Back
Home » Business
நீ உயிரோட இரு, இருக்காத, செத்துப் போ... எனக்கு லாபம் முக்கியம், அடித்துச் சொல்லும் amazon..!
Good Returns | 10th Oct, 2018 04:49 PM
 • ஒரு பெண்ணின் கதை

  நிடா கஸ்மி (Nida Kazmi), முன்னாள் ப்ளூம்பெர்க் ஊழியர். தன்னுடைய பிசினஸ் ஆசைக்கு தீனிப் போட்டுக் கொண்டு வெளியில் வந்தவர். அன்றைக்கு அமெரிக்காவில் அதிகம் போட்டி இல்லாத குழந்தைகளுக்கான பால் கலக்கிகளை (stackable baby formula dispensers)விற்கத் தயாரானார்.


 • அமேசான் ஆண்டவர்

  நேரடியாக அமேசானில் தன்னை பதிவு செய்து கொண்டு வியாபாரத்தைத் தொடங்கினார். ஒரு பால் கலக்கி 11.99 டாலர் என்று விற்கத் தொடங்கினார். சில மாதங்களிலேயே மாதத்துக்கு 1500 - 2000 டாலர் வரை விற்பனை செய்தார். சொல்லப் போனால் லாபமும் பார்க்கத் தொடங்கிவிட்டார். இந்த சந்தோஷ தருணத்தில் தான் அமேஸானிடம் இருந்து ஒரு மெயில் வருகிறது "உங்கள் அமேசான் விற்பனையாளர் கணக்கு நீக்கம் செய்யப்பட்டது. இனி நீங்கள் அமேசானில் பொருட்களை விற்க முடியாது" என ரத்தினச் சுருக்கமாக வருகிறது. காரணங்கள் சொல்லப்படவில்லை. அதிகம் நோண்டி விசாரித்த பின் "That is proprietary call" என்று ஒரு வரியில் பதில் வருகிறது. அதாவது, இது அமேசானின் ஓனராகிய எங்கள் முடிவு என்பதை ஆங்கிலத்தில் சொல்லி இருக்கிறார்கள்.


 • மீண்டும் போராட்டம்

  அமேசான் என்கிற ஒற்றை வலைதளத்தை நம்பித் தன் கடையை விரித்த கஸ்மிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு வழியாகப் போராடி தன் அமேசான் விற்பனையாளர் கணக்கை படாத பாடுபட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டார். இந்த தஸ்தாவேஜ் நடைமுறைகள் எல்லாம் முடிந்து மீண்டும் பழைய படி தன் பால் கலக்கிகள் அமேசானில் முதல் விற்பனை ஆவதற்கே இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. வெறுத்துவிட்டார்.


 • தேங்கிய சரக்குகள், சரிந்த சேமிப்புகள்

  பால் கலக்கிகள் எல்லாம் தயாராகி இரண்டு மாதங்களுக்கு மேல் கஸ்மியின் குடோன்களில் தங்கிவிட்டன. கையில் இருந்த சேமிப்புகள் மற்றும் வியாபார லாபம் அனைத்தும் இந்த இரண்டு மாதங்களில் வீட்டை நகர்த்த கரைந்துவிட்டது. அதோடு அமேஸான் வியாபாரிகள் தரப் பட்டியலில், கஸ்மியின் பொருட்கள் தரை தட்டி இருந்தன. லிஸ்ட் ஆகிய கீ வேர்டுகள் எல்லாம் வீணாகிவிட்டது. ஒட்டு மொத்தமாக கஸ்மியின் பொருட்களுக்கான ரேங்க் மிகவும் அடி வாங்கி இருந்தது. இனி என்னால் முடியாது, என தன் ஆசைகளுக்கு அணை போட்டுவிட்டு, வயிற்றுக்கு ஒரு வேலையை தேடி தற்போது சோஷியல் மீடியா கன்சல்டன்ட்-ஆக வேலை பார்த்து வருகிறாள்.


 • வங்கிக் கணக்கு மாத்துனா காலி

  Vladimir Vylegzhanin எனும் ஒரு வியாபாரி டேபிள் டென்னில் பேட்களை அமேஸானில் விற்று வந்தார். இவர் தன்னுடைய வங்கிக் கணக்கை அமேஸானிடம் சொல்லாமல் மாற்றியதற்கு, அமேஸானின் அல்காரிதம் இவர் வியாபாரி கணக்கை முடக்கிவிட்டது. அதே கடுப்பில் வெளியேறிவிட்டார். "அமேஸானுக்கு எப்போதும் வாடிக்கையாளர்கள் தான் முக்கியமே தவிர வியாபாரிகள் அல்ல" என்று கொந்தளிக்கிறார். இந்த இருவரும் எந்த தவறும் செய்யாத போது அமேஸான் இவர்களின் கணக்கை முடக்கி இருக்கிறது. ஏன் தெரியுமா...? எதிர்பார்த்த லாபம் வரவில்லை. இதை ஏதோ ஒரு நபர் செய்ய வில்லை. அமேஸானின் அல்காரிதம்கள் செய்திருக்கின்றன. எல்லாம் ஆர்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் (Artificial Intelligence) அல்காரிதம்கள். கணித்த லாபம் வரவில்லையா தூக்கி விடு. சரி ஏன் அமேஸானில் தான் வியாபார்ம பண்ணனுமா...? கொஞ்சம் பின் நோக்கி போவோம்.


