Back
Home » Business
உலக வங்கியின் சிறந்த பிசினஸ் கிராமமாக, இந்திய கிராமம் தேர்வு
Good Returns | 10th Oct, 2018 08:59 AM
 • புய்ரா கிராமம்

  ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநில எல்லைகளை இணைப்பது போல் அமைந்திருக்கிறது சிர்மார் மாவட்டம். சிர்மாரில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் புய்ரா. புய்ரா கிராமத்தில் மொத்தம் 150 குடும்பங்கள். அதிகபட்சம் 1500 பேர் கொண்ட மக்கள் தொகை. இன்னும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்கிறார்கள். மொத்த நிலப் பரப்பளவே 980 ஏக்கர் தான். கிராமம் முழுவதும் மலை என்பதால் ஒரு குன்றுக்கு இரண்டு முதல் நான்கு வீடுகள் அவ்வளவு தான். வீடுகளைச் சுற்றிப் பழச் செடிகள், பழ மரங்கள், பூச் செடிகள், கொடிகள் என்று இயற்கைத் தாயின் போதுமான கருணை இருக்கும் அழகிய பள்ளத்தாக்கு கிராமம்.


 • புய்ரா ஜாம் தொழிற்சாலை


  ஊர் தலைவி கலமா தேவி தொடங்குகிறார் "1999-ல லின்னட் முஷ்ரன் (Linnet Mushran-ங்குற இந்த அம்மாதான் எங்க கிராமத்து வந்த மகாலட்சுமி. இந்த இங்கிலாந்து வன தேவதை தான், எங்க கிராம மக்களுக்கு ஜாம் தயாரிக்க சொல்லிக் கொடுத்துச்சு. அந்தம்மா சொல்லிக் கொடுத்த வழிமுறையில சின்ன சின்ன மாற்றங்களோட இன்னமும் அதே ருசியில தயாரிச்சு வித்துக்கிட்டு வர்றோம். இந்த Hand made ஜாமுக்கு தில்லி, மும்பைகளில் நல்ல வரவேற்பு உண்டு. ஃபேப் இந்தியா (Fabindia), தேவன்ஸ் (Devans), தில்லி கான் மார்க்கெட் (Delhi's Khan Market), எல் ஓபரா (L'Opera), ஃப்ரெஞ்ச் பேட்டிச்செரி (French patisserie) எல்லாம் இவர்களின் கஸ்டமர்கள் தான். ஆண்டுக்கு சராசரியாக 250 டன் வரை ஜாம் தயாரிக்கிறார்கள். இங்கு 10 நிரந்தர ஊழியர்கள், நல்ல பீக் சீசனில் 90 - 110 பேர் ஊழியர்கள் வரை வேலை செய்வார்களாம். ஜாம்கள் தயாரிக்க பெரும்பாலும் இயந்திரங்களை பயன்படுத்துவது இல்லை. "இங்க இருக்குற பொம்பளங்களுக்கு வேலை கொடுத்து நல்ல ஜாம் தயரிச்சு, வித்து காசு பாப்போமா... இல்ல இயந்திரங்கள உள்ள விட்டு நிறைய பேர வேலைக்கு கூட்பாம லாபம் பாத்து என்ன பண்ணப் போறோம்" என்கிறார் உபாசனா குமாரி.


 • உள்ளூர் பொருளாதாரம்

  "ஜாம் ஃபேக்டரிக்கு தேவையான பழங்கள், சர்க்கரை எல்லாமே உள்ளூர் விவசாயிங்க கிட்ட இருந்து வாங்குவோம், உள்ளூர் மளிகை கடைகாரங்க கிட்ட தான் வாங்குவோம். அப்ப தான நம்ம ஊர் மக்கள் நல்லா இருப்பாங்க. யாரோ ஒருத்தம் ஒரு ரூவா, ரெண்டு ரூவா கம்மியா தர்றான்னு அவங்க கிட்ட வாங்குனா, எங்க மக்கள் யார்ட்ட போய் பொருள் விப்பாங்க சொல்லுங்க" என்று முகத்தில் அறைகிறார்கள் புய்ரா ஜாம் தொழிற்சாலையினர்.


 • பொண்ணுங்ககார் ஓட்டலாமா?

  உபாசனா குமாரி, 27 வயது பெண், புய்ரா (Bhuira) கிராமம், சிர்மார் (sirmaur) மாவட்டம், ஹிமாச்சலப் பிரதேசம். ஐடி-ல் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்கிறார். வட இந்தியா மால்களில் பிரசித்தி பெற்ற புய்ரா ஜாம் தொழிற்சாலையில் அலுவலக நிர்வாகியாக வேலை. "என் வீடு இந்த ஜாம் ஃபேக்டரியில இருந்து நாலு கிலோமீட்டர் போகணும். இப்ப ஒரு 7 - 8 வருஷமா, நான் டெய்லி என்னோட கார்ல தான் போறேன். எங்க கிராமத்துல பொண்ணுங்க கார் ஓட்டுறது எல்லாம் திமிர் தனமான விஷயமாத் தான் பாப்பாய்ங்க எங்க ஊர் ஆம்பளைங்க. இப்ப ரொம்பவே நிலைமை மாறி ருச்சு. நான் கல்யாணம் பண்றப்ப எல்லாம் நிலைமை ரொம்ப மோசம். எனக்கு கார் ஓட்ட ரொம்பப் பிடிக்கும்ங்க. கார் ஓட்டுறப்ப மட்டும் எனக்கு ஏதோ றெக்க மொளச்ச மாதிரி இருக்கும்ங்க" என்று சொல்லிக் கொண்டே ஹிமாச்சல மலை வளைவுகளில் எல்லாம் ஆக்ஸிலேட்டரை அழுத்தி நமக்கு அல்லு கிளப்புகிறார். அப்படியே ஜாம் தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்தோம்.


 • வொண்டர் உமன் புய்ரா வுமன்

  நம்மை அழைத்துச் சென்ற உபாசனா குமாரியின் வீட்டில் உணவு. "என்னங்க எங்க சாப்பாடு எல்லாம் புடிச்சிருக்கா..?" பிடிச்சிருக்கு. "இங்க பொம்பளங்களுக்கு கொஞ்சம் கூடுதல் வேலை. நாங்களே ஃபேக்டரியிலயும் வேலை பாப்போம், அது முடிஞ்சு குழந்தைங்கள பாத்துக்கணும், அது முடிஞ்சு மாமனார், மாமியார பாத்துக்கணும், குழந்தைங்களுக்கு பள்ளிக் கூடம், பாடம் சொல்லித் தர்றதுன்னு அடுத்தடுத்து வேலை இருக்கு... ஆக நீங்க பாட்டுக்கு பேச்சு கொடுங்க நான் சொல்லிக்கிட்டே வர்றேன்" என்று அசால்டாக நம் கேள்விகளுக்கும் பதில் அளிக்கத் தொடங்குகிறார். அவர் செய்யும் வேலைகளோடு, என் கேள்விகளை உள்வாங்கி அவர் கொடுக்கும் பதில் எல்லாம் அவரை ஒரு வொண்டர் உமனாகத் தான் நம் கண்கள் நமக்குக் காட்டுகிறது.


 • அப்ப ஆம்பளங்க

  உபாசனாவிடம் இந்த கேள்வியை கேட்டு முடிப்பதற்குள் "வீட்டுக்கு குடிக்கிற தண்ணி, மலை அடிவாரத்துல இருந்து தான் கொண்டு வரணும், வீட்டுக்கு தேவையான மளிகை சாமான், அரிசி பருப்பு, காய்கறி எல்லாமே மலை அடிவாரத்துல இருந்து தான் கொண்டு வரணும்ங்க. தவிர ஆடு மாடு மெய்க்கிறது, பால் கறக்குறது,கறந்த பால வித்துட்டு காசு பாக்குறது எல்லாம், வீட்டு ஆம்பளங்க செய்வாங்க. சொல்லப் போனா நாங்க இல்லன்னா கூட, எங்க வேலைங்க எல்லாத்தையும் பெரும்பாலும் செஞ்சிடுவாங்க. ஆனால் அவங்களும் மலை அடிவாரம் வரை போய்ட்டு வர்ர வங்க இல்லையா, நம்மளால கொஞ்சம் அவங்க ஓய்வு எடுக்கட்டுமேன்னு தான்" என்று சிரிக்கிறார்.


 • புய்ரா நிர்வாக முறை

  சரிதா தேவி, புய்ரா ஜாம் தொழிற்சலையில் தொடக்கத்தில் இருந்து பணியாற்றுபவர் "எங்க ஊர் பொம்பளங்களுக்கு மட்டும் தான் ஜாம் ஃபேக்டரியில வேலை கொடுப்போம். எங்க பொம்பளங்களுக்கு என்ன மாதிரியான பிரச்னை வந்தாலும், அதுக்கு தகுந்த மாதிரியா எங்க நிர்வாகத்த மாத்திப்போம். எங்க ஃபேக்டரியில் அஒரு நிரந்தர விதின்னு எல்லாம் கிடையாது."என்கிறார்.


 • பண உதவி

  "உதாரணமா ஒரு பணத்தேவை வருதா, எங்க சம்பளத்துல ஒரு பகுதிய எப்போதுமே பேங்குல கட்டாய பிடித்தம் செஞ்சி வெச்சிருப்போம். அந்த காச தேவையான வங்களுக்கு வட்டியில்லா கடன் மாதிரி கொடுத்துப்போம். நிரந்தர ஊழியருங்க போக, மத்தவங்க வசதி படுறப்ப வந்து வேலை பாக்கலாம். அவங்களுக்கான கூலி சரியா கணக்கு பண்ணிக் கொடுத்துடுவோம். இது மாதிரி ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசியா வளர்றதால எங்க பொம்பளங்களுக்கே வாழ்கை மேல ஒரு நம்பிக்கை கூடி இருக்கு." என்று ஜாமை பொட்டிகளில் பேக் செய்கிறார் சரிதா.


 • விட்டுக் கொடுத்தல்

  இப்போது வித்யா தோமர் தொடர்கிறார் "நான் அடிச்சி புடிச்சு பிஏ வரக்கும் படிச்சிட்டேங்க. படிச்சி முடிச்சதும் அங்கன்வாடியில டீச்சர் வேல கெடச்சிடுச்சு. 11 வருஷத்துக்கு முன்னாடி கெடச்ச அந்த வாய்ப்ப என்னோட அக்காவால தான் இன்னக்கும் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். என் அக்கா தான் என்னோட குழந்தைங்கள பாத்துக்குறா. என் வேலை காலையில டிபன், மதியச் சாப்பாடு செஞ்சிட்டு வேலைக்கு போறது தான். மத்தத எல்லாம் என் அக்கா தான் பாத்துக்குவா. எங்க அக்கா வீட்டுல எப்பவும் ஒரு 10 பேருக்கு சாப்பாடு இருந்துக்கிட்டே இருக்கும். இந்த மாதிரி தான் ஜாம் ஃபேக்டரியி வேலை பாக்குறவங்க வீட்டுலயும் சமாளீக்கிறாங்க. நாங்க நகர வாசிங்க மாதிரி இதுக்கு எல்லாம் வேலைக்கு ஆள் வெக்க மாட்டோம். எல்லாம் எங்க குடும்ப ஆளுங்க தான். இதுல தான் நாங்க, நகர வாசிங்க கிட்ட இருந்து மாறுபடுறோம்" என பெருமை பொங்குகிறார் வித்யா.


 • உலக வங்கிப் புகழாரம்

  2015-ம் ஆண்டு இந்த ஜாம் தொழிற்சாலைக்கு வந்த உலக வங்கியினர் 'Scaling the Heights: Social Inclusion and Sustainable Development in Himachal Pradesh' என்று ஒரு கட்டுரையை வெளியிட்டார்கள். அந்த கட்டுரையில் "உலக வங்கி எப்போது ஒரு கேள்வியை தனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும் 'what does social inclusion and sustainable development look like?' (சமூகத்தின் அனைவரும் ஒன்று படுவது மற்றும் நிலையான வளர்ச்சி எப்படி இருக்கும்). இந்த சாதாரண கேள்விக்கு கிடைக்கும் விடைகள், ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம் ஏடுகள் பிரசூரிக்கத் தகுதியானதாக இருந்ததே தவிர மனிதர்கள் வாழ்கையை அத்தனை செழிப்பாக்க வில்லை. இப்போது அதற்கான விடையாக, மற்றவர்களுக்கு காட்டும் எடுத்துக்காட்டாக புய்ரா கிராமமும், இந்த ஜாம் தொழிற்சாலையும் கிடைத்திருக்கிறது. ". என்று புகழ்ந்து எழுதி இருந்தனர். ஒரு பெண்கள் குழு தங்களையும், தங்கள் ஊரையும் அவர்கள் செய்யும் ஒரே ஒரு தொழில் மூலம் மாற்ற முடியும் என்பதை இந்த உலகுக்கு உரக்கச் சொல்லி இருக்கிறார்கள். இவர்கள் பிசினஸ் டெக்னிக் அசாத்தியமானது, எல்லோராலும் பின்பற்றக் கூடியது என்று பல்வேறு பொருளாதார அறிஞர்களும் பாராட்டி இருக்கிறார்கள்.


 • வேறு என்ன காரணங்கள்...?

  "பொண்ணுங்க படிப்புல தான் அவங்க எதிர்காலமே இருக்கு. போன பத்து வருஷத்த விட 11% பொண்ணுங்க கல்வி அறிவு அதிகரிச்சிருக்கு. ஆனா ஆம்பளங்க கல்வியறிவு 3% தான் அதிகரிச்சிருக்கு. 2011 கணக்கு எடுப்புப் படி இந்திய மனித வள மேம்பாட்டுல ஹிமாச்சலப் பிரதேசத்துக்கு மூனாவது இடம், அதுக்கு நாங்களும் ஒரு காரணம். இந்த பட்டியல்ல முதல் இரண்டு இடம் கேரளா, தில்லி. தில்லிக்கு அப்புறம் எங்க மாநிலமான ஹிமாச்சலம்-ன்னு வெடி சிரிப்பு சிரிக்கிறார் கமலா தேவி. 2011 - 12 கணக்குப் படி சிக்கிமுக்கு அப்புறம், ஹிமாச்சலத்துல தான் 63% கிராமப் புற பொம்பளங்க வேலைக்கு போறாங்க. இந்தியாவுலேயே ரெண்டாவது அதிக கிராம பெண்கள் வேலைக்கு போற மாநிலம் நாங்க தான். இத உலக வங்கியே சொல்லி இருக்கு. இதை எல்லாம் விட எங்க கிராம பள்ளிக் கூடத்துக்கு வந்தப்ப பாத்தீங்கள்ள... அங்க டவுசர விட பாவாடைங்க அதிகம் இருக்கும். அது தான் முக்கியம்... பாத்து ஓடுங்க டா பக்கிகளா. சாப்பாட்டுக்கு ஓடுதுங்க" என்று அன்பில் கண்டிக்கிறார் ஊர் தலைவி கமலா தேவி. இவரின் புள்ளிவிவரங்களை எல்லாம் உலக வங்கியின் கட்டுரையும் தாங்கி இருக்கிறது.


