Back
Home » பயணம்
இனிமையான சூழலுடன் காட்சியளிக்கும் கம்மம் பற்றி தெரியுமா?
Native Planet | 12th Oct, 2018 06:13 PM

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள கம்மம் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகராகவும் திகழ்கிறது. மாநிலத் தலைநகரமான ஹைதராபாதிலிருந்து இது 273 கி.மீ தூரத்தில் உள்ளது. சமீபத்தில் கம்மம் நகரைச் சுற்றியிருந்த 14 கிராமப்பகுதிகளையும் சேர்த்து ஒரு முனிசிபல் கார்ப்பரேஷனாக இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வரலாற்றுப்பின்னணி உள்ளூர் பாரம்பரியக்கதைகளின்படி, ஆதியில் இந்த கம்மம் நகரம் இங்குள்ள நரசிம்மாத்ரி கோயிலை மையமாக கொண்டு ஸ்தம்ப ஷிகாரி என்றும், பின்னர் ஸ்தம்பாத்ரி என்றும் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மருக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. 16 லட்சம் வருடங்களுக்கும் முற்பட்ட திரேதா யுகத்திலிருந்து இந்தக் கோயில் இருந்து வருவதாக புராண நம்பிக்கைகள் நிலவுகின்றன. மலையின் உச்சியில் வீற்றுள்ள இந்த கோயிலுக்கு கீழ் தூண் போன்ற செங்குத்தான குன்று காணப்படுகிறது. இந்த மலைக்குன்றின் காரணமாகவே 'கம்மம்' என்ற தனது பெயரை இந்நகரம் பெற்றுள்ளது. 'கம்பம் மேடு' என்ற பெயரில் அழைக்கப்பட்டு பின்னர் 'கம்மமேடு' என்று திரிந்து இறுதியில் 'கம்மம்' என்பதாகவே இந்நகரத்தின் பெயர் சுருங்கி நிலைத்துவிட்டது. இந்த பதிவில் இந்த ஊரைப் பற்றியும் இதன் சிறப்புகளைப் பற்றியும் காணலாம்.

Shashank.u

கிருஷ்ணா ஆற்றின் துணையாறுகளுள் ஒன்றான முன்னேரு எனும் அழகிய ஆற்றின் கரையில் இந்த கம்மம் நகரம் உருவாகியுள்ளது. புகழ்பெற்ற கம்மம் கோட்டை கம்மம் நகரத்தில் மட்டுமல்லாமல் ஆந்திர மாநிலத்திலேயே முக்கியமான வரலாற்றுச்சின்னமாக அறியப்படுகிறது. ஒரு மலையின் மீது கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த கோட்டை வரலாற்று கால இந்தியாவின் மேன்மையை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல் பலவித கட்டிடக்கலை அம்சங்களின் கலவையான கலைப்படைப்பாகவும் காட்சியளிக்கிறது.

கம்மம் நகரில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அறியப்படும் கோயில்களும் மசூதிகளும் அருகருகே அமைந்திருப்பது ஒரு விசேஷமான அம்சமாக கருதப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் நகரங்களில் ஒன்றாக இந்த கம்மம் நகரம் பிரசித்தமாக அறியப்படுகிறது. கம்மம் நகரத்துக்குள்ளும் அதை சுற்றியும் பல முக்கியமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன. இவற்றில் கம்மம் கோட்டை, ஜமாலபுரம் கோயில் மற்றும் கம்மம் லட்சுமி நரசிம்மர் கோயில் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை தவிர பாலாயிர் ஏரி, பப்பி கொண்டலு மலைகள் மற்றும் வய்யர் ஏரி போன்ற இயற்கை எழில் சுற்றுலா தலங்களும் கம்மம் நகரைச்சுற்றி அமைந்துள்ளன.

Pavithrans

கம்மம் நகருக்கு விஜயம் செய்வதற்கு இதமான இனிமையான சூழலுடன் காட்சியளிக்கும் குளிர்காலமே ஏற்றதாக உள்ளது. வருடமுழுதுமே வெப்பப்பிரதேச பருவநிலை நிலவுவதால் குளிர்காலத்தில் அதிகக்குளிர் நிலவுவதில்லை. ஆனால் கோடையில் அதிக வெப்பநிலை காணப்படுவதால் அப்பருவத்தை தவிர்ப்பது நல்லது. மழைக்காலத்தின்போது ஓரளவு வெப்பநிலை குறைந்தாலும் ஈரப்பதம் அதிகமாக காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்மம் கோட்டையானது, 950 ம் ஆண்டுகளில் இப்பகுதி காகதீய வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தபோது கட்டப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவர்களது ஆட்சியில் இதன் கட்டுமானம் முடிக்கப்படவில்லை. அவர்களுக்கு அடுத்து, முசுனுரி நாயக்கர்கள் மற்றும் வேலமா வம்ச மன்னர்கள் இந்த கோட்டைக் கட்டுமானத்தை முடித்துள்ளனர். மேலும், பின்னாளில் 1531ம் ஆண்டில் குதுப் ஷாஹி வம்சத்தினர் இந்த கோட்டை வளாகத்தில் கூடுதலாக புதிய மாளிகைகளையும் இணைப்புகளையும் நிர்மாணித்துள்ளனர்.

Pavithrans

ஹிந்து மற்றும் இஸ்லாமிய பாணி இரண்டும் கலந்த கட்டிடக்கலை அம்சங்களை இந்த கோட்டை அமைப்பில் பார்க்க முடிகிறது. இரண்டு மரபுகளையும் சேர்ந்த மன்னர்களின் ஆட்சியில் இந்த கோட்டையின் கட்டுமானம் உருவாக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம். 1000 வருடங்கள் கழிந்தபின்னரும் தன்னுடைய புராதன பொலிவு குன்றாமல் இந்த கோட்டை கம்பீரமாக வீற்றிருக்கிறது. கம்மம் பகுதியின் வரலாற்று பின்னணியோடு தொடர்புடைய இந்த கோட்டை ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக கம்மம் நகரம் மற்றும் ஒட்டுமொத்த ஆந்திரம் மாநிலத்தையும் பெருமைப்படுத்தும் விதத்தில் வீற்றுள்ளது. இந்த கோட்டை ஸ்தலத்தை ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக பராமரிப்பதற்காக ஆந்திர மாநில அரசாங்கமும் அதிக நிதியை செலவிட்டுள்ளது.

Shashank.undeela

மாநிலத்தின் இதர பகுதிகளுடன் நல்ல முறையில் சாலைப்போக்குவரத்து மற்றும் ரயில் இணைப்புகளை கம்மம் நகரம் பெற்றுள்ளது. கம்மம் நகரத்தில் விமான நிலையம் இல்லை. இருப்பினும், அருகிலேயே ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் அமைந்திருப்பது வசதியாகவே உள்ளது. இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் கம்மம் நகரம் வழியாக செல்வதால் சாலைப்போக்குவரத்து வசதிகளுக்கும் குறைவே இல்லை. மாநில அரசு போக்குவரத்துக்கழகம் எல்லா முக்கிய ஆந்திர நகரங்களிலிருந்தும் பேருந்து சேவைகளை கம்மம் நகரத்துக்கு இயக்குகிறது. மேலும் விசாகப்பட்டிணம் - ஹைதரபாத் ரயில் பாதையில் அமைந்திருப்பதால் கம்மம் நகரத்திற்கான ரயில் நிலையத்திலிருந்து இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவைகள் கிடைக்கின்றன.

   
 
ஆரோக்கியம்