 • வியாபாரிகள் நிலை

  "எங்களை எப்போதும் பிசினஸ் பார்ட்னர் என்று தான் அமேஸான் அதிகாரிகள் அழைப்பார்கள். ஆனால் எங்களை அப்படி நடத்துவதாகத் தெரியவில்லை. எங்கள் பொருட்களை எப்படி விற்க வேண்டும், என்ன விலை சொல்ல வேண்டும், என் பொருளை தேடி வருபவர்கள் எதை எல்லாம் பார்த்துவிட்டு என் பொருளை பார்க வர வேண்டும் என்று அனைத்தையும், தீர்மானிக்கும் சக்தி அமேஸான் தான். இதில் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்றே தெரியவில்லை" என்கிறார் டிராகன் க்ளாஸ்வேர் என்கிற கண்ணாடி டம்பளர்களை விற்ற மேட் ரோலன்ஸ் (Matt Rollens).


 • அமேஸான் Vs மற்ற இ-காமர்ஸ்

  அமேஸான் ஒன்றும் உலகின் முதல் ஆன்லைன் வியாபாரி அல்ல. இவர்களுக்கு முன்னாலேயே இ-பே போன்ற நிறுவனங்கள் இந்த துறையில் இருந்தன. இவர்களுக்கும் அமேஸானுக்கும் ஒரே வித்தியாசம் தான். அமேஸான் பல நாடுகளில் பரந்து விரிந்த குடோன்களை அமைத்து பொருட்களை போக்குவரத்து செய்யத் தொடங்கியது. இந்த ஒரு போக்குவரத்தை மற்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் செய்யவில்லை.


 • அமேஸானின் எந்திரன்

  அமேஸான் இயந்திரங்கள் மூலம் தன் லாபத்தை அதிகபப்டுத்தி வெற்றி பெற்றது. மிகப் பெரிய குடோன்களில் கூட ஒற்றை இலக்கத்தில் ஆட்களை வேலைக்கு வைத்துவிட்டு, அத்தனை பணிகளையும் இயந்திரங்களைக் கொண்டு செய்ய வைத்தது. ஒரு பொருளுக்கான ஆர்டர் எடுப்பதில் தொடங்கி, அவர் ஆர்டர் செய்த பொருள் அவருக்கு சென்று சேர்வது வரை பெரும்பாலான பணிகளை இயந்திரங்களையே பார்த்துக் கொள்ள வைக்கிறார்கள்.


 • அமேஸானின் இரும்புத் திரை

  இன்று வரை அமேஸானில் கோடிக்கணக்கான வியாபாரிகள் கடை விரித்திருப்பதாக சொல்கிறார்களே ஒழிய எத்தனை பேர் என்று சரியான கணக்கை எப்போதும் அமேஸான் சொல்வதில்லை. ஒவ்வொரு ஆண்டும் எங்களுடன் இத்தனை வியாபாரிகள் கை கோர்த்தார்கள் என்று சொல்லும் அமேஸான், எத்தனை பேர் வெளியேறினார்கள் என்பதை ஏன் சொல்வதில்லை என்று பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.


 • அமேஸான் லாபம்

  அமேஸான் வலைதளத்திலேயே வியாபாரிகளின் பொருட்களை விளம்பரம் செய்யக் காசு வாங்குகிறார்கள். இதுவே இன்று அமேஸானுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1.5 பில்லியன் டாலர் வருவாயைக் கொடுக்கிறது. ஒரு வியாபாரி இடம் அவர் பொருளை சரியாக பேக் செய்து, போக்குவரத்து செலவுகளை ஏற்று டெலிவரி செய்ய 2.41 டாலர் வாங்குகிறார்கள். அதோடு ரெஃபரல் ஃபீஸ் (Referral Fees) ஆக ஒரு டீலுக்கு 6% தொடங்கி 45% வரை வாங்குகிறார்கள். இதை எல்லாம் விட வியாபாரிகள் தங்கள் உற்பத்திக்கு தேவையான பொருட்களை வாங்க கூட வட்டிக்கு கடன் கொடுக்கிறது அமேஸான். வரும் வட்டி அனைத்தும் லாபம் தானே.