 • ஊர் தலைவி

  "நான் சிறு வயசா இருக்குறப்ப, எங்க கிராமத்துக்கு தலைவராகுற கனவு கூட கண்டது இல்ல. இப்ப நானே பஞ்சாயத்து தேர்தல்ல நின்னு ஜெயிச்சு இருக்கேன்னா பாத்துக்குங்க. நடுவுல எங்க கிராமத்த பெண்கள் ரிசர்வ் தொகுதியா அறிவிச்சுது அரசு. அதனால் கெடச்ச நன்மைய ஒழுங்க பயன்படுத்திக்கிட்டேன்னும் சொல்லலாம். இப்ப ரிசர்வ் பண்ணலன்னா கூட ஜெயிச்சிடுவேன் போல" என்று மீண்டும் வெடி சிரிப்பு போடுகிறார். பொதுவாவே ஆம்பளங்க சில விஷயத்த சீரியஸா எடுத்துக்க மாட்டாங்க, குறிப்பா பொம்பளங்க சாமாச்சாரம். அந்த பொம்பளங்க சமாச்சாரத்த எல்லாம், எங்க ரீதியில சரி பண்ணோம், எங்களையும் நல்ல தலைவிங்களா எத்துக்கிட்டாங்க எங்க ஊர் ஆம்பளங்க. அத விட நாங்க சொல்ற நல்ல விஷயத்தை கேட்டுக்கிட்டாங்க, கெட்ட விஷயத்த விமர்சிக்காங்க." ஹே கி நஹி என்று அருகில் உள்ள ஆண்களையும் ஆமோதிக்க வைக்கிறார் கமலா தேவி.


 • பெண்கள் நிலை

  மேலே பார்த்தோமே 63 வயதில் கம்யூட்டர் கோர்ஸ் படிக்கும் பாட்டி இந்த ஊர் தலைவி கமலா தேவி தான். 22 வயது பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடாமல், சுய தொழில் கற்றுக் கொடுக்கும் சரிதா தேவி தான் நமக்கு ஜாம் தொழிற்சாலையை சுற்றிக் காட்டியவர். என் பொண்ணு வாழ்கையை முடிவு செய்ய நான் யார் என்று எதார்த்தத்தை உணர்ந்து பேசியவரும் அதே சரிதா தேவி தான். என் மகனுக்கு பொண்ணுங்கள எப்புடி மதிக்கணும்-ன்னு தினமும் கத்துக் கொடுக்கிறேன், அவன் பொண்ணுங்கள ஒரு சக மனிஷங்களா பாக்கணும், இப்ப எங்க ஊர் காரங்க, எங்கள பாக்குற மாதிரி என்று புன்னகையோடு தன் மகனைக் கொஞ்சுகிறார் வித்யா தோமர்.

  சம்பாத்தியம் புருஷ லட்சணம்-ங்குற விதி மாறணும், யார் வேணாலும் சம்பாதிக்கலாம். யார் வேணாலும் வீட்ட பாத்துக்கலாம்-ன்னு சரியா விதிய மாத்தி எழுதனும், எங்க பிசினஸ் மூலமா நாங்க மாத்தி எழுதிக் கிட்டு இருக்கோம் நீங்க...? நடு மண்டையில் நறுக்கென கொட்டுகிறார் ஊர் தலைவி கமலா தேவி.
"நாலு காசு பாத்தா தான் நம்மளையும் நாலு பேர் மதிப்பான்" "படிச்சா தான் உருப்புட முடியும் டீ" "தலைவிட்ட சொல்லி, தெரு விளக்கு சரி செய்யணும்"

"அவளுக்கு பிடிச்ச பையன கல்யாணம் பண்ணிக்கட்டுங்குறேன்" "டேய், அந்த அம்மாவே ஊருக்கு தலைவியா இருக்கட்டுமே" "பாட்டிக்கு வயசு 63, கம்யூட்டர் கோர்ஸ் போட்டிருக்கா, ரிலாக்ஸா படிக்கட்டுமே"

இந்த வரிகளை ஒரு ஆண் சொல்லலாம். ஒரு பெண் சொல்ல முடியுமா..? இந்திய நகர்ப் புற வீட்டு பெண்களுக்கு முடியும். ஆனால் இந்திய கிராம புறங்களில்... வட இந்திய கிராமங்களில்... வடக்கிலும், வடகோடி மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசத்தில்... சொல்கிறார்கள். புய்ரா கிராமத்தில் சொல்கிறார்கள். ஒரு தாய் மகளுக்கும், ஒரு ஊர்காரர் ஊர் தலைவியிடமும், ஒரு ஆண் சக பெண்ணிடமும் சொல்கிறார்கள். எத்தனை உயிர்ப்பாக இருக்கிறது. இனி அவர்களுடனேயே பயணிப்போம்.

   
 
ஆரோக்கியம்