Back
Home » திரைவிமர்சனம்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்... 'யு டர்ன்' விமர்சனம்!
Oneindia | 14th Sep, 2018 03:23 PM

சென்னை: ஒரு சாலையில் நடக்கும் தொடர் விதிமீறல்களையும், அதனால் ஏற்படும் மரணங்களையும் திரில்லிங்காக சொல்கிறது யு டர்ன் திரைப்படம்.

சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் சாலை தடுப்பு கற்களை நகர்த்தி யு டர்ன் எடுத்து செல்கிறார்கள் சில வாகன ஓட்டிகள். இதனால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து கவர் ஸ்டோரி எடுக்க முயற்சிக்கிறார் பத்திரிகையாளர் ரச்சனா (சமந்தா). சாலை விதிகளை மீறிய ஒருவரை பேட்டி எடுக்க சமந்தா முனையும் போது, அந்த நபர் மரணிக்கிறார். இதனால் சமந்தாவை போலீஸ் சந்தேகப்படுகிறது. மேம்பாலத்தில் விதிகளை மீறி யு டர்ன் எடுத்தவர்கள் குறித்து சமந்தா சேகரித்து வைத்திருக்கும் பட்டியலில் உள்ள அனைவருமே மர்மமான முறையில் மரணித்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது. இந்த மரணங்களுக்கும் சமந்தாவுக்கும் என்ன தொடர்பு என்பதை பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் திரில்லிங்காக சொல்கிறது 'யு டர்ன்'.

கன்னடத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த யு டர்ன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். கன்னட யு டர்னை பார்க்காதவர்களுக்கு இந்தப்படம் நிச்சயம் ஒரு சர்ப்ரைஸ் திரில்லர். முதல் பாதி முழுவதும் படத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்வையாளர்கள் யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் பவன்குமார். இரண்டாம் பாதியை புதிய கோணத்தில் கையாண்டிருக்கும் விதமும், தமிழ் சினிமாவுக்கு புது அனுபவம்.

ஒரு சிறு சம்பவத்தை அடிப்படையாக வைத்து மிக அழகாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். வழக்கமாக நம் சினிமாக்களில் வரும் கிளிஷே பேய்களில் இருந்து விடுபட்டு, சாதாரண மனிதர்களை போலவே பேய்களையும் காட்டியிருப்பது வித்தியாச உணர்வை தருகிறது. பத்திரிகையாளர், போலீஸ் அதிகாரிகள், சாலை விதிகளை மீறுபவர்கள், மரணங்கள், அழகான குடும்பம் என பாத்திரப் படைப்பும் சம்பவங்களும் கச்சிதம்.

[Read This: சிவகார்த்திகேயன் + சூரி + பொன்ராம் = ஹாட்ரிக் வெற்றி ?... 'சீமராஜா' விமர்சனம்!]

சமூக அக்கறைக்கொண்ட இளம் பத்திரிகையாளராக வரும் சமந்தா, முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆர்வ மிகுதியால் யு டர்ன் பற்றி ஸ்டோரி எழுத முனைந்து, பின்னர் அதனால் ஏற்படும் பிரச்சினையில் சிக்கித் தவிப்பது, க்ரைம் ரிப்போர்ட்டர் ராகுலை சைட் அடிப்பது, போலீசை கையாள முடியாமல் திணறுவது என படத்தை தாங்கிப்பிடித்திருக்கிறார். சபாஷ் சமந்தா.

ஏற்கனவே பார்த்து பழகிய அதே போலீஸ் அதிகாரியாக ஆதி. ஈரம் படத்தில் செய்ததை தான் இதிலும் செய்திருக்கிறார். ஆனால் முன்பைவிட முதிர்ச்சியான நடிப்பு. ஒரு போலீஸ் அதிகாரியாக தனக்காக எல்லையை கடக்காமல் பயணித்திருக்கிறார்.

சின்சியர் க்ரைம் ரிப்போர்ட்டராக வரும் ராகுல் ரவீந்திரன், ஒரு கட்டத்திற்கு பிறகு சின்சியர் லவ்வராக மாறிவிடுகிறார். ஆனால் தனது அண்டர்ப்ளே நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் மீண்டும் பூமிகா. அருமையான கதாபாத்திரம். நிறைவான நடிப்பு.

இவர்களை தாண்டி, கேஸை முடித்து பிரஷரில் இருந்து தப்பித்தால் போதும் என நினைக்கும் போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேன், மகளையும் மனைவியையும் சாலை விபத்தில் பறிக்கொடுத்துவிட்டு தனிமை துயரில் தவிக்கும் நரேன் (சித்திரம் பேசுதடி), குள்ள மனிதர், குழந்தை நட்சத்திரம் ஆர்ணா என அனைவருமே நிறைவான நடிப்பை தந்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலம் நாயகி சமந்தாவும், திரைக்கதையும் தான். ஆனால் ஒரு சில இடங்களில் இதுவே படத்தின் பலவீனமாகவும் மாறிவிடுகிறது. இளநிலை பயிற்சி நிபருர் கதாபாத்திரத்திற்கு சமந்தா ஓவர் மெச்சூர்டாக தெரிகிறார்.

அதேபோல், ஒரு பெரிய ஆங்கில பத்திரிகையில் க்ரைம் ரிப்போர்ட்டராக இருக்கும் ராகுல் ரவீந்திரனுக்கு ஒரு முக்கியமான காவல் நிலையத்தில் நடைபெறும் அதிர்ச்சியான சம்பவங்கள் எதுவுமே தெரியாமலா இருக்கும். அப்படி தெரியவில்லை என்றால் அவர் எப்படி க்ரைம் ரிப்போர்ட்டராக இருக்க முடியும் இயக்குனரே.

படத்தின் மற்றொரு ப்ளஸ் பூர்ணசந்திரா தேஜஸ்வியின் பின்னணி இசை. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவே , திரில்லர் கதை சொல்கிறது. லைட்டிங், கோணங்கள் என காட்சிகள் அனைத்துமே லைவாக இருக்கின்றன. கதையை பார்வையாளர்கள் யூகித்துவிடக் கூடாது என்பதற்காக மிகநுட்பமாக எடிட் செய்திருக்கிறார் சுரேஷ் ஆறுமுகம். அவரே ஒருகட்டத்தில் இதுதான் கதை என பார்வையாளருக்கு திறந்துவிடுவது வித்தியாச விஷுவல் ப்ளே.

சாலை விதிமீறல்கள் என்பது தினமும் சர்வ சாதாரணமாக நாம் கடந்து போகும் ஒன்று தான். ஆனால் அதற்கான பின் வினைகள் இப்படி எல்லாம் கூட இருக்குமா என ஆச்சரியப்பட வைக்கிறது யு டர்ன். நாமும் சாலை விதிகளை மீறாமல் தியேட்டருக்கு யு டர்ன் எடுக்கலாம்.

   
 
ஆரோக்கியம்