 • பிச்சை கேட்க வைக்கும் அமேஸான்

  "அமேஸான் என்ன தான் இயந்திரங்களையே அதிகம் நம்பி வேலை பார்த்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் தவறு நடக்கலாம். தவறான நபருக்கு பொருட்களை டெலிவரி செய்யலாம், எங்கள் போட்டியாளர்களே அமேஸானில் ஒரு வாடிக்கையாளர் போல புகார் எழுப்பலாம், பொருட்கள் நன்றாக இல்லை என்று நேரடியாக ரிவ்யூக்களில் குறை சொல்லலாம். இதை எல்லாம் அமேஸான் கவனித்து கொண்டே இருக்கும். இதில் அதிகம் புகார் வருவது, அதிக நெகட்டிவ் ரிவ்யூக்கள் வருவது போன்றவர்களை தனியாக கவனிக்கும். குறிப்பாக எதிர்பார்த்த லாபத்தை தராத வியாபாரிகளை முதலில் பட்டியலிட்டு அமேஸானின் அல்காரிதம்களே வியாபாரிகளின் கணக்குகளை முடக்கி விடும். இதற்குப் பெயர் CRAPsing out". அப்படி முடக்கிய வியாபாரிகளில் நானும் ஒருவன் என்கிறார் மேட் ரோலன்ஸ். இப்படி மில்லியன் டாலர்களில் வியாபாரம் செய்து கொண்டிருந்த பல வியாபாரிகளைக் கூட அமேஸான் கணித்த லாபத்தைக் கொடுக்கவில்லை என CRAPsing out முறையில் வெளியேற்றி இருக்கிறார்களாம்.


 • ரிவ்யூ தலைவலி:

  "வரும் ரிவ்யூக்களை வியாபாரிகள் சமாளித்தே ஆக வேண்டும், அமேஸானில் இருப்பது உங்கள் பணம், உங்கள் பொருட்கள் எனவே நீங்கள் ரிவ்யூக்களை முறையாக கையாளவில்லை என்றால் நிச்சயமாக எங்கள் அமேஸான் அல்காரிதம் உங்களை வெளியேற்றும்" என்று மேலும் பயமுறுத்துகிறார் அமேஸான் அதிகாரி மெக்கெப் (McCabe). சுருக்கமாக அவர்கள் எதிர் பார்த்த லாபம் இல்லை என்றால் மேலே சொன்ன அனைத்தையும் காரணம் காட்டி வியாபாரிகளை காலி செய்துவிடுவார்கள்.


 • அமேஸான் வியாபாரிகளுக்கு

  "எங்களுக்கு இந்த ரிவ்யூக்களை கையாள்வதே மிகப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. நாங்கள் உற்பத்தியில் கவனம் செலுத்த்வோமா அல்லது இப்படி மார்க்கெட்டிங் தொடர்பாகவே பல மணி நேரங்களை செலவழிப்போமா... அமேஸானில் வியாபாரம் செய்பவர்கள், மற்ற சில இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலமாகவும் வியாபாரம் செய்ய வேண்டும். இந்த ஒரு விஷயம் உங்கள் வியாபாரத்தை மொத்தமாக முடக்காமல் பார்த்துக் கொள்ளும்." என்று ஒரு ஃப்ரீ அட்வைஸ் கொடுக்கிறார்கள் அமெரிக்க வியாபாரிகள்


 • Monopsony

  "இங்கு அமேஸான் "Monopsony" ஆக இருக்கிறது. அதாவது எல்லாரும் என் கிட்ட தான டா வரணும், வாங்க. மொல்லமா வாங்க. நான் தான் எல்லா பொருளையும் வாங்கணும், பாத்துக்குறேன். எப்படி இருந்தாலும் நான் தான் உங்க எல்லா பொருளையும் எல்லாருடைய பொருளையும் வாங்கணும் என்று இருக்கிறது. இந்த நிலை எப்போது மாறுமென்று தெரியவில்லை. அது வரை வியாபாரிகள் உயிரோட இருந்தால் என்ன, செத்தால் என்ன... அமேஸான் அதன் லாபம் தான் முக்கியம் என்று வியாபாரிகளின் வாழ்கையில் விளையாடிக் கொண்டே இருப்பான்" எனக் கண்ணீரில் கரைகிறார் அந்த வியாபாரி.
அமேசான் நிறுவனம், தன் வலை தளத்தில் பொருட்களை விற்கும் வியாபாரிகளிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லி இருக்கிறது. உலகின் மொத்த இ-காமர்ஸ் சந்தையில் 44 சதவிகிதம் அமேஸானின் கைவசம். இ-காமர்ஸ் வாடிக்கையாளர்களில் 52 சதவிகிதத்தினர் நேரடியாக அமேஸான் வலைதளத்தில் புகுந்து ஆர்டர் செய்கிறார்கள். இந்த இரண்டும் தான் amazon-ன் அசுர பலம்.

   
 
ஆரோக்கியம்