Back
Home » பேட்டி
'பிக்பாஸ்' ஐஸ்வர்யாவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'சோம பான ரூப சுந்தரன்'!
Oneindia | 5th Jul, 2018 01:53 PM

சென்னை: மதுவால் ஏற்படும் தீமைகள் பற்றி எடுத்துக் கூறும் படமாக 'சோம பான ரூப சுந்தரன்' படம் உருவாகி வருவதாக அதன் இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பையா, பீச்சாங்கை உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் பொன்முடி. இவர் 'சோமபான ரூப சுந்தரன்' படம் மூலம் இயக்குநர் ஆகியுள்ளார். இப்படத்தில் மெர்லின் படத்தில் நடித்த விஷ்ணுப்பிரியன் நாயகனாகவும், பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

மதுவால் இளைஞர் ஒருவர் வாழ்வில் சந்திக்கும் பாதிப்புகள் தான் கதைக்களம். நாயகி ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டில் குடியேறிவிட்டதால், மீதமுள்ள அவரது காட்சிகளைப் படமாக்க படக்குழு காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சோமபான ரூப சுந்தரன் படம் குறித்து ஒன் இந்தியாவிற்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியிருப்பதாவது:-

'சோம பான ரூப சுந்தரன்'... இந்த தலைப்பை எப்படி பிடிச்சிங்க...

இந்த படம் மதுவால் ஏற்படும் தீங்கை பற்றியது. தமிழ்நாட்டில் குடிப்பழக்கம் காரணமாக ஆண்களுக்கு மலட்டுதன்மை ஏற்படுகிறது. இதை பற்றி தான் இந்த படம் பேசுகிறது. அதனால அது தொடர்பாக தலைப்பு வைக்கணும்னு யோசிச்சப்ப முதல்ல 'உயர்திரு.குடிமகன்'னு வெச்சோம். ஆன அதுக்கு தயாரிப்பாளர் சங்கத்துல அனுமதி கொடுக்கல. அப்புறம் தமிழ்குடிமகன் என்கிற தலைப்பை கேட்டோம். அது முன்னால் சபாநாயகர் பெயர் என்பதால் தர மறுத்துட்டாங்க. பின்னர் என்ன தலைப்பு வைக்கலாம்னு யோசிச்சப்ப படத்தின் ஹீரோ விஷ்ணுப்ரியன் தான், 'சோம பான ரூப சுந்தரினு ஒரு பாடல் இருப்பதை நினைவுப்படுத்தினார். அதன் பிறகு தான் இந்த டைட்டிலை முடிவு செய்தோம்.

சோம பான ரூப சுந்தரன்னா, மதுவை போல அழகானவன்னு அர்த்தம். அவலட்சணமா இருப்பவர்கள் கூட குடித்த பிறகு அவர்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்து அழகா இருப்பதாக உணர்வார்கள். அப்படி பட்ட ஒரு அழகன் தான் 'சோம பான ரூப சுந்தரன்'.

சரி... மதுவால் ஏற்படும் தீங்கை பற்றி படம் எடுக்கிறேன்று சொல்லிட்டு, குடிகாரனை அழகானவன்னு சொல்றீங்க... படத்தின் கதை தான் என்ன?

என் படத்தின் நாயகன் ஒரு முழு நேர குடிகாரன். உலகில் உள்ள எல்லா மதுவகைகளையும் ருசிபார்க்க வேண்டும் என்ற ஆசையில் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வருகிறான். அப்படி அவன் முழு நேரமாக குடித்துக்கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமா ஒரு கும்பலிடம் சிக்கிக்கொள்கிறான். அங்கிருந்து மறுவாழ்வு மையத்திற்கு செல்கிறான். குடிகார நாயகன் திருந்தினானா இல்லையா என்பதே கதை. இதற்கிடையே அவனுக்கு ஒரு பெண்ணுடன் உறவு ஏற்படுகிறது. ஆனால் படத்தில் காதல் காட்சிகள் ஏதும் இல்லை. ஒரு நல்ல சமூக கருத்தை காமெடி கலந்து சொல்லியிருக்கிறோம்.

வடமாநிலத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கிளைமாக்ஸ் காட்சியை அமைத்துள்ளோம்.

சென்னை, கேரளா, பொள்ளாச்சி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். படப்பிடிப்பின் போது சென்னை மாநகர போலீசார் எங்களும் பெரிதும் உறுதுணையா இருந்தாங்க. கள்ளுக்கடை முதல் டாஸ்மாக் கடை வரை எல்லாமே லைவ் லொகேஷன்ஸ் தான்.

படத்தின் நாயகன், நாயகி உள்ளிட்டவர்களை பற்றி சொல்லுங்க...

படத்தின் கதாநாயகனாக விஷ்ணுப்ரியன் நடித்திருக்கிறார். அவரை எனக்கு 15 வருடங்களாக தெரியும். இருவரும் கூத்துப்பட்டறை மூலம் நண்பர்களானோம். என்னை போலவே அவரும் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் தான். பிரபல இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் படத்தில் நடித்தவர். பல படங்களில் சிறிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார். இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமையும். படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா தத்தா நடித்திருக்கிறார். அனாதை ஆசிரமத்தில் படித்து வளர்ந்த பெண், வெளி உலகுக்கு வரும்போது என்ன மாதிரியான சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அவரது கதாபாத்திரம் பேசும்.

மறுவாழ்வு மைய அதிகாரி வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ஸ்டண்ட் மாஸ்டர் ஆக்ஷன் பிரகாஷ் நடித்துள்ளார். மற்ற எல்லோருமே புதுமுகங்கள் தான்.

பீச்சாங்கை உள்ளிட்ட படங்களில் நடித்த நீங்கள் எப்படி திடீரென இயக்குனர் ஆனீர்கள்?

என் அம்மா லட்சுமி ஒரு சினிமா பைட்டர். ஜீனத்தம்மா, ஹேமா மாலினி உள்ளிட்டோருக்கு டூப் போட்டவர். எம்.ஜி.ஆரின் பாதுகாப்புக்குழுவில் இடம்பெற்றிருந்தவர். அப்பா திருமலைசாமி நாடார், சினிமா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் எனது சித்தப்பா. இப்படிப்பட்ட சினிமா குடும்பத்தில் பிறந்தவன் நான். சிறு வயதில் இருந்தே சினிமா கற்க தொடங்கிவிட்டேன்.

சரியாக படிக்கவில்லை என்றால் கூட அப்பா திட்டமாட்டார். தினமும் ஒரு கதை சொல்லவில்லை என்றாலோ, சினிமா பார்க்கவில்லை என்றாலோ தான் அடிப்பார். அப்பாவுக்கு என்னை ஹீரோவாக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் நான் ரகுவரன் போல் வில்லனாக வேண்டும் என விரும்பினேன். அப்பா இறந்த பிறகு சென்னைக்கு வந்துவிட்டேன். இங்கு வந்த பிறகு தான் நான் பார்த்த சினிமாவுக்கும், இங்கிருக்கும் நிஜ சினிமாவுக்குமான வேறுபாடு புரிந்தது.

லாரன்ஸ் மாஸ்டர் நடித்த ஸ்டைல் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் அறிமுகமானேன். அதன் பிறகு கூத்துப்பட்டறை பற்றி தெரியவந்தது. அதில் உறுப்பினராக இருக்கும், நடிகை சந்திரா (நண்பன் படத்தில் ஜீவாவுக்கு அம்மாவாக நடித்தவர்) என்னை தியேட்டர் ஆர்டிஸ்ட்டாக மாற்றினார். பிறகு நானே தனியாக நடிப்பு பள்ளி தொடங்கினேன்.

நான் நன்றாக ஜோசியம் பார்ப்பேன் என்பதால் நிறைய பிரபலங்கள் அறிமுகமானார்கள். ஆனால் யாரும் பெரிதாக உதவவில்லை. பின்னர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தேன். நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் ஒரு சில கம்பெனிகள் இப்போது வரை சம்பளம் தரவில்லை.

பின்னர் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் எனது மாணவர்கள் எடுத்த குறும்படங்களில் நடித்தேன். நல்ல மரியாதையும், வரவேற்பும் கிடைத்தது. பின் பையா படத்தில் ரவுடியாக நடித்தேன். அப்போது என்னுடன் பணியாற்றியவர் தான் யோகிபாபு. அவருக்கு முதன் முதலில் பன்றி வாய் மூஞ்சி என பெயர் வைத்தது நான் தான். இப்போதும் நன்றாக பேசுவார்.

இப்படியே சென்றுகொண்டிருந்தபோது, நண்பர் அசோக் இயக்கிய பீச்சாங்கை படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் எனக்கு நல்ல பெயரை பெற்று தந்தாலும், சரியான அங்கீகாரம் இல்லை. எல்லோரும் எனது முதுகிலேயே சவாரி செய்ய நினைத்தனர். ஆனால் என்னை மேலே உயர்த்திவிட முன்வரவில்லை. எனவே தான் நானே படம் எடுப்பது என முடிவு செய்து, சோம பான ரூப சுந்தரன் படத்தை உருவாக்கி வருகிறேன்.

   
 
ஆரோக்கியம்