Back
Home » திரைவிமர்சனம்
அசுரவதம் - படம் எப்படி இருக்கு? ஒன்இந்தியா விமர்சனம்!
Oneindia | 24th Jul, 2018 12:01 PM

சென்னை: குடும்பத்தை சீரழித்த அரக்கனை துடிக்க துடிக்க வதம் செய்யும் நாயகனின் கதையே அசுரவதம்.

கதை சுருக்கம் - படத்தின் முதல் காட்சியிலேயே வில்லன் சமயனுக்கு (வசுமித்ரா) அவரது மாமனாரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வருகிறது. தனது மகளை அழைத்து செல்லும்படி மிரட்டுகிறார் மாமனார். அதைத்தொடர்ந்து ஒரு மர்ம நம்பரில் இருந்து பல அழைப்புகள் வருகிறது. ஆனால் அவர் போனை எடுக்கும் முன்பே, அழைப்பு துண்டிக்கப்படுகிறது. இறுதியில் போனில் பேசும் மர்ம நபர், இன்னும் ஒருவாரத்தில் சமயனை கொல்லப்போவதாக மிரட்டல் விடுகிறார். அடுத்தடுத்த காட்சிகளில் போனில் மிரட்டியது சசிகுமார் என தெரிய வருகிறது.

சசிகுமார் பின்தொடர்ந்துகொண்டே இருப்பதால், வில்லன் சமயனுக்கு பயம் தொற்றிக் கொள்கிறது. அவரது நண்பர்களான நமோ நாராயணா, ராஜசிம்மன், ஸ்ரீஜித் ரவி உள்ளிட்டோரை துணைக்கு அழைக்கிறார். ஆனால் சசிகுமாரின் வேகத்துக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. பல்வேறு விதிமாக வில்லனை சித்ரவதை செய்கிறார் சசிகுமார். இதனால் சோர்ந்து போகும் வில்லன் சமயன், சசிகுமார் யார்? தன்னை ஏன் கொல்ல நினைக்கிறார் என்பது புரியாமல் தவிக்கிறார். இந்த கேள்விக்கு விடை தேடி பயணிக்கிறது மீதிக்கதை.

'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படத்துக்கு பிறகு, இயக்குனர் மருதுபாண்டியின் அடுத்தப்படம் இது. வலுவான மற்றும் அவசியமான கதை களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை பதற்றத்தில் மூழ்கடிக்கிறார். ஆனால் இடைவேளைக்கு பிறகும் அந்த சஸ்பென்சை நீட்டிப்பதும், ஒரு வில்லனையே ஹீரோ துரத்துவதும் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது.

மேக்கிங்கில் கவனம் செலுத்திய இயக்குனர் திரைக்கதையையும் வலுவாக அமைத்திருக்கலாம். சசிகுமாரின் மனைவி நந்திதாவின் அறிமுகக்காட்சியின் மூலம் கதையை எளிதாக யூகிக்க முடிகிறது.

சுப்பிரமணியபுரம், நாடோடிகள் படத்தில் தொடங்கி கிடாரி வரை நாம் பார்த்த அதே சசிகுமார். சுவற்றில் ஒற்றைக்காலை வைத்து சாய்ந்து நிற்பது, சிகரெட்டை ஊதித்தள்ளுவது என மீண்டும் மீண்டும் அதே சசிகுமார். ஒரே ஆறதல், 'ஏய்ய்ய்ய் ஊய்ய்ய்' என கத்தி அலப்பறையை கூட்டாமல், சைலண்டாகவே டெரர் காட்டுகிறார். காதலின் பின்னால் சுற்றாமல், கணவனாக, தந்தையாக இந்த படத்தில் மாறியிருக்கிறார்.

ஹீரோயின் நந்திதாவுக்கு ஒரு சில காட்சிகள் மட்டுமே. அவரால் முடிந்தவரை தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.

குட்டிப்பாப்பா அவிகா சூப்பர். வில்லனாக அறிமுகமாகியிருக்கும், வசுமித்ரா சினிமாவுக்கு நல்ல வரவு.

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரின் உழைப்பு அபாரம். முதல் காட்சியில் இருந்து இறுதிவரை நேர்த்தியான காட்சிகளை தந்து, திரில்லிங் ப்பீலிங் தந்திருக்கிறார். கோவிந்த் மேனனின் இசையில் வரும் சோகப்படால் கேட்கும் ரகம்.

நல்ல கதைக்கு சரியான திரைக்கதை அமைக்காததால் 'அசுரவதம்', பார்வையாளர்களை வதம் செய்துவிடுகிறது.

   
 
ஆரோக்கியம்