Back
Home » திரைவிமர்சனம்
ஆந்திரா மெஸ் - படம் எப்படி இருக்கு? - ஒன்இந்தியா விமர்சனம்
Oneindia | 19th Jul, 2018 07:03 PM

சென்னை: நான்கு திருடர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கனை தொகுத்து காமெடி விருந்து படைத்திருக்கிறது ஆந்திரா மெஸ்.

நடிகர்கள்- ராஜ்பரத், தேஜஸ்வனி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா, மதி, பாலாஜி, வினோத், அமர், சையத் மற்றும் பலர், தயாரிப்பு - ஷோபோட் ஸ்டுடியோஸ் நிர்மல் கே.பாலா, இயக்கம் - ஜெய், ஒளிப்பதிவு - முகேஷ்.ஜி, இசை - பிரசாத் பிள்ளை, படத்தொகுப்பு - பிரபாகர், கலை - செந்தில் ராகவன், ஆடை வடிவமைப்பு - தாட்ஷா பிள்ளை, பாடல்கள் - குட்டி ரேவதி, மோகன்ராஜன், சண்டை பயிற்சி - திலீப் சுப்பராயன்

கதை சுருக்கம் : வரது(ஏ.பி.ஸ்ரீதர்), ரத்னா(ராஜ்பரத்), , ரிச்சி(மதி), சேது (பாலாஜி) ஆகிய நான்கு பேரும் திருடர்கள். ரவுடி தேவராஜிடம் (வினோத்) வேலை செய்கிறார்கள். நடுதர வயது வரது தேவராஜிடம் பெற்ற கடனுக்காக, கட்டாயத்தின் பேரிலேயே அவரிடம் வேலை செய்து வருகிறார். பணம் தடையாக இருப்பதால், அவரது காதல் முறிகிறது. இதனால் வரது வேதனையில் தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், முக்கியமான அசைன்மென்ட் ஒன்றை அவரிடம், தருகிறார் பாஸ் தேவராஜ்.

ரத்னா, ரிச்சி, சேது, என சகக்கூட்டாளிகளுடன் வரது அந்த அசைமென்ட்டை மேற்கொள்ளும் போது, அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் அடிக்கிறுது. இதையடுத்து, நாள்வரும் இரத்தினகிரிக்கு தப்பி செல்கிறார்கள். அங்கு வாழும் முன்னாள் ஜமிந்தாரின் (அமரேந்திரன்)வீட்டில் அடைக்கலமாகிறார்கள். ஜமிந்தாரின் மனைவி பாலா (தேஜஸ்வனி) மீது ரத்னாவுக்கு (ராஜ்பரத்) ஈர்ப்பு ஏற்படுகிறுது. பாலாவுக்கும் ஈர்ப்பு ஏற்பட, இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தும் தருணத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்தவேளையில், அரசி (பூஜா தேவரியா) என்ட்ரியாகிறார். ஒருபக்கம் வில்லனும் இவர்களை தேடி இரத்தினகிரி வருகிறார். ராஜ்பரத் - தேஜஸ்வனி காதல் என்ன ஆகிறது? வில்லன் தேவராஜிடம் இருந்து இவர்கள் தப்பித்து எவ்வளவு நாட்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்பது 'காமெடி' கலக்காத மீதிக்கதை.

பிளாக் ஹூமர் பாணியில் தத்துவார்த்மாக கதை சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெய். பிளாக் ஹூமர் என்பது படத்தின் அறிவிப்பு பலகையில் மட்டுமே இருக்கிறது. ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிப்பு வருகிறது. படம் பார்க்க நிறைய பொறுமை தேவைபடுகிறுது. எல்லா காட்சிகளுமே மிக மெதுவாக நகர்கிறது.

முக்கிய வில்லன் காமெடியனா இல்லை சீரியஸ் கேரக்டரா என்பது கடைசி வரை விளங்கவில்லை. பாலா - ரத்னா காதல் காட்சிகள் அருமை. பாலாவாக வரும் தேஜஸ்வனியின் கண்கள் பார்வையாளர்களை கிக்கேற்றுகிறது.

'இது காமம் இல்ல காதல்' என ரத்னாவிடம் பாலா சொல்லும் இந்த வசனத்தின் மூலம் செக்ஸ் தான் காதல் என்பதை அழுத்தமாக சொல்கிறார் இயக்குனர் ஜெய். சில வசனங்கள் தத்துவார்த்தமாக இருக்கிறுது.அதே வேளையில் டபுள் மீனிங் டயலாக்குகளும் அதிகம்.

ராஜ்பரத், தேஜஸ்வனி, இருவரும் தங்கள் பாத்திரங்களை சரியாக செய்திருக்கிறார்கள். இந்த படத்தின் மூலம் நடிக்க வந்திருக்கும் ஏ.பி.ஸ்ரீதர், வரது கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார். பூஜா தேவரியாவுக்கு படத்தில் அவ்வளவு ஸ்கோப் இல்லை. ஆனால் கிடைத்த வாய்ப்பில் சிக்சர் அடித்திருக்கிறார். ஆனால் எந்த கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை. பாத்திரப்படைப்பு மிகமோசம்.

முகேஷ்.ஜியின் ஒளிப்பதிவு காட்சிகளை கண்குளிர காட்டியிருக்கிறது. மலை, கடல், சாலை, பறவை, வானம், ஆட்டோ, பழைய ஜமின் வீடு என அனைத்தையுமே ரசிக்கும்படியாக எடுத்திருக்கிறார். பிரசாந்த் பிள்ளையின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

பிரபாகரின் கத்திரி இன்னும் ஷார்ப்பாக இருந்திருக்க வேண்டும். அதுவும் வில்லன் தேவராஜ் கொட்டு வாங்குவது உள்ளிட்ட பல காட்சிகளை ரிப்பீட் செய்து படுத்தியெடுக்கிறார் படத்தொகுப்பாளர் பிரபாகர்.

காதல் முறிவால் வரது எடுக்கும் முடிவு, அவர்களை கொள்ளைக்காரர்களாக ஓடவிடுகிறுது. ஆனால் காதல் கைக்கூடியதால் ரத்னா எடுக்கும் முடிவு, அவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துகிறது. ஆதிக்கவாதியாகவே இருந்தாலும் ஆண்கள் எப்போதுமே வீக்கர் செக்ஸ் தான் என்கிறது ஆந்திரா மெஸ் படம். படத்துக்கு எதற்கு ஆந்திரா மெஸ் என பெயர் வைத்தார் இயக்குனர் என்பது தான் கடைசி வரை புரியவில்லை.

இன்னும் கொஞ்சம் காரம், உப்பு, புளிப்பு எல்லாம் சேர்த்திருந்தால், ஆந்திராவுக்கே சென்று புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி கிடைத்திருக்கும்.

   
 
ஆரோக்கியம்