Back
Home » சிறப்பு பகுதி
பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும் - தொழில் நண்பர்கள்
Oneindia | 2nd Jul, 2018 02:37 PM

- கவிஞர் மகுடேசுவரன்

கண்ணதாசன் தம்மைப் பற்றிய மதிப்பீட்டில் தெளிவாக இருந்திருக்கிறார் என்று பார்த்தோம். தாம் முதன்முதலாக எழுதிய பாடல் அப்படியொன்றும் சிறப்பானதில்லை என்றாலும் அதைப் பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டதன் வழியாக இயக்குநர் கே. இராம்நாத் தமக்கு வாழ்வளித்தார் என்றே குறிப்பிடுகிறார். அந்த நன்றியுணர்ச்சியால் கோயம்புத்தூர் இருப்பூர்தி நிலையத்திற்கு எதிரே குடியிருந்த இராம்நாத்தின் வீட்டுக்குச் சென்று நன்றியுணர்ச்சியோடு கைப்பற்றி நின்றிருக்கிறார். "நீங்கள் எழுதியது உண்மையிலேயே நன்றாகத்தான் இருந்தது. நன்றாக இருந்தது என்று சொன்னதுதான் நான் செய்தது…" என்று அவரை அமர்த்தியார் கே. இராம்நாத்.

முதலில் எழுதப்பட்ட பாடல்கள் ஏற்கப்பட்டதால் ஊக்கம்பெற்று அடுத்தடுத்த வாய்ப்புகளில் நல்ல பாடல்களை எழுத முடிந்தது என்கிறார் கண்ணதாசன். ஐந்தாயிரத்துக்கும் மிகுதியான திரைப்பாடல்களால் கண்ணதாசன் நினைவுகொள்ளப்படுகிறார் என்றால் அதற்கு மறுமுனையில் இருநூற்றுச் சொச்சம் பாடல்களை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் நினைக்கப்படுகிறார். இருவரும் ஒரே பண்டத்தைக் கடைவிரித்தவர்கள் என்றாலும் அவர்களுக்கிடையே துளியளவுகூட போட்டியுணர்ச்சியோ எதிருணர்ச்சியோ இருக்கவில்லை. கண்ணதாசனின் இந்தப் பண்பினைப் பிற்காலத்தில் எதிர்க்கடை விரித்துப் பாட்டெழுதிய வாலியும் நெகிழ்ந்து குறிப்பிடுகிறார்.

கண்ணதாசன் பாடல் எழுதத் தொடங்கிய பிறகும் முதற்பத்தாண்டுகள் கதை திரைக்கதை உரையாடல் எழுதுவதிலும் திரைப்படங்கள் எடுப்பதிலும் முனைந்து ஈடுபட்டார். கண்ணதாசனுக்கு முன்பாகவே பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் முன்னிலை பெற்ற பாடலாசிரியராகிவிட்டார். பட்டுக்கோட்டையின் பாடல்கள் நாட்டுப்புறத் தன்மையுள்ளவை என்றுதான் பலரும் கருதுகின்றனர். ஓர் இசைப்பாடலில் பயிலும் சொற்கள் இவ்வளவுக்கு அடர்த்தியாய் இருக்க வேண்டும் என்று ஓர் அளவுகோல் வைத்தால் அதில் பட்டுக்கோட்டை முன்னிலை பெறுவார். சொல்வளத்தால் ஆன கவிதைக் கருத்துகள் அவருடையவை.

"நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்

நாட்டைக் கெடுத்ததுடன் தானுங் கெட்டார் - சிலர்

அல்லும் பகலும் வெறுங் கல்லாய் இருந்துவிட்டு

அதிர்ஷ்டம் இல்லை என்று அலுத்துக்கொண்டார்."

மேற்காணும் வரிகளைச் சற்றே பாருங்கள். இரண்டே வரிகளுக்கு இடம்தரத்தக்க ஒரு மெட்டில் எத்தனை அருமையான சொற்களைப் பொருத்தி ஆள்கிறார் அவர் ! அதுதான் பட்டுக்கோட்டையின் வலிமை. இலகுவகைச் சொற்றொடரில் தொடர்ச்சியான நற்சொற்களைக் கோத்து கருத்துகளை அமைப்பது.

பட்டுக்கோட்டையின் பாடலைக் கேட்டதும் அதன் சொல்லாட்சித் திறத்தால் உணர்த்தப்படும் பொருளழகுக்கு உடனே மயங்கிவிடுவோம். வெறும் இருநூற்றுச் சொச்சம் பாடல்களை எழுதிய நிலையில் தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத பாடலாசிரியர் ஆனார் என்றால் பட்டுக்கோட்டையின் ஆற்றல் எளிமையானதாகவா இருக்க முடியும் ? ஓய்வான வேளையில் "வாடிக்கை மறந்ததும் ஏனோ" என்ற பாடலைப் பாடிப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருபாடலில் இத்தனை நற்சொற்களை ஆள முடியுமா என்ற வியப்பு ஏற்பட்டது. தனிக்கவிதையாக எழுதப்படுபவற்றில்கூட உள்ளீடில்லாத பல சொற்களைக் கடக்க நேர்கிறது. ஓர் இசைப்பாடலில் அவ்வாறு ஆள்வது எளிதானது அன்று.

