள் சூப்பர். பாடல்களைவிட பின்னணியில் இசை நன்றாக இருக்கிறது. இயக்கத்தோடு, ஒளிப்பதிவையும் விஜய் மில்டனே செய்திருப்பதால், மனதில் நினைத்ததை காட்சியில் கொண்டு வந்திருக்கிறார். தீபக்கின் படத்தொகுப்பு படத்தின் வேகத்தை கூட்டியிருக்கிறது. சுப்ரீம் சுந்தரின் சண்டைக்காட்சிகளில் கொஞ்சம் செயற்கைத்தனம் மேலோங்குகிறது. அதனை தவிர்த்திருக்கலாம். யதார்த்தமான கதைக்களத்தில் செயற்கையான மிகைப்படுத்தப்பட்ட சண்டைக்காட்சி பொருந்தவில்லை.

விஜய் மில்டனுக்கு, கோலிசோடாவைப் போலவே இப்படமும் சொல்லிக் கொள்ளும்படி இருக்கிறது. ஆனால், மொத்தத்தில் முதல் பாகத்தில் இருந்த தெளிவு, இரண்டாம் பாகத்தில் மிஸ்ஸிங். அதையும் கவனித்து திரைக்கதையில் வேகம் கூட்டியிருந்தால், நிச்சயம் இந்த கோலிசோடாவும் பொங்கியிருக்கும்.

   
 
ஆரோக்கியம்