Back
Home » பயணம்
இந்திய நேபாள எல்லையில் இப்படி ஒரு விசித்திர பகுதி
Native Planet | 7th Nov, 2018 12:49 PM
 • எப்படி அடையலாம்


  சென்னையிலிருந்து செல்பவர்களுக்கு அவ்வளவு எளிதில்லை என்றாலும், சுற்றுலா செல்பவர்கள் இதையும் தங்கள் பயணத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம். விமானம், ரயில், சாலை வழியாக இந்த இடங்களுக்கும் பயணம் செல்ல முடியும்.


 • விமானம் மூலமாக

  அருகிலுள்ள விமான நிலையம் - பான்ட்நகர் விமான நிலையம்

  தொலைவு - 241 கிமீ

  அமைவிடம் - உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிட்டால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து பேருந்து டாக்ஸி வசதிகள் உள்ளன.

  ஏர்இந்தியா விமான நிறுவனம் 10 ஆயிரம் ரூபாய் செலவில் சேவை வழங்குகிறது. அதே நேரத்தில் சலுகைகள் மூலமாக 5 ஆயிரம் வரைக்கும் பயண கட்டணத்தை குறைக்கும் வகையிலும் சில வசதிகள் உள்ளன.


 • ரயிலும் சாலையும்

  ரயில் மூலமாக

  சென்னையிலிருந்து நேரடி ரயில்கள் இல்லை. டெல்லி வரை ரயிலில் சென்று அங்கிருந்து வேறு ரயில் மூலம் அடையலாம். அல்லது கொல்கத்தா வரை ரயிலில் சென்று அங்கிருந்தும் வேறு ரயில் சேவைகள் இருக்கின்றன.

  சாலை வழியாக

  இந்த இடம் டெல்லியிலிருந்து 457 கிமீ தூரத்திலும், நைனிட்டாலிலிருந்து 218 கிமீ தூரத்திலும், பத்ரிநாத்திலிருந்து 329 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானம் அல்லது ரயிலில் சென்று அங்கிருந்து சாலை மூலமாக பயணிக்கலாம். நேரடி பயணம் ஆபத்தானதும் கூட.


 • வரலாறு

  காளி ஆறு இம்மாவட்டத்தையும் நேபாள பகுதியையும் பிரிக்கிறது. இங்குள்ள பெரும்பாலான புராதனக்கோயில்கள் மற்றும் கோட்டைகள் போன்றவை பால் மற்றும் சந்த் வம்சத்தை சேர்ந்த மன்னர்களால் கட்டப்பட்டிருக்கின்றன. 15ம் நூற்றாண்டில் இப்பகுதி பிராஹ்ம் மன்னர்களால் சிறிது காலத்திற்கு ஆளப்பட்டிருக்கிறது. பின்னர் சந்த் வம்சத்தினர் இப்பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றும் வரையில் ஆண்டு வந்துள்ளனர்.


 • வளங்கள்

  பித்தோராகர் பகுதியில் குமோனி மொழியானது இங்கு வசிக்கும் பூர்வ குடிகளால் பேசப்படுகிறது. சுண்ணாம்புக்கற்கள், செம்பு, மக்னீஷயம் மற்றும் சிலேட் போன்ற இயற்கைத்தாதுபொருட்கள் இப்பகுதியில் ஏராளமாக கிடைக்கின்றன. சல், சிர் மற்றும் ஓக் மரங்கள் அடர்ந்த பசுமை மாறாக்காடுகளால் இப்பகுதி சூழப்பட்டிருக்கிறது. ஹிமாலயன் சமோயிஸ், சம்பார் மான் மற்றும் புலி போன்றவற்றோடு வேறு பல ஊர்வன ஜந்துக்களும் பறவைகளும் இங்கு காணப்படுகின்றன.


 • ஆன்மீகப் பயணம்

  பல கிறித்துவ தேவாலயங்கள், கிறித்துவ ஸ்தாபன பள்ளிக்கூடங்கள் மற்றும் கட்டிடங்கள் ஆகியவை ஆங்கிலேயர் காலத்திலேயே இம்மாவட்டத்தில் எழுப்பப்பட்டுள்ளன. பித்தோராகர் மாவட்டத்திற்கு வருகை தரும் பயணிகள் இங்குள்ள கபிலேஷ்வர் மஹாதேவ் கோயில் எனும் பிரசித்தமான கோயிலை தரிசிக்கலாம். இது ஒரு சிவன் கோயிலாகும்.


 • சுற்றுலாத் தளங்கள்

  அஷுர் சுலா :

  பித்தோராகர் நகரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள அஷுர் சுலா எனும் ரம்மியமான சரணாலயத்திற்கும் பயணிகள் விஜயம் செய்து மகிழலாம். இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 5412 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

  முன்ஷ்யாரி :

  முன்ஷ்யாரி எனும் பிரசித்தமான சுற்றுலாத்தலம் ஜோஹர் பகுதிக்கான நுழைவாயிலாக அமைந்துள்ளது. இந்த நுழைவாயில் பகுதி மில்லம், நாமிக் மற்றும் ரலாம் பனிமலைகளுக்கான பாதைகளை இணைக்கிறது.

  பித்தோராகர் கோட்டை :

  பித்தோராகர் கோட்டை இப்பகுதியின் புகழ் பெற்ற சுற்றுலா அம்சமாக கம்பீரமாக வீற்றிருக்கிறது. இது 1789ம் ஆண்டில் பித்தோராகர் பகுதியை ஆக்கிரமித்த கூர்க்கா வம்சத்தாரால் கட்டப்பட்டிருக்கிறது.

  அஸ்கோட் மஸ்க் டீர் சரணாலயம் :

  கஸ்தூரி மான்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அஸ்கோட் மஸ்க் டீர் சரணாலயத்திற்கும் பயணிகள் செல்லலாம். இந்த சரணாலயத்தில் கஸ்தூரி மான்கள் தவிர சிறுத்தை, காட்டுப்பூனை, புனுகுப்பூனை, குரைக்கும் மான், கோரல், பழுