Back
Home » பயணம்
குரு பரிகாரம் தரும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்! ஒரு முறை வழிபட்டால் கோடி புண்ணியம்..!
Native Planet | 10th Jul, 2018 06:01 PM
 • ஆலங்குடி


  தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ஆலங்குடி என்று பெயர் வந்தது. இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்விதத் தீங்கும் உண்டாவதில்லை என்று சொல்லப்படுகிறது. கருநிறமுள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் திருஇரும்பூளை என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

  Ssriram mt


 • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்


  குரு தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 98-வது தலம். இங்கு மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இந்த தலத்தின் அம்மையின் பெயர் ஏலவார்குழலி என்ற சுக்ரவார அம்பிகை என்பதாகும். சுக்ரவாரம் என்பது வெள்ளிக்கிழமை. அது பெண்களுக்கு உகந்த நாள் என்பதால், வெள்ளியின் பெயரையே தாங்கி தனி சன்னதியில் அம்சமாக, நேர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

  Rsmn


 • தல அமைப்பு


  ஆலயம் ஊரின் நடுவே அழகாக, ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கின்றது. இக்கோவிலின் அமைப்பு வித்தியாசமாகவும் விசித்திரமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே நுழைந்ததும் கண்ணில் படுவது அம்மன் சன்னதி. அடுத்து சுவாமி சன்னதியைப் பார்க்கலாம். இதன் பிறகு குரு சன்னதி வரும். மாதா, பிதா, குரு என்ற அடிப்படையில் இக்கோவில் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.

  Ssriram mt


 • தட்சிணாமூர்த்தி


  ஆபத்சகாயர் கிழக்கு நோக்கிய சன்னதியில் அருள்பாலிக்கிறார். இத்தலத்துச் சிறப்புடைய குரு தட்சிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்திலுள்ளார். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி விசேஷம் - குருதக்ஷிணாமூர்த்தி, ஆதலின் இதைத் தட்சிணாமூர்த்தித் தலம் என்பர். தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பு.

  Ssriram mt


 • சுந்தரரை காத்த இறைவன்


  சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது வெட்டாற்று வெள்ளப் பெருக்கில் ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து கரையேற்றிக் காட்சிதந்தார் என்பது தல வரலாறு. ஓடம் நிலைதடுமாறிப் பாறையில் மோதியபோது காத்தவிநாயகர் கலங்காமல் காத்த பிள்ளையார் என வழங்கப்படுகிறார்.

  Ssriram mt


 • நாகதோஷ வழிபாடு


  நாகதோஷம் நீங்கவும், பயம், குழப்பம் நீங்க இங்குள்ள விநாயகரையும், திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

  Dineshkannambadi


 • திருவிழாக்கள்

  ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் மகா குரு வாரத்தன்று புனித நீர் கொண்டு வருதலும் பஞ்சமுக தீபாராதனையும், மாசி மாத கடைசி குரு வாரத்தன்று சங்காபிஷேகமும், விசேஷ அபிஷேக அலங்கார ஆராதனையும் நடைபெறுகிறது. தைப்பூசத்திலும் பங்குனி உத்திரத்திலும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமியைக் கொண்டு 10 நாள் உற்சவ விழாவும், தட்சிணாமூர்த்திக்கு தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது.

  Ssriram mt


 • நெய் தீபம்


  குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்தும், 24 நெய் தீபங்கள் ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம் என்பது தொன்நம்பிக்கை. முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல், கொண்டைக் கடலைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன், கேஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகி குரு பகவான் அருள் பெறுவர்.

  Prakhar Chaudhary


 • எப்படி செல்வது?


  கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம், மன்னார்குடி சாலையில் தெற்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து ஏராளமான பேருந்துகள் செல்கின்றன. காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
நவக்கிரக தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு தலமாக விளங்குகிறது. வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. குருபெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் குரு பரிகார தலமாக உள்ள இந்த ஆலயத்தின் சிறப்புகளை தெரிந்து கொள்வோம்.

   
 
ஆரோக்கியம்