Back
Home » ஆரோக்கியம்
வேப்பம்பூ முதல் தாமரைப்பூ வரை எந்தெந்த நோய்க்கு என்னென்ன பூக்களை சாப்பிடலாம்?...
Boldsky | 19th Jul, 2018 11:45 AM
 • பூக்கள்

  காண்பவரையும், சூடுபவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடியது பூக்கள்!. பெண்கள் தலையில் பூச்சூடுவதால், இனிய நறுமணம் இல்லங்களில் பரவி, உற்சாகம் கூடுமல்லவா. கோவில்களில் தெய்வத் திருமேனிகளுக்கு சாற்றப்படும் வாசனைமிக்க மாலைகள், சுகந்த மணம் வீசும் பூக்கள் யாவும், தெய்வீக அமைதியை நமக்குத் தருகிறது.

  விசேஷ வைபவங்கள் முதல் இறுதிப்பயணம் வரை நம் வாழ்வில் எல்லா சூழல்களுக்கும் நாம் பூக்களைப் பயன்படுத்துகிறோம். பூக்கள், வாசனையில் மட்டுமல்ல அவற்றில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிரம்பிக் கிடக்கின்றன.


 • எதை சாப்பிடக்கூடாது?

  கண்ணில் காணும் பூக்கள் எல்லாம் சாப்பிடுவதற்கேற்றதல்ல!
  ஆயினும் எல்லாப்பூக்களையும் நாம் சாப்பிடக்கூடாது. ரோஜாமலரே ஆனாலும், அலங்கார பூங்கொத்தில் இருக்கும் மலரின் இதழை மென்றால், நிச்சயம் உடல்நலம் பாதிக்கும். பூங்கொத்தில் பூக்கள் வாடாமலிருக்க இரசாயனங்களைத் தெளித்திருப்பார்கள். அதுபோல, சாலையோரங்களிலுள்ள செம்பருத்தி மற்றும் பப்பாளி மலர்களையும் உண்ணக்கூடாது. மாசுக்கள் நிறைந்திருக்கும்.

  வீடுகளில் தோட்டங்களில் இரசாயனக் கலப்பில்லாத இயற்கை முறையில் விளைந்த மலர்களே, நாம் சாப்பிட உகந்தவையாகும். கிராமங்களில் இன்றும் தலைவலிக்கு தும்பைப்பூச்சாறு, கண்வலிக்கு நந்தியாவட்டைப் பூச்சாறு என்று கொடுக்கப்படுகிறது.

  மேலைநாடுகளில் லாவெண்டர் போன்ற பூக்களை, கேக்கள், பழச்சாறுகளில் கலந்து அவற்றின் சுவையைக் கூட்டப்பயன்படுத்திவருகிறார்கள். நாம், விசேஷ நாட்களில் பூக்களை சிறப்பிடம் பெறச்செய்துவிடுவோம்.


 • வேப்பம்பூ இனிப்பு பச்சடி.

  நம் வாழ்க்கையின் பேலன்ஸ்சீட்டை, சித்ரகுப்தன் எனும் இறைஎழுத்தன், ஒவ்வொரு வருடமும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் புதுப்பிப்பதாக எண்ணி, அன்றையதினம் சித்ரகுப்தனுக்கு நிவேதனம் படைத்து வழிபட்டுவரும், நம்மவர்கள், நிவேதனத்தில் தவறாமல் வைக்கும் ஒரு இனிப்பு, வேப்பம்பூ பச்சடி.
  புதிதாக மலர்ந்த வேப்பம்பூக்களை, சேகரித்து, அவற்றை நன்கு உலர்த்தி, மாங்காய் சதைகளுடன் வெல்லம் சேர்த்து, வேப்பம்பூக்களை இட்டுசெய்யும் சுவைமிக்க, உடலுக்கு சத்துதரும் பச்சடிதான், வேப்பம்பூ பச்சடி.
  இதுவரை வீடுகளில் செய்யாதவர்கள் கூட, இனி இந்தப்பச்சடியை வீடுகளில் செய்து சாப்பிட, இதுவரை அறியாத சுவையை மட்டுமன்றி, உடல்நல நன்மைகளையும் உணர்வார்கள்.

  நம் முன்னோர்கள் தட்பவெப்பநிலைகேற்ற உணவுகளை சாப்பிடுவதன்மூலம், அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் உடல்நல பாதிப்புகளுக்கு. உணவின்மூலம், தீர்வு கண்டார்கள்.

  அப்படி, கோடைமாதமான சித்திரைமாதத்தில், உடல் சருமபாதிப்புகள், வறட்சிதாகம், அரிப்பு செரிமானமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும். சிலருக்கு குடலில் புழுக்கள் வளர்ந்து, உணவில் வெறுப்பைக் கொடுக்கும். முன்னோர்கள் இதற்கு, கோடையில் பூத்து மணம்பரப்பும் வேப்பம்பூவை மருந்தாக்கி, உடல்நலம் காத்தார்கள். சிறந்த கிருமிநாசினியான வேப்பம்பூவை சமைத்து, பச்சடியாக, வேப்பம்பூ இரசமாக உண்ணும்போது, உடலிலுள்ள தோல்வியாதி பாதிப்புகளை சரியாக்கி, குடல்புழுக்களை அழித்து, உடல் நச்சைப்போக்கி, பசியை அதிகரிக்கும். உடலும்வலுவாகும்.


