Back
Home » திரைவிமர்சனம்
'கூத்தன்'... தங்கத்துக்காக படம் பார்க்கலாமா...! விமர்சனம்
Oneindia | 11th Oct, 2018 04:55 PM

சென்னை: பொது நலனுக்காக டான்ஸ் போட்டியில் கலந்துகொண்டு ஜெயிக்கப் போராடும் நாயகன் தான் இந்த கூத்தன்.

ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கலையரசியின் (ஊர்வசி) மகன் ரானா (ராஜ்குமார்). தனது பிலிம் நகர் காலனியில் உள்ள இளைஞர்களுடன் சேர்ந்து பேட்டரி பாய்ஸ் எனும் டான்ஸ் குரூப் வைத்து நடனமாடி வருகிறார். பரத கலைஞர் தேவியின் (கீரா) தங்கை ஸ்ரீ லக்ஷமிக்கு (ஸ்ரீஜிதா கோஷ்) வெஸ்டர்ன் டான்சில் வென்று, தங்கள் குடும்ப எதிரி கிருஷ்ணாவின் (நாகேந்திர பிரசாத்) முகத்தில் கரிபூச வேண்டும் என்பது லட்சியம். இதற்கிடையே ஸ்ரீஜிதாவுக்கும், ராஜ்குமாருக்கும் இடையே நட்பு உருவாகி காதலாக மலர்கிறது. இந்நிலையில், தாங்கள் குடியிருக்கும் பிலிம் நகர் காலனியை ஒரு கோடி ரூபாய் கொடுத்து மீட்க வேண்டிய சூழல் நாயகனுக்கு ஏற்படுகிறது. இதற்காக ஆசிய அளவில் நடக்கும் டான்ஸ் போட்டியில் கலந்துகொள்கிறார். நடனத்துறையில் கோலோச்சி நிற்கும் நாகேந்திர பிரசாத்தை வென்று, ராஜ்குமார் எப்படி பிலிம் நகரை மீட்கிறார் என்பது தான் படம்.

டி.ராஜேந்தர் குரலில் 'மங்கிஸ்தா கிங்கிஸ்தா' செம குத்து குத்த வைக்கிறது. கூத்தனம்மா கூத்து, காதல் காட்டுமிராண்டி பாடல்கள் கேட்பதற்கு மிக அருமை. சொல்லாத சொல்லாத, தீராத தீண்டல்கள் பாடல்கள் நல்ல மெலடிக்கள். பாடல்களை சிறப்பாக கொடுத்த இசையமைப்பாளர் பால்ஸ் ஜி, பின்னணி இசையில் சொதப்பியிருக்கிறார்.

எடுத்தவுடன் பாடல்கள் பற்றி ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், படத்தை பார்க்க முக்கிய காரணமாக இருப்பது இசை மட்டுமே. மற்றபடி படத்தில் குறிப்பிடும்படியான விஷயம் என்றால், ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கும் காமெடி.

ஏற்கனவே நாம் பார்த்து பழகிய அதே டான்ஸ் பட டெம்ப்ளேட்டில் மற்றொரு படமாக வந்திருக்கிறான் இந்த கூத்தன். காதல், சென்டிமெண்ட், காமெடி, நிறைய டான்ஸ் என ஒரு முழுமையான கமர்சியல் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ.எல்.வெங்கி.

வழக்கமான டான்ஸ் படம் என்பதால் திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. பிலிம் நகர், சினிமா கனவு, படத்திற்குள் படப்பிடிப்பு என ஒரு சில விஷயங்கள் மட்டுமே ரசிக்க வைக்கின்றன.

வில்லனாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் நாகேந்திர பிரசாத்தை தமிழ் சினிமா வரவேற்கிறது. படத்தின் கதை களம் தனது ஏரியா என்பதால், இறங்கி அடித்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் எக்ஸ்பிரஷன்ஸ்களை மெருகேற்றினால் நல்ல கம்பேக்காக இருக்கும் நாகு.

அறிமுக நாயகன் ராஜ்குமார் நன்றாக ரொமான்ஸ் செய்கிறார். ஒரு சில இடங்களில் கொஞ்சம் நடித்திருக்கிறார். ஆனால் இது டான்ஸ் படம் என்பதால் இன்னும் நிறைய மெனக்கெட்டிருக்க வேண்டும். அடுத்தடுத்தப் படங்களில் பார்க்கலாம் ராஜ்குமார்.

படத்தில் அதிகமாக ஸ்கோர் செய்வது ஸ்ரீஜிதா கோஷ் தான். பரதம், வெஸ்ட்டர்ன் என சூப்பர் பெர்பாமென்ஸ். இவருக்கு அடுத்தபடியாக கீரா, சோனல் சிங். எல்லா நாயகிகளுமே நன்றாக இருக்கிறார்கள்.

தனது வழக்கமான நடிப்பால் படத்தை ஓரளவுக்கு தாங்கி பிடிக்கிறார் ஊர்வசி. அதேபோல ஸ்ரீ ரஞ்சனியும் நிறைவாக செய்திருக்கிறார். இவர்களை தவிர, பாக்யராஜ், மனோபாலா, ராம்கி, கலா மாஸ்டர், ஜூனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்ணன், சஞ்சய் அஸ்ரானி, ஆடம்ஸ், பிரியதர்ஷினி, ரம்யா என ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. எல்லோருமே ஊறுகாய் போல ஒவ்வொரு காட்சியில் வந்துவிட்டு போகிறார்கள்.

மங்களம் சாராக மாற முயற்சி செய்திருக்கிறார் சன்டிவி ஆடம்ஸ். ஆனா ஒர்க்கவுட் ஆகல ப்ரோ. ஒளிப்பதிவாளர் மாடசாமி, படத்தொகுப்பாளர் பீட்டர் பாபியா, கலை இயக்குனர் ஆனந்தன் உள்பட எல்லோருமே கொடுத்த பட்ஜெட்டுக்குள் வேலை பார்த்திருக்கிறார்கள்.

கூத்தன் என்றால், கூத்து எனும் ஆடல் கலையில் வல்லவன் என்று பொருள் கூறுகிறது விக்கிபீடியா. ஆனால் இந்த கூத்தன் வல்லவன் இல்லை.

கூத்தன் படம் பார்ப்பவர்களில் 18 பேருக்கும் குலுக்கல் முறையில் ஒரு பவுன் தங்கம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன். எனவே படத்தை பார்த்து தங்கம் வெல்வதா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

   
 
ஆரோக்கியம்