Back
Home » சிறப்பு பகுதி
பிறந்தநாள் கொண்டாடும் ராம்.. ஒரு உலக சினிமா இயக்குனரா? இதோ பதில்!
Oneindia | 11th Oct, 2018 07:20 PM

சென்னை: கற்றது தமிழ் தங்க மீன்கள் போன்ற சிறந்த படங்களைக் கொடுத்த இயக்குனர் ராமுக்கு இன்று 44வது பிறந்தநாள்.

இயக்குனர் ராம் ஒரு உலக சினிமா இயக்குனர் என்று மொழியப்படும் போது சில கேலிக் குரல்களைக் கேட்க முடியும். இவரெல்லாம் உலக சினிமா எடுக்கும் இயக்குனரா? என்பர். அந்த ஆரய்ச்சிக்குள் போவதற்கு முன்பு, ஒரு குட்டிக்கதையை நீங்கள் கேட்க வேண்டும்.

ஒரு கடலில் வாழும் திமிங்கிலம், அதை விட அளவில் சிறியதாக இருக்கும் மீன்களை இரையாக்குகிறது. அதன் கொலைப் பசிக்கு பல மீன்கள் பலி கொடுக்கப்படுகின்றன. மிகச் சிறிய மத்தி மீனை விழுங்க திமிங்கிலம் வாயைப் பிளந்துகொண்டு வரும்போது 'என்னை ஏன் நீ சாப்பிட வேண்டும்' என மத்தி கேட்கிறது. 'எனக்கு பசிக்கிறது, அதனால் நான் உன்னை இரையாக உண்ணப்போகிறேன்' என்கிறது திமிங்கிலம். 'முடியாது, இதை நான் அனுமதிக்கமாட்டேன், எனக்கு வாழவேண்டும் என ஆசை இருக்கிறது. நீ என்னை சாப்பிடக்கூடாது' என்று கண்டிப்போடு சொல்கிறது மத்தி.

சரி நான் உன்னை சாப்பிடவில்லை. நீ தாரளமாக வாழலாம், ஆனால் ஒரு கண்டிஷன். நான் உன்னை சாப்பிடக்கூடாது என்றால் என்னை நீ விழுங்கிவிடு என திமிங்கிலம் சொல்கிறது. அதிர்ந்துபோன மத்தியோ நீ எவ்வளவு பெரிய உருவம்? என்னால் எப்படி உன்னை சாப்பிட முடியும்? எனக் கேட்கிறது. முடியாதில்லையா அதனால்தான் நான் உன்னை சாப்பிட்டு என் பசியையாற்றிக் கொள்கிறேன் எனச் சொல்லி மத்தியை விழுங்குகிறது திமிங்கிலம்.

இதுதான் வணிக உலகின் நியதி. இந்த கதையில் வரும் மத்தியின் மனநிலையை, அதன் கஷ்டத்தை, ஆதங்கத்தை திரையில் காட்டும் வல்லமை பெற்ற சில இயக்குனர்களில் முக்கியமானவர் ராம். ராமின் படங்கள் இந்த வணிகச் சூழலில் சிக்கிகொண்டு தப்பிக்க முடியாமல் தவிக்கும் பலரின் எண்ணக் குமுறல்களையும், வேதனையின் எச்சத்தையும் சொல்ல எத்தனிக்கின்றன.

உலக மயமாக்கல் வந்த பிறகு, ஜெர்மனியின் ஈசான்ய மூலையில் பன் சுட்டு விற்கும் பாட்டியின் கைவண்ண ஃபார்முலாவில் தயாரான பர்கர் பழவந்தாங்கலில் கிடைக்கிறது. ஆனால், அது நமக்குத் தேவையா என்ற கேள்வியை யார் கேட்பது? யார் யோசிப்பது? ராம் கேட்கிறார். அவர் யோசிக்கிறார். தங்க மீன்கள் படத்தில் செல்லம்மா சிம்கார்டு விளம்பரத்தைப் பார்த்து அதில் வரும் நாய்க்குட்டி வேண்டுமென்று கேட்பதாய் இருக்கட்டும், அதை வாங்கித்தர அவளின் தாய் முயற்சிப்பதாகட்டும் இவையெல்லாம் உலக மயமாக்களின் தாக்கத்தால் பெருகிப்போன வணிக அரக்க மனப்பண்மைக்கு இரையாகும் எளியோரின் பரிதாப நிலை.

கற்றது தமிழ் திரைப்படம், தமிழ்ப் படித்தவனுக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை என்பதை மட்டும் கேட்கவில்லை. சொந்த மண்ணில் சொந்த மொழியைப் பயின்றவன் ஏன் மதிக்கப்படமால் போனான் என்ற கேள்வி உலகமயமாக்களின் வணிக அராஜகத்துக்கு சால்ரா தட்டும் அரசியலுக்கு எதிராக எழுப்பப்பட்ட கேள்வி. 1991 ல் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை மாற்றப்பட்டு உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என ஆனபிறகு பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்தன. பொறியியல் கணினி துறையில் பாண்டித்தியம் பெற்றவர்கள் அந்த நிறுவனங்களுக்கு தேவையாக இருந்தனர். அதனால் புற்றீசல்கள் போல பொறியியல் கல்லூரிகள் முளைத்தன. மொழி, கலை தொடர்பான படிப்பில் ஆர்வம் காட்டும் மாணவர்ளுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குவதில் அரசு மெத்தனமானது.

ஐடி வேலை செய்தால் மட்டுமே கௌரவம் என்ற நிலை உருவானது. அப்போது கணிதம் அறிவியலில் அதிக மதிப்பெண் எடுத்தும் ஆர்வமாக தமிழ் இலக்கியம் படித்ததனால் அலைக்கழிக்கப்படும் ஒருவனே கற்றது தமிழ் பிரபாகர். ஆங்கிலம்பேசி அதிக சம்பளம் வாங்குபவனைப் பார்த்து ஏங்குவது, தமிழ் தன்னைக் கைவிட்டுவிட்டதே எனக் கோப்படுவது என தமிழ்படித்த பலரின் குமுரல்களை ராமின் பிரபாகர் பிரதிபலித்தான். உலக மயமாக்கலை வேறொரு கோணத்தில் அனுகியது அவரின் தரமணி.

இயக்குனர் ராம் எதைவேண்டுமானாலும் இந்தியாவில் விற்பனை செய்துவிடலாம் என்ற உண்மையை தனக்கு தெரிந்த திரைமொழிகளில் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார். நிச்சயம் அவரும் ஓர்நாள் இந்தியாவில் அதிகம் வாங்கப்படும் பிராண்டாக மாறுவார். அந்தநாள் எளிய மனிதர்களின் எண்ணக் குமுரல்களுக்கு வணிகக் கோட்பாடுகள் வாயசைக்கும் நாளாக இருக்கும் என நம்புவோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராம்!

   
 
ஆரோக்கியம்