 • வெங்காய பூக்கள்.

  Image Courtesy

  வெங்காயம் இல்லாத உணவுகளே இல்லை எனக்கூறும் அளவுக்கு, எல்லா உணவிலும் நீக்கமற நிறைந்திருக்கும் வெங்காயத்தின் அளவுக்கு, அதன் பூக்களுக்கும் நன்மைசெய்யும் தன்மை உண்டு என்பதை, நாம் அறிவோமா?
  கண்களில் எரிச்சல், பார்வைக்குறைபாடு போன்ற பாதிப்புகளுக்கு வெங்காயப் பூக்களை சாறெடுத்து சிலதுளிகள் கண்களில்விட, மழையில் நனைந்த இலைகள்போல, வாட்டர் சர்வீஸ் செய்த வண்டிபோல, கண்கள் பளபளப்பாகிவிடும்.

  வெங்காயப்பூக்கள் மற்றும் வெங்காயத்தை தயிரில்சேர்த்து சாப்பிட, மூலம், உடல்எரிச்சல் நீங்கும். உணவில் வெங்காயத்தாள் எனும் அதன்தண்டு மற்றும் பூக்களை சேர்த்துவர, மாதவிலக்கு கோளாறுகள், பல்வலி மற்றும் உடலிலுள்ள தேவையற்ற காற்றை வெளியேற்றி, உடலை நலமாக்கும்.


 • முருங்கைப் பூக்கள்.

  மலட்டுத்தன்மையைப் போக்கும் ஆற்றல்மிக்க முருங்கைப்பூக்களை உலர்த்தி, பொரியல் செய்துசாப்பிட, உடல் சூட்டைத்தணிக்கும். முருங்கைப்பூக்களை காய்ச்சி வெல்லம் சேர்த்து குடித்துவரலாம். நோயெதிர்ப்புசக்திமிக்க பூக்கள், சளி ஜுரம் போன்ற பாதிப்புகளைப்போக்கும். பூஞ்சை பாதிப்பை விலக்கி, சருமத்தைக்காக்கும். சர்க்கரைபாதிப்பை சரியாக்கும்.


 • வாழைப்பூ.

  நன்றாக சமைக்கும் தாய்மார்கள்கூட, வாழைப்பூ என்றாலே, நடுங்கி என்னால் முடியாதப்பா என்று பின்வாங்கும் நிலைக்கு காரணம், வாழைப்பூவை சமைக்க அதிக பொறுமைதேவை என்பதால்தான். வாழைப்பூவின் மடல்களை விலக்கி, அதனுள் இருக்கும் சிறு பூக்களிலுள்ள மகரந்தத் தண்டை ஒவ்வொன்றாக எடுத்து நீக்க வேண்டும். வாழை மடலின் அளவு குறையக் குறைய பூக்களின் அளவும் குறையும், தண்டின் அளவும் குறுகும், கடினமான இந்தப் பணியை செய்தால் தான், நாம் வாழைப்பூவில், விரும்பும் உணவினைச் செய்யமுடியும்.

  பெண்களின் மாதவிலக்கு இன்னல்களைக் களைந்து, அவர்களின் உடல் தளர்ச்சி, வயிற்றுவலி பாதிப்புகளைப் போக்கும். சர்க்கரை பாதிப்புக்கு, வாழைப்பூ அருமருந்தாகும், வாழைப்பூவை, பூண்டு மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிட்டுவர, கணையபாதிப்புகள் விலகி, இன்சுலின் சுரப்பு இயல்பாகி, சர்க்கரை கோளாறுகள் விலகிவிடும்.

  உடல்சூடு உள்ளவர்கள்; ஜீரணக் கோளாறு உள்ளவர்கள் மூலவியாதி பாதிப்புள்ளவர்கள், வாழைப்பூவை பொரியல்போல சீரகம் மிளகு பூண்டு சேர்த்து சாப்பிட்டுவர, பாதிப்புகள் நீங்கும்.

  வாழைப்பூவில் அடை, வடை, வாழைப்பூ உருண்டை மற்றும் ரசம் வைத்து சாப்பிட்டுவர, குழந்தைப்பேறில்லா பெண்மணிகள் விரைவில், கர்ப்பம் தரிக்க வாய்ப்புண்டு.


 • பூண்டுப் பூக்கள்.

  வெங்காயப்பூக்களைப் போலவே, பூண்டின் பூக்களையும் சமையலில் சேர்க்கலாம். பூக்களை காய்ச்சி, நீரைக்குடித்துவர, இதய சுவாசபாதிப்புகள் விலகும். மேலைநாடுகளில் பூண்டு பூக்களை வேகவைத்து, பிரெட்களில் காய்கறிகளுடன்சேர்த்து சாப்பிடுகின்றனர்.


