Back
Home » திரைவிமர்சனம்
‘சர்கார்’.. கார்ப்பரேட் மான்ஸ்டரின் அரசியல் புரட்சி! - விமர்சனம் #sarkar #sarkarreview
Oneindia | 7th Nov, 2018 07:13 AM

சென்னை: ஒவ்வொரு குடிமகனும் தங்களுடிடைய ஓட்டை சரியான முறையில் பதிவு செய்தால், நாட்டில் நல்ல சர்கார் அமையும் என்கிறது விஜய்யின் சர்கார்.

அமெரிக்காவில் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் உயரதிகாரியான சுந்தர் (விஜய்), செல்லும் இடமெல்லாம் தன் புத்திசாலித்தனத்தால் கம்பெனிகளை வளைத்துப் போடுகிறார். இதனால் பெரிய பெரிய கார்ப்பரேட் முதலாளிகள் இவரைப் பார்த்து பயந்து ஓடுகின்றனர். இந்நிலையில் இந்தியா வருகிறார் சுந்தர். இங்கே எந்த கம்பெனியை அவர் குறி வைத்துள்ளாரோ என அனைவரும் பீதியில் இருக்க, தனது ஜனநாயகக் கடமையை, அதாங்க ஓட்டுபோடுவதற்காக தமிழகம் வந்திருப்பதாகக் கூறி அதிர வைக்கிறார்.

ஆனால், பெரு மூளைக்காரனான சுந்தரையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார்கள் நம்மூர் அரசியல்வாதிகள். ஆம், அவரது ஓட்டை வேறு யாரோ ஒருவர் போட்டுவிட, அதிர்ச்சி ஆகிறார் சுந்தர். தேர்தலை ரத்து செய்யக் கோரி, அதில் வெற்றியும் பெறுகிறார். இதனால் அரசியல்வாதிகளின் எதிர்ப்பிற்கு ஆளாகிறார். இதன் தொடர்ச்சியாக தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிரான தனது ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் கார்ப்பரேட் கிரிமினல் சுந்தர். ஓட்டின் மதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

ஒரு பிரச்சினையைப் பற்றி மட்டும் பேசாமல், நெல்லை கந்துவட்டியால் ஒரு குடும்பமே தீக்குளித்த சம்பவம் என்பது போன்ற, தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பல பரபரப்பு சம்பவங்களைப் பற்றிப் பேசியிருப்பதால், எளிதாக படத்துடன் ஒன்ற முடிகிறது.

[சண்டக்கோழி 2-ஐ அடுத்து சர்காரிலும் கீர்த்தியை ஓரங்கட்டிய வரலட்சுமி: மாஸ் நடிப்பு]

விஜயின் அறிமுகக் காட்சிக்கு முன்னரே அவரைப் பற்றிய பில்டப்புகளால் திரையரங்கமே அதிர்கிறது. படம் முழுவதும் செம ஸ்டைலிஷாக வரும் விஜய், ஆக்சன் காட்சிகளில் அதகளப் படுத்தியிருக்கிறார். தனது ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைத்திருக்கிறார். ஏ,பி,சி என அனைத்து சென்டர்களிலும் சர்கார் ராஜ்ஜியம் தான்.

தனது முந்தைய படங்களில் இருந்து வேறுபட்டு, படத்தின் தொடக்கத்திலேயே கதைக்குள் இறங்கியிருக்கிறார் முருகதாஸ். இதனாலேயே படம் தொய்வு இல்லாமல் விறுவிறுப்பாக நகர்கிறது.

அரசியல் கனவில் இருக்கும் விஜய்க்கு இது முக்கியமான படம். ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை படம் முழுக்க விஜய்யின் சர்கார் தான். விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு நடைபாதை அமைத்து கொடுக்கும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

ஐஎம் ஏ கார்ப்பரேட் கிரிமினல், உங்க ஊரு தலைவனை தேடிப்பிடிங்க, இது தான் நம்ம சர்கார் என தெறிக்கவிடும் பன்ச் டயலாக்குகள் ஏராளமாக இருக்கின்றன.

அழகு தேவதையாக ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷுக்கு விஜய்யை ரொமான்ஸ் செய்யும் வாய்ப்பு. இரண்டாவது படத்திலும் அதனை மிகத் திறமையாக செய்திருக்கிறார். வரலட்சுமியின் வில்லத்தனம் செம ஹைப்பாக இருக்கிறது. முதல்வரின் மகள் கோமலவள்ளியாக மிரட்டல் நடிப்பைத் தந்திருக்கிறார். இரண்டாம் பாதியில் இவரும், விஜயும் மோதிக் கொள்ளும் காட்சிகளில் அனல் பறக்கிறது.

ராதாரவி, பழ.கருப்பையா எல்லாம் அசல் அரசியல்வாதிகள் என்பதால், அந்தந்த கதாபாத்திரத்திற்கு யதார்த்தமாக பொருந்துகிறார்கள். காமெடிக்கு என முதல் பாதியில் ஒரு சில நிமிடங்களே வந்து போனாலும், விலா எலும்பு நோக சிரிக்க வைக்கிறார் யோகிபாபு. பின்பாதி முழுக்க விஜய்யுடனேயே பயணிக்கும் பாத்திரம் அவருக்கு. அதிலும் மனிதர் பின்னி பெடலெடுக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் செம. சிம்டாங்காரன் பாடலுக்கு தியேட்டரே எழுந்து ஆடுகிறது. ஒரு விரல் புரட்சி செம வைரல். பின்னணி இசை காட்சிக்கு காட்சி ஹார்ட் பீட்டை எகிற வைக்கிறது. ரஹ்மான் ரஹ்மான் தான்.

ஒவ்வொரு ஷாட்டையும் மாஸாக வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரன். செம டீட்டெயிலிங்காக செய்திருக்கிறார். படத்தின் டெம்போ குறைந்து விடாமல் கச்சிதமாக செதுக்கியிருக்கிறார் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். ராம் லக்‌ஷ்மண் ஆக்சன் காட்சிகளில் விஜயை நன்றாக பயன்படுத்தியிருக்கின்றனர். சண்டைக் காட்சிகள் அசர வைக்கின்றன. ஆனால், ஆங்காங்கே கொஞ்சம் லாஜிக் மிஸ் ஆவதைத் தவிர்த்திருக்கலாம்.

எனது வாக்காள பெருமக்களே என சர்கார்மூலம் தனது அரசியல் என்ட்ரியை அழுத்தமாக அறிவித்திருக்கிறார் விஜய். நிச்சயம் முருகதாஸ் - விஜய் கூட்டணிக்கு இப்படம் ஹாட்ரிக் வெற்றியைத் தரும்.

   
 
ஆரோக்கியம்