Back
Home » திரைவிமர்சனம்
விளையாடு மகனே விளையாடு... 'ஜீனியஸ்' சொல்லும் மெசேஜ்! விமர்சனம்
Oneindia | 26th Oct, 2018 12:26 PM

சென்னை: குழந்தைகளுக்கு எந்நேரமும் படிப்பை மட்டுமே திணித்தால், பிற்காலத்தில் அவர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாக்கப்படுவார்கள் என்ற மையக் கருவை வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ஜீனியஸ்.

நாயகன் தினேஷ் குமார் (ரோஷன்)பள்ளியில் படிப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் சிறந்த மாணவர். படிப்பு மட்டுமின்றி அனைத்துப் போட்டிகளிலும் முதல் மாணவராக வந்து பாராட்டுகளைப் பெறுகிறார். தனது மகனின் அபார அறிவாற்றலைக் கண்டு வியக்கும் அவரது தந்தை (ஆடுகளம் நரேன்), அவரை மேலும் புத்திசாலியாக்க தினேஷை எந்நேரமும் படிபடி என அழுத்தம் தருகிறார். இதனால் தனது சிறுவயது சந்தோஷங்களை இழக்கும் தினேஷ், ரோபோ போல் மாறுகிறார். இதே அழுத்தம் வேலையிலும் தொடர்கிறது. நன்றாக வேலை செய்யும் தினேஷுக்கு, அவரது முதலாளி மேலும் அழுத்தம் தந்ததால், மனப்பிறழ்வு ஏற்படுகிறது. அவருடைய அதிபுத்திசாலித்தனமே அவருக்கு எமனாகிறது. இந்தப் பிரச்சினைகளில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதே படம்.

ஒரு குறும்படத்துக்கான கான்செப்டை வைத்துக்கொண்டு, தனது திறமையான திரைக்கதையால் முழுநீளப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். வாழ்வில் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினை என்பதால், பார்வையாளர்கள் மிக எளிதாக படத்துடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது.

மதிப்பெண்கள் தான் முக்கியம் என்பது பல பெற்றோர்களின் மனதில் ஆழமாக புதைந்து போன கருத்து. மற்ற குழந்தைகளைவிட நமது குழந்தைகள் பின் தங்கி விடக்கூடாது என்பதே அவர்களது முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. இதற்காக ஒரு அப்பா எந்த எல்லை வரையும் செல்வார் என்பதை நரேனின் கதாபாத்திரம் தெளிவாக உணர்த்துகிறது.

படத்தில் நிறைய எமோஷனலான காட்சிகள் இருக்கின்றன. ஆனால் அந்தக் காட்சிகள் முடியும் தருவாயில் அதை காமெடியாக்கி கலகலக்க வைத்திருக்கிறார் இயக்குனர். ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல், குடும்பமாக சென்று பார்க்கக் கூடிய படமாக ஜீனியஸ் இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் இந்த படத்தை என்ஜாய் செய்கிறார்கள்.

முதல்பாதியில் நேர்கோட்டில் செல்லும் கதை, இரண்டாம் பாதியில் ஜாஸ்மின் (பிரியா லால்) கதாபாத்திரத்தின் எண்ட்ரிக்கு பிறகு வேறு ரூட் எடுத்து சினிமாத்தனமாக மாறிவிடுகிறது. அதேபோல ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதும் பரிவு ஏற்பட வேண்டும் என்பதற்காக நிறைய நியாயம் சொல்லியிருக்கிறார் இயக்குனர். க்ளைமாக்ஸில் குழந்தை பாட்டுடன் படத்தை முடிக்கும் தனது சென்டிமெண்ட்டை, இந்த படத்திலும் வைத்திருக்கிறார் சுசீந்திரன். அது நன்றாகவே வேலை செய்கிறது.

தயாரிப்பாளர் ரோஷன் இந்த படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். ஹீரோ மெட்டிரியலாக தன்னை மாற்றிக்கொள்வதற்காக நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். சீரியஸ், காமெடி, சென்டிமெண்ட் என முதல் படத்துக்கு இது ஓகே. பால்யத்தில் இழந்தவற்றை மீண்டும் பெற ஏக்கப்படும் காட்சிகள் ஆகட்டும், அவற்றை பெறும் போது குழந்தையாகவே மாறி குதூகலிக்கும் காட்சிகள் ஆகட்டும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ரோஷன்.

கொஞ்ச நேரமே வந்தாலும், தனது சாந்தமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார் ஹீரோயின் பிரியா லால். ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மீரா கிருஷ்ணன் என படத்தில் நடித்த அனைவருமே தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி, சிங்கமுத்து ஆகியோரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம்.

யுவனின் இசையில் விளையாடு மகனே விளையாடு, சிலு சிலு பாடல்கள் காதில் ரீங்காரமிடுகின்றன. குறிப்பாக பாடல் வரிகளை புரியும் வகையில் இசையமைத்திருப்பதற்கு பாராட்டுகள். சிலு சிலு பாடலில் சின்ன சின்ன பழமொழிகளை பயன்படுத்தி இருப்பதும் கவனம் ஈர்க்கிறது. வைரமுத்து வரிகளில் விளையாடு மகனே விளையாடு பாடல், மனதை நெகிழச் செய்கிறது. படத்துடன் ஒன்றியிருப்பதால், பின்னணி இசையை பற்றி தனியாக சொல்ல வேண்டிய அவசியம் ஏதும் ஏற்படவில்லை.

சிலு சிலு பாடலில் குழந்தையின் மனதை திரையில் கொண்டுவந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ். ஆனால் ஒரு சில இடங்களில் தேவையில்லாத இந்த ஹெலிகேம் ஷாட்டுகளை தவிர்த்திருக்கலாம். ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் படத்தை நறுக் என தந்ததற்காகவே எடிட்டர் தியாகுவிற்கு தனி பாராட்டுக்கள்.

குழந்தைகளை பிராய்லர் கோழிகளாக அடைத்து, எந்நேரமும் படிப்பு, படிப்பு என விடுமுறைகளில் கூட அவர்களை விளையாட விடாமல் தடுத்து வைக்கும் மனப்போக்கு இன்றைய பெற்றோர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. அடுத்தவர்களுக்காக தங்களின் குழந்தைகளையும் ஓடு ஓடு என அவர்களின் கால்களில் சக்கரங்களைக் கட்டி பறக்க, பதற விடுகிறார்கள். எல்லாம் அவர்களின் எதிர்காலத்திற்குத் தான் என தங்களுக்குத் தாங்களே சமாதானமும் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், இந்த நிலை நீடித்தால் ஜீனியஸ்களும் என்ன ஆவார்கள் என்பதைத் தெளிவாக சொல்கிறது இந்த 'ஜீனியஸ்'.

[ஏன் பிரசன்னா, உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை?]

சமுதாயத்திற்குத் தேவையான கருத்தை சரியான நேரத்தில் படமாகத் தந்ததற்காக இந்த ஜீனியஸை பாராட்டலாம். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்லது என நாம் செய்யும் அனைத்துமே நிச்சயம் நல்ல பலனைத் தான் தருமா, என ஒவ்வொரு பெற்றோரும் ஒருமுறைக்கு பலமுறை சிந்திக்க உதவுகிறது இந்தப் படம்.

   
 
ஆரோக்கியம்