Back
Home » திரைவிமர்சனம்
துரோகம், வன்மம், ரவுடியிசம்.. ரத்தம் தெறிக்கும் ‘வடசென்னை’ - விமர்சனம்
Oneindia | 17th Oct, 2018 09:46 PM

சென்னை: சென்னையின் வடக்கு பகுதியில் வாழும் குடிசை பகுதி மக்களின் வாழ்வியலை பதிவு செய்கிறது வடசென்னை திரைப்படம்.

1987ம் ஆண்டில் இருந்து படம் தொடங்குகிறது. சமுத்திரகனி, கிஷோர், பவன், தீனா ஆகிய நான்கு பேரும் மட்ட (கொலை) செய்த கையோடு ஒரு ஓட்டலில் அமர்ந்து பேசுகிறார்கள். கிஷோரின் திட்டப்படி சமுத்திரகனியும், பவனும் சிறைக்கு செல்கிறார்கள். கிஷோர் அவர்களை ஜாமீனில் எடுக்கத் தவறுவதால், நால்வர் அணி இரு கோஷ்டிகளாக பிரிகிறது. இதையடுத்து கதை 2000வது ஆண்டுக்கு முன்னகர்கிறது. கேரம்போர்டு ப்ளேயரான அன்பு (தனுஷ்) சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை போட்டுதள்ள பவனின் கோஷ்டி துடிக்கிறது. அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, எதிர் கோஷ்டியான கிஷோரிடம் அடைக்கலம் ஆகிறார். தனுஷ் யார், அவர் ஏன் சிறைக்கு வருகிறார் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை தேடி பயணிக்கிறது படம்.

மேலே சொன்னவை வடசென்னை படத்தின் திரைக்கதை வடிவம் தான். ஆனால் படத்தின் கதை என்பது வேறு. அதை சொல்லிவிட்டால் படம் பார்க்கும் சுவாரஸ்யம் போய்விடும் என்பதால் அதை தவிர்த்திருக்கிறோம்.

திரைக்கதை அமைப்பதில் தான் ஒரு வல்லவர் என்பதை நிரூபித்திருக்கிறார் வெற்றிமாறன். முதல் பாதி முழுவதும் முன்னுக்கு பின்னாக காட்சிகள் நகர்கின்றன. இடைவேளை வரை கதாபாத்திரங்களின் அறிமுகமே நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமாக கதை சொல்லப்படுகிறது.

இதனால் முதல் பாதி வரை படத்துடன் ஒன்ற முடியவில்லை. ஆனால் இரண்டாம் பாதி அதை அப்படியே புரட்டிப்போட்டு, திரையில் இருந்து கண்களை அகலவிடாமல் செய்கிறது. அதுவும் அமீர் வரும் காட்சிகள் செம மாஸ்.

'அன்புவின் எழுச்சி' என்ற எண்டு கார்டுடன் இரண்டாம் பாகத்துக்கு அறிமுகம் கொடுத்து படம் முடிகிறது. இதனால் ஒரு முழுப்படம் பார்த்த திருப்தி ஏற்படவில்லை என்பது நிதர்சனம்.

வெற்றிமாறனின் மனதில் வடசென்னையின் பிம்பம் எப்படி பதிந்திருக்கிறது என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அநாயசமாக கெட்டவார்த்தை பேசுகிறது. ஆண், பெண் என்ற விதிவிலக்கெல்லாம் இல்லை.

வடசென்னை என்றாலே குப்பம், அடிதடி, சண்டை, ரவுடியிசம், கெட்டவார்த்தை என காட்டியிருப்பது ஏன் வெற்றிமாறன். அதுவும் படத்தில் வரும் ஒரே ஒரு கதாபாத்திரத்தை தவிர மற்றவர்கள் எல்லோரும் தப்புத்தப்பாக ஆங்கிலம் பேசுகிறார்கள். அதேபோல், ராஜீவ்காந்தி, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களின் மரணங்களைப் பதிவு செய்துள்ள இயக்குநர், ஆனால் அப்போது ஏற்படும் கலவரங்களில் வடசென்னை மக்கள் கடைகளைச் சூறையாடுவது போன்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். வடசென்னை மக்கள் பற்றி இப்படியான பிம்பம் சரிதானா?, தேவைதானா?

நாங்கள் வடசென்னை மக்களின் வாழ்வியலை பதிவு செய்யவில்லை என படத்தின் துவக்கத்திலேயே அறிவிப்பு பலகை ஒன்றை போட்டுவிட்டு, எஸ்கேப் ஆகும் யுத்தியை கையாண்டிருக்கிறார் இயக்குனர். ஆனால் தனுஷ் போன்ற ஒரு மாஸ் ஹீரோ நடிக்கும் படத்தை பார்க்கும் சராசரி ரசிகன், வடசென்னை என்றால் இப்படி தான் என புரிந்துகொள்ளமாட்டானா.

முதலில் சொன்னது போல், தனது திறமையான திரைக்கதையால், இப்படி எந்த கேள்வியும் எழாதபடி பார்த்துகொள்கிறார் வெற்றிமாறன். இந்த படம் சொல்லும் செய்தி, வடசென்னை மக்கள் ரவுடியிசம் செய்வது தங்களுடைய நிலத்துக்கான போராட்டம் என்பதாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

இதனை உணர்த்தும் வகையிலான சக்தி வாய்ந்த வசனங்கள் பல படத்தில் இடம்பெறுகின்றன. "நம்முடைய பாதுகாப்புக்காக நாம சண்ட செய்யுறது ரவுடியிசம்ன்னா... அத நாம நிச்சயம் செய்வோம்", "நம்ம ஊருக்காக நாம தான் சண்டை செய்யணும்... தோக்குறோமா ஜெயிக்குறோமாங்குறது முக்கியமில்ல... முதல்ல சண்ட செய்யணும்", இப்படி பல வசனங்களை சொல்லலாம்.

படத்தில் வருபவர்கள் எல்லாமே தேர்ந்த நடிகர்கள் என்பதால், படம் பார்க்கும் உணர்வைத் தாண்டி, வடசென்னையில் குடிபுகுந்த எண்ணமே மேலோங்குகிறது. தனுஷின் நடிப்பு மிக அபாரம். கேரம் போர்டு ஆடும் சிறுவன், ஐஸ்வர்யாவைச் சுற்றி சுற்றிக் காதலிக்கும் ரோட்சைட் ரோமியோ, நாமளும் ஆளுன்னு காட்ட கொலை செய்வது, விசுவாசத்துக்காக ஜெயிலில் வாடுவது, ஊருக்காக சண்டை செய்வது என முதல் பாதியிலேயே மூன்று விதமாக வாழ்ந்திருக்கிறார்.

'இந்த பொண்ண உண்மையிலேயே காசி மேட்லருந்து புட்சிக்கின்னு வந்திங்களாடானு' ஆச்சர்யப்பட வைக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். எடுத்த எடுப்பிலேயே கெட்ட வார்த்தை பேசி, தனுஷுக்கு லிப்லாக் கொடுத்து என அவரும் தன் பங்குக்கு அட்ராசிட்டி செய்கிறார்.

ஆண்ட்ரியாவுக்கு மிக அழுத்தமான கதாபாத்திரம், "நான் ராஜன் பொண்டாட்டிடா" என அவர் சொல்லும் போது மெய்சிலிர்க்கிறது. கிஷோர், டேனியல் பாலாஜி, சமுத்திரகனி, பவன் என அனைவருமே அயிட்டங்காரன்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் அமீர். சமுத்திரகனிக்குகூட வடசென்னை பாஷை நான்சிங்கில் இருக்கிறது. ஆனால் அமீர் அச்சு அசலாக பொருந்துகிறார். ராஜன் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு நியாயம் செய்திருக்கிறார்.

படத்தை ஹைடெம்போவில் வைப்பதற்காக பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஆனால் பாடல்கள் திரையில் கேட்கும் போது பொருந்தவில்லையோ எனத் தோன்றுகிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் 'செட்' தான். படத்தின் காலகட்டம் 1980களில் இருந்து 2000வது ஆண்டுகளில் நடக்கிறது. மிகவும் மெனக்கெட்டு, அந்த காலத்து பொருட்களை எல்லாம் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதுவும் அந்த சென்ட்ரல் ஜெயில் செட் உண்மையிலேயே அமேசிங் ஜாக்கி.

வேல்ராஜின் ஒளிப்பதிவும் படத்துக்கு பெரிய ப்ளஸ் தான். காசிமேட்டில் இருந்து வண்ணார்பேட்டைக்குள் புகுந்து அப்டியே கொருக்குப்பேட்டை வழியாக திருவொற்றியூர் சென்ற உணர்வு கிடைக்கிறது படத்தை பார்க்கும் போது. முன்னுக்கு பின்னாக மாறி மாறி வரும் திரைக்கதையில், பார்வையாளர்களை குழப்பாமல் தெளிவாக காட்சிகளை கோர்த்திருக்கிறார்கள் படத்தொகுப்பாளர்கள் ஜி.பி.வெங்கடேஷ் - ஆர்.ராமர்.

திலிப் சுப்பராயணின் இயக்கத்தில் சண்டைக்காட்சிகளில் ரத்தம் தெறிக்கிறது. ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் ரவுடிகள், தங்களுக்கு கிடைக்கும் பொருட்களை வைத்து எப்படி எல்லாம் ஆயுதம் தயாரிப்பார்கள், சண்டை செய்வார்கள் என்பதை ஆராய்ந்து சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

துரோகம், வன்மம், ரவுடியிசம், கத்தி, துப்பாக்கி, வெடிகுண்டு என ரத்தம் சொட்டச் சொட்ட வந்து நிற்கிறது வடசென்னை. இயக்குனர் வெற்றிமாறன் - நடிகர் தனுஷ் கூட்டணி மேலும் ஒரு வெற்றிக்கனியை பறித்திருக்கிறது.

   
 
ஆரோக்கியம்