"காந்தமோ இது கண்ணொளிதானோ

காதல் நதியில் நீந்திடும் மீனோ

கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ

பொறுமை இழந்திடலாமோ

பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ

நான் கருங்கல்லுச் சிலையோ

காதல் எனக்கில்லையோ

வரம்பு மீறுதல் முறையோ…"

என்னும் பட்டுக்கோட்டையின் வரிகளைப் பாடி முடித்ததும் சொல்வளத்தால் சொக்கிய நிலையை அடைந்தேன்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வரகவியைப்போல் பாடல் வரிகளைச் சொல்லும் திறமை பெற்றிருந்தார். "கொக்கரக் கொக்கரக்கோ சேவலே… கொந்தளிக்கும் நெஞ்சிலே கொண்டிருக்கும் அன்பிலே அக்கறை காட்டினால் தேவலே… குப்பையைக் கிளறிவிடும் கோழியே… கொண்டிருக்கும் அன்பிலே ரெண்டும் உண்டு என்றுநீ கண்டதுமில்லையோ வாழ்விலே…" என்று பாடலுக்கு வேண்டிய பதங்கள் வழுக்கி வந்து விழுகின்றன.

பாட்டெழுதியதற்குத் தரவேண்டிய தொகைமீதத்தை வாங்குவதற்காக படமுதலாளி அலுவலகத்துக்குச் சென்றபோது அவர் வெளியே நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டாராம். உடனே சினந்து அவரெழுதிய வரிகள் அதற்குக் கட்டியம் கூறுகின்றன.

"தாயால் பிறந்தேன்

தமிழால் வளர்ந்தேன்

நாயே நேற்றுன்னை

நடுவீதியில் சந்தித்தேன்

நீயார் என்னை

நில்லென்று சொல்ல…" என்று ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக்கொடுத்துவிட்டு வந்துவிட்டாராம். பாட்டுக் கட்டுபவரின் சினச்சொல்லைப் பெறலாமோ ? புலவன் என்பவன் கலைமகள் நடமாடும் நாவினன். பின்னாடியே ஓடிவந்த முதலாளி பணத்தைக்கொடுத்துப் பொறுத்தருளக் கேட்டாராம்.

கண்ணதாசன் படமெடுத்துக்கொண்டிருந்த வேளையில் பட்டுக்கோட்டையே முதன்மைப் பாடலாசிரியர். பட்டுக்கோட்டைக்கும் கண்ணதாசனுக்குமிடையே மதிப்புடைய நட்பும் இருந்திருக்கிறது. இலக்கியப் பாங்குடைய சூழலுக்குப் பாட்டெழுத வேண்டுமென்றால் "கண்ணதாசனால்தான் இது முடியும், அவரை அழையுங்கள்" என்று பட்டுக்கோட்டையார் கிளம்பிவிடுவாராம். நாட்டுப்புறத்தன்மையுள்ள பாடல் வேண்டுமென்றால் "இப்பாடலுக்குப் பட்டுக்கோட்டையாரை அழைத்துக்கொள்ளுங்களேன்…" என்று கண்ணதாசனும் பரிந்துரைப்பாராம். அவ்வாறு இருவரும் சொன்ன பிறகு "நீ போனால் போ… நான் வேறாளை எழுதச் சொல்லுவேன்…" என்று இன்று கூறுவதைப்போல் அக்காலத்தில் கூறமாட்டார்கள். கவிஞரே சொல்லிவிட்டார், அப்படியே செய்வோம் என்று அவர்களுடைய வாய்மொழியைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுவார்கள்.

பட்டுக்கோட்டைக்குப் பெரிதாய் நோயென்று ஏதுமில்லை. மூக்குக்குள் ஏற்பட்ட தசைவளர்ச்சித் தொந்தரவு. அதனைப் போக்கிக்கொள்ள சிறியதாய் ஓர் அறுவை மருத்துவம் பார்க்க வேண்டியிருந்தது. அந்த மருத்துவத்துக்கு முன்பின் பட்டறிவில்லாத மருத்துவர் ஒருவரை நாடியதுதான் பட்டுக்கோட்டையார் செய்த தவறு. மூக்கு அறுவையின்போது மூளைக்குச் செல்லும் நரம்பொன்றை அசைத்து இழுத்துவிட்டாராம் அந்த மருத்துவர். மூளைக்குச் செல்லும் அந்த நரம்பில் சீழ்தோன்றிவிட்டது. அந்தச் சீழ் நேரடியாக மூளையைத் தாக்கியதால்தான் பட்டுக்கோட்டையார் இறந்தார். அவருடைய இறப்பு யாரும் எதிர்பாராதது. பட்டுக்கோட்டையின் இறப்புக்குப் பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் பொறுப்பு கண்ணதாசனை வந்தடைந்தது.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதாம் ஆண்டு ஏப்ரல் பதின்மூன்றாம் நாளில் பிறந்த பட்டுக்கோட்டையார் அக்டோபர் ஒன்பதாம் நாள் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்பதாம் ஆண்டில் இறந்தார். வெறும் இருபத்தொன்பது ஆண்டுகளே அவர் வாழ்ந்தார். இன்றைக்குத் திரையுலகில் முதல் வாய்ப்பு பெறுகின்ற அகவை இஃது. ஆனால், அதற்குள்ளாகவே அவரெழுதிய சில நூற்றுப் பாடல்களில் மறையாத சுவடுகளைப் பதித்துச் சென்றுவிட்டார்.

   
 
ஆரோக்கியம்