 • அகத்திப் பூக்கள்

  Image Courtesy

  உடலுக்குத்தேவையான சத்துக்களையும் தாதுக்களையும் கொண்ட அகத்திப் பூக்களை, நீரிலிட்டு காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர, உடல் பித்தசூடு, குறையும். அகத்திப் பூக்களை அரிசி உப்புமா அல்லது சிற்றுண்டிகளில் சேர்த்து சாப்பிட, நோயெதிர்ப்பு ஆற்றல் சீராகி, உடல் எரிச்சல், கைகால் மூட்டுவலி மற்றும் மூளையின் ஆற்றல் மேம்படும். அகத்தியை அளவோடு உண்ண வேண்டும்.


 • பூசணிப்பூக்கள்.

  Image Courtesy

  "வாசலிலே பூசணிப்பூ வெச்சுப்புட்டா! வெச்சுப்புட்டா! நேசத்துலே எம்மனச தச்சுப்புட்டா!" மனதைத்தாலாட்டும் இசைஞானியின் மெல்லிசையில் சூப்பர்ஹிட்டான இந்தப்பாடல், ஒரு வினாடி மனதில் வந்துபோயிருக்குமே!
  பனிக்காலமான மார்கழிமாதத்தில், பெண்கள் அதிகாலையில் எழுந்து வாசலில் மாக்கோலமிட்டு அழகிய வண்ணங்கள் தீட்டி, கோலத்தின் நடுவே, பசுஞ்சாணத்தை வைத்து அதன்மேல், பூசணிப் பூவை சிறிது அருகம்புல்லுடன் இட்டுவைப்பார்கள்.

  பனிக்காலவியாதிகளை, நெருங்கவிடாமல் காப்பதில் பூசணிப்பூக்கள் ஆற்றல்மிக்கவை என்பதாலேயே, வீடுகளில் கோலமிட்டு பூசணிப்பூக்களை மார்கழிமாதத்தில் வைத்துவந்தனர் என்றுசிலர் கூறினாலும், சிலரோ வீடுகளில் திருமணவயதுவந்த பெண்கள் இருக்கின்றனர் என்பதைக்காண்பவர்கள் உணரவே பூசணிப்பூக்கள் என்றும், தைமாதம் பிறந்ததும் பெண்கேட்க வரலாம் என்பதே, இதன் விளக்கம் என்றும் கூறுவார்கள். எதுவாயினும் நன்றே!. பூசணிப்பூக்களை காய்ச்சி குடித்துவர, இருமல் சளி போன்ற சுவாசபாதிப்புகள் விலகும்.


 • செம்பருத்திப் பூக்கள்.

  செம்பருத்திப்பூக்களைக் காய்ச்சி பருகிவர, இதயபாதிப்புகள் சீராகும். இரத்தம் சுத்தமாகி, உடல் பொலிவாகும். இதழ்களை அரைத்து பாலில் கலந்து பருகிவர, மனப்பதட்டம், கோபதாப மனநிலை மாறும்.


 • ரோஜா மலர்கள்.

  அழகுக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்கும் குறியீடாக தொன்றுதொட்டு விளங்கும் ரோஜா மலர்கள் மனஅழுத்தம், கவலை போன்றவற்றைப்போக்கும் தன்மையுடையவை. உடல் பொலிவுதரும். ரோஜா இதழ்களை தேநீரிலிட்டு சுவைக்கலாம். ரோஜாமலர்களை கற்கண்டு சேர்த்து காய்ச்சி குல்கந்து எனும் இலேகியம்போல உண்டுவரலாம். இதயம், குடல் மற்றும் உடல்உறுப்புகள் வலுவாகும். மலச்சிக்கல் நீங்கும்.


 • தாமரை மலர்கள்.

  தெய்வீகமலர்களான தாமரை மலர்கள், இதயத்தைக்காப்பதில் தலைசிறந்தவை. தாமரைஇதழ்களை உலர்த்தி தீநீராகப் பருகலாம். மலர்களை இனிப்புசேர்த்து, ரோஜா குல்கந்து போல சாப்பிடலாம்.


 • குங்குமப்பூ

  குங்குமப்பூ, தாய்மார்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க, நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்த, பாலுடன் கலந்து தரப்படுகிறது.

  இதுபோல நன்மைகள் தரும், பிராக்கோலி, காலிஃபிளவர் பூக்கள், பப்பாளிபூக்கள் மற்றும் மல்லிகைப் பூக்களும் நம் உணவில் இருக்கின்றன.
பூக்களைப் பறிக்காதீர்கள்! என்ற போர்டைப் பார்த்தவுடனே, கண்களை சுண்டியிழுக்கும் அழகிய ஒரு பூவைப் பறித்து, முகர்ந்த பின்னர், பெருஞ்சாதனை படைத்த எண்ணம் பலருக்கும் இருக்கும்.

பின்னாலேயே வரும் காவலாளியிடம் திட்டு வாங்கி, அசடு வழிபவர்கள் நிறைய இருப்பார்கள்.

   
 
ஆரோக்கியம்