Back
Home » பயணம்
பிரதமர் மோடியே நேரில் செல்லும் கேதார்நாத் தீபாவளி எப்படி இருக்கும் தெரியுமா?
Native Planet | 5th Nov, 2018 04:55 PM
 • கேதார்நாத்தில் தீபாவளி

  மற்ற இந்திய மாநிலங்களில் இருப்பதை போன்ற சூழ்நிலை இல்லை இந்த கேதார்நாத் பகுதியில். இங்கு ஏற்கனவே குளிர் அதிகமாக இருக்கும். தற்போது ஐப்பசி மாதம் வேறு.. குளிர் வாட்டி எடுக்கும். இந்த சமயத்தில் கேதார்நாத் மக்கள் தீபாவளி பண்டிகையை குளிரையும் பொருட்படுத்தாது மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.


 • அதிரும் இசை மழை

  நிச்சயமாக வண்ண வண்ண விளக்குகளைப் பற்றி பார்க்கவேண்டும் ஆனால் அதையும் விட சிறப்பான ஒரு விசயம் இசை. இசை மழையில் நனைந்து பல்வேறு நடனங்களையும் இங்கு ஏற்பாடு செய்வார்கள். அதிலும் பிரதமர் வருவதாக இருந்தால், நிச்சயம் நிகழ்ச்சி களைகட்டும். அதிக அளவில் அலங்காரங்கள் செய்யப்பட்டு, நாளை மிக முக்கியத்துவம் வாய்ந்த தீபாவளி பண்டிகை கொண்டாடும் இடமாக கேதார்நாத் இருக்கப் போகிறது.


 • மின்னும் ஒளியும் வண்ண விளக்குகளும்

  இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போலத்தான். அதிரும் சரவெடிகளின் சத்தமும் இருக்கும். ஆனால் இந்த முறை கட்டுப்பாடுகள் இருப்பதால், பட்டாசு ஒளிகள் சற்று குறைவாகவே இருக்கும். கேதார்நாத் மலைப் பிரதேசம் என்பதால் அங்குள்ள மக்கள் பெரும்பாலும் சத்தம் இல்லா தீபாவளியையே கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒளி திருவிழா என்பதாலும், பிரதமர் வருகை தர இருப்பதாலும் அதிக அளவு விளக்குகள் சூழப்பட்டு, நல்ல அழகிய காட்சிகளைக் கொண்ட கேதார்நாத்தை நாம் காணமுடியும் என்று நம்புகிறோம்.


 • கேதார்நாத் எப்படிபட்டது தெரியுமா?

  தீபாவளி ஒருபுறம் இருக்கட்டும். இந்த கேதார்நாத் பகுதி எப்படி பட்டது தெரியுமா.. அதுகுறித்தும் கொஞ்சம் தெரிந்துகொள்வோமே.
  இந்தியாவில் இந்துக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் இந்த கேதார்நாத் எனும் ஆன்மீக யாத்திரை ஸ்தலம் உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இமயமலையின் கர்வால் மலைத்தொடர்களில் கடல்மட்டத்திலிருந்து 3584மீ உயரத்தில் இந்த கேதார்நாத் கோயில் ஸ்தலம் அமைந்துள்ளது.


 • கேதார்நாத் கோவில்

  கேதார்நாத் கோயில் ஹிந்து மரபின் முக்கிய ஆன்மீக கேந்திரமாக வணங்கப்படுகிறது. 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான ஜோதிர்லிங்கம் இக்கோயிலில் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது. பிரம்மாண்டமான மந்தாகினி ஆறு இக்கோயிலுக்கு அருகிலேயே ஓடுகிறது. கோடைக்காலத்தில் இந்த ஸ்தலத்துக்கு ஏராளமான யாத்ரீகர்கள் சிவபெருமானை வழிபட வருகை தருகின்றனர்.


 • அமைப்பு

  1000 வருடங்கள் பழமையானதாக கருதப்படும் கேதார்நாத் கோயிலானது ஒரு செவ்வக வடிவிலான மேடைத்தளத்தின்மீது அழகாக வெட்டப்பட்ட பெரிய பாறைப்பலகைகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. கருவறைக்கு செல்லும் பாதையில் பாலி மொழியில் எழுதப்பட்ட பல கல்வெட்டுக்குறிப்புகளையும் காண முடிகிறது. 3584மீ உயரத்தில் அமைந்துள்ளதால், சார் தாம் கோயில்களில் யாத்திரை மேற்கொள்வதற்கு மிகச்சிரமமான கோயில் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 • கொண்டாட்டம் சந்தேகமே?

  தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்த கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், பூசைகளும் நடைபெறுமா என்ற சந்தேகம் இருக்கிறது. கோடைக்காலத்தின் 6 மாதங்களில் மட்டுமே இக்கோயிலுக்கு பக்தர்களும் யாத்ரீகர்களும் விஜயம் செய்ய முடியும். குளிர்காலத்தில் கடும்பனிப்பொழிவால் இப்பகுதி சூழப்பட்டிருக்கும் என்பதால் அக்காலத்தில் இக்கோயில் மூடப்படுகிறது. மேலும் இப்பகுதியில் தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் யாவுமே குளிர்காலத்தில் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டிருக்கும்.


 • வாழ்வதற்கே முடியாத நிலையில் கொண்டாட்டம்?

  மே மாதம் மற்றும் அக்டோபர் மாதத்திற்கு இடையே உள்ள பருவம் கேதார்நாத் புனித ஸ்தலத்திற்கு பயணம் மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் இப்பகுதியில் சுற்றுச்சூழல் இனிமையானதாக காட்சியளிக்கிறது. கடும் பனிப்பொழிவின் காரணமான கேதார்நாத்தில் வசிக்கும் உள்ளூர் மக்கள் குளிர்காலத்தில் தற்காலிகமாக இடம் பெயர்ந்து விடுவர் என்பது ஒரு குறிப்பிடத்தக்க தகவலாகும். இப்போது தீபாவளி பண்டிகை எந்த பகுதியில் கொண்டாடப்படும் என்பது கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது. ஆனால் நம் பிரதமர் இதுபோன்ற பனிப்பிரதேசங்களில் கடந்த தீபாவளிகளை கொண்டாடி அங்கிருப்பவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

  All photos taken from Wikicommons

  PC: Wikicommons
இந்தியாவின் வடபகுதியில் உள்ள இந்த உத்தரகண்ட் மாநிலமானது உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தமான சுற்றுலா கேந்திரமாக புகழ் பெற்று விளங்குகிறது. 'தேவர்களின் பூமி' என்றும் 'பூலோக சொர்க்கம்' என்றும் அழைக்கப்படும் இந்த எழிற்பிரதேசத்தின் அழகு வாழ்நாளில் ஒருமுறை இந்தியர் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. உத்தரகண்ட் மாநிலம் வடக்கில் திபெத் நாட்டையும் கிழக்கில் நேபாள நாட்டையும் எல்லைகளாக கொண்டு அமைந்திருப்பதால் இந்திய புவியியல் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாநிலமாகவும் விளங்குகிறது. இங்கு தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வாருங்கள் நாமும் அந்த மாநிலத்தில் நடைபெறும் தீபாவளி பண்டிகையில் கலந்துகொள்வோம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

   
 
ஆரோக்கியம்