Back
Home » திரைவிமர்சனம்
பெண் சிங்கத்திடம் இருந்து ‘ஆட்டை’ காக்கும் புலி.. சண்டக்கோழி 2 விமர்சனம்
Oneindia | 18th Oct, 2018 09:58 PM

சென்னை: கோயில் திருவிழாவை பிரச்சினையின்றி நடத்தி முடிக்க பல பேரை அடித்து துவம்சம் செய்யும் நாயகனே இந்த சண்டக்கோழி 2.

இரு பிரிவினரிடையே ஏற்படும் மோதலில் பல உயிர்கள் பலியாக, ஏழு ஆண்டுகளாக தடைபட்டு நிற்கிறது வேட்டை கருப்பன் கோயில் திருவிழா. அதை மீண்டும் நடத்த ஏழு ஊர்க்காரர்களையும் அழைத்து பஞ்சாயத்து பேசி சத்தியம் வாங்கி, திருவிழாவுக்கு கொடியேற்றுகிறார் அய்யா ராஜ்கிரண். ஆனால் எதிர்கோஷ்டியில் எஞ்சியுள்ள வாரிசை போட்டுத்தள்ளியே தீருவது என துடிக்கிறது மற்றொரு கோஷ்டி. ஆனால் அந்த வாரிசை அடைகாத்து பாதுகாக்கிறார் ராஜ்கிரண். இந்நிலையில் ஊர் திருவிழாவில் பங்கேற்க வெளிநாட்டில் இருந்து திரும்புகிறார் சண்டக்கோழி விஷால். அதில் இருந்து ஆரம்பிக்கிறது ஆடு புலி ஆட்டம். புலி ஆட்டை கொன்றதா என்பதே படம்.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே பயணிக்கிறது கதை. அதை உறுத்தலில்லாமல் கச்சிதமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி. தன்னுடைய வழக்கமான விறுவிறு திரைக்கதையால் காட்சிகளை நகர்த்தி அசத்தி இருக்கிறார்.

13 ஆண்டுகளுக்கு முன் பார்த்த அதே சண்டக்கோழியாக விஷால். எந்த மாற்றமும் இல்லாமல் தனக்கே உரித்தான ஆக்ஷன் ஏரியாவில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். அதிகம் சவுண்ட் கொடுக்காமல் அண்டர்ப்ளே நடிப்பில் ரசிக்க வைக்கிறார்.

கம்பீரத்துக்கு மறுபெயர் ராஜ்கிரண். முதல் பாகத்தை போலவே இதிலும் மிரள வைக்கிறார். சாந்தமான முகத்தில் அவர் காட்டும் அதிரடி ரியாக்ஷன்களும், நல்லி எலும்பை நறுக்கென கடிப்பதும் என அதிர வைக்கிறார். என் ராசாவின் மனசிலேல ஆரம்பிச்சு, இப்ப வரைக்கும் இந்த நல்லி எலும்பைக் கடிக்கிறத விட மாட்ரீங்களே சார்.

கிராமத்து தேவதையாக கீர்த்தி சுரேஷ். 'யோவ் போயா போயா' என சொல்லும் கம்பத்து பொண்ணுக்கு ஆயிரம் லைக்ஸ். காட்டன் ஹாப் சாரியில் அழகோ அழகு கீர்த்தி.

பார்வையிலேயே பயமுறுத்துகிறார் வரலட்சுமி. ஒரு சில காட்சிகளில் காஞ்சனா சரத்குமாரின் சாயல் தெரிகிறது. முதல் சில காட்சிகளில் பயமுறுத்தும் வரு, அடுத்தடுத்த காட்சிகளில் வசனம் மட்டுமே பேசி பயத்தை போக்குகிறார்.

'ஜானி' ஹரிக்கு இந்த படத்தில் வலுவான கதாபாத்திரம். சிறப்பாக செய்திருக்கிறார். காமெடி ஏரியாவுக்கு முனீஸ்காந்த், கஞ்சா கருப்பு. ஓரளவுக்கு ஸ்கோர் செய்கிறார்கள்.

சண்முகராஜன், ஜோ மல்லூரி, மாரிமுத்து என படத்தில் வரும் அனைவருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு பிரேமிலும் குறைந்தது பத்து, பதினைந்து பேர் இருப்பதால் யாருக்கும் பெரிதாக பெர்பாமென்ஸ் செய்ய வேண்டிய கட்டாயம் எழவில்லை.

கிராமத்து திருவிழாவை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார் ஒளிப்பதிவாளர் சக்தி. மிக தத்ரூபமான செட் அமைப்பால் விழா களைகட்டுகிறது. முதல் பாதி விறுவிறுப்பை இரண்டாம் பாதியிலும் கொண்டு வந்திருக்கலாம் எடிட்டர் பிரவீன் கே.எல்.

பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. கம்பத்து பொண்ணு பாடல் செம மெட்டு. ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்க வைத்திருக்கிறார் சண்டை பயிற்சியாளர் அனலரசு.

பில்டப் வசனங்கள் வரும் போதெல்லாம், அவர்களாகவே அதை காலி செய்கிறார்கள். அதைத்தவிர பிருந்தாசாரதி, எஸ்.ராவின் வசனங்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.

ஏற்கனவே பலமுறை பார்த்து அலுத்தபோன காட்சிகளை மீண்டும் பயன்படுத்தி இருப்பதை தவிர்த்திருக்கலாம். முதல் பாகத்தில் இருந்த அந்த மேஜிக் இதில் மிஸ்ஸிங். சமையலுக்கு காய் வெட்டுவதற்கு கூட வீச்சரிவாளை பயன்படுத்தி இருக்கிறார்கள். எதுக்கு பாஸ் இத்தனை அரிவாள்கள். பல நூறு பேரை அடித்து துவைத்துவிட்டு, அமைதி தூதர் போல விஷால் வசனம் பேசுவது எல்லாம் டூ டூ மச் ப்ரோ.

சண்டக்கோழி முதல் பாகம் விஷாலின் இரண்டாவது படமாக வெளிவந்தது. தற்போது சண்டக்கோழி 2 அவரது 25வது படமாக வெளிவந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் என வளர்ந்து நிற்கிறார் விஷால். எதிர்காலத்தில் அரசியல் குதிக்கும் எண்ணத்தோடு காய் நகர்த்தி வரும் விஷாலுக்கு இந்தப்படம் நிச்சயம் உதவும்.

முதல் பாகத்தில் சண்டக்கோழியாக இருந்த விஷால் இந்த படத்தில் சமாதான புறாவாக மாறியிருக்கிறார்.

   
 
ஆரோக்கியம்