Back
Home » திரைவிமர்சனம்
டம்மி சி.எம்.-ஆ... ரவுடி சி.எம்.-ஆ... யார் இந்த 'நோட்டா'! விமர்சனம்
Oneindia | 5th Oct, 2018 04:32 PM

சென்னை: சர்ச்சையாக தமிழக முதல்வராகும் நாயகன் அதில் வரும் சவால்களை எப்படி சமாளிக்கிறார் என்பதே நோட்டா படம்.

தமிழக முதலமைச்சர் விநோதனின் (நாசர்) மகன் பிளேபாய் வருண் (விஜய் தேவரகொண்டா). ஊழல் வழக்கில் சிக்கியிருக்கும் விநோதன் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஒரு சாமியாரின் சொல்படி தனது வாரிசான வருணை அந்தப் பதவியில் உட்கார வைக்கிறார். வேண்டா வெறுப்பாக முதலமைச்சர் பதவியில் அமரும் வருண் அரசியல் விளையாட்டை எப்படி விளையாடுகிறார் என்பதே படம்.

பிளேபாய், டம்மி முதலமைச்சர், பொறுப்பான முதலமைச்சர் என வெரைட்டி காட்டியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. தமிழ்நாட்டின் சமகால அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நடிக்க தனி தைரியம் வேண்டும். சிறப்பாக செய்திருக்கிறார். அழகாக தமிழ் பேசி நடித்திருக்கிறார்.

அப்பல்லோ மருத்துவமனை, கூவத்தூர் ரிசார்ட், சென்னை வெள்ளம், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, நம்பிக்கை இல்லா தீர்மானம், கண்டெய்னர் லாரி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அதிகம் பேசப்பட்ட விஷயங்களை வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் இயக்குனர் ஆனந்த் சங்கரும், கதாசிரியர் ஷான் கருப்புசாமியும். இந்த சம்பவங்கள் எல்லாம் பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறதே தவிர திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்த தவறிவிட்டன.

படத்தின் ஹீரோ விஜய். வில்லன்...? விஜய் யாரை எதிர்த்து போராடுகிறார் என்பதே புரியவில்லை. எதிர்கட்சித் தலைவரின் மகள் கயல் வரதராஜனை எதிர்த்தா, சொந்த தந்தையை எதிர்த்தா அல்லது ஆட்சியாளர்களை அடக்கியாளும் சாமியாரை எதிர்த்தா... இந்த கேள்விக்கான விடையை தேடும் முன் படம் முடிந்துவிடுகிறது. ரவுடி சி.எம்.மாக மாறி அதிரடியாக அரசியல் களம் இறங்கும் விஜய், அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்து ஏமாந்து போகிறோம்.

ஆனால் வீண் பரபரப்புக்காக மசாலா சேர்க்காமல், யதார்த்தமாக காட்சிகளை அமைத்திருப்பதும், இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் என மூத்த அரசியல்வாதிகளுக்கு சொல்லியிருப்பதும் பாராட்டத்தக்கது. தமிழக அரசியலோடு, உ.பி., டெல்லி அரசியலையும் நையாண்டி செய்திருக்கிறார்கள்.

'கொஞ்சம் நிமிர்ந்து பழகுங்கடா... அப்புறம் முகத்த சரியா பார்க்கலைன்னு சிலையை தப்பா செஞ்சிடப்போறிங்க' என்பது உள்ளிட்ட சில வசனங்கள் மட்டுமே கவனம் ஈர்க்கின்றன. ஒரு அரசியல் படத்துக்கான வசனங்கள் இதில் மிஸ்ஸிங்.

சத்யராஜுக்கு இந்த படத்தில் மேக்கப் எல்லாம் இல்லை. பொறுப்பான பத்திரிகையாளராக தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். அதேபோல் நாசரும் தன் பங்கை சீரியசாக செய்து படத்தை தாங்கிப்பிடித்திருக்கிறார்.

மெஹ்ரின் பிர்சாடா, சஞ்சனா நடராஜன், யாஷிகா ஆனந்த் என படத்தில் மூன்று நாயகிகள் இருக்கிறார். சஞ்சனாவுக்கு மட்டும் தான் நடிக்க கொஞ்சம் வாய்ப்பு. மற்ற இருவரும் டம்மி சி.எம். தான்.

படத்தில் கருணாகரன் எதற்காக இருக்கிறார் என்பதே தெரியவில்லை. காமெடியும் செய்யவில்லை. தனது குருநாதர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை நடிக்க வைத்து அழகு பார்த்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர்.

ஷாட் நம்பர் பாட்டு செம பார்ட்டி. பின்னணி இசையும் பிரமாதம் சாம். வெரைட்டி வெரைட்டியாக ஃபிரேம் வைத்து அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரன். முதல் பாதியை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கும் படத்தொகுப்பாளர் ரேமண்ட் டெரிக் கிறிஸ்டா, இரண்டாம் பாதியையும், இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம்.

இது அரசியல் திரில்லர் படமா இல்லை அரசியல் நையாண்டி படமா என்பதே புரியவில்லை. மொத்தில் நோட்டாவுக்கு ஓட்டுப் போடலாமா வேண்டாமா என்பதை வாக்காளராகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

   
 
ஆரோக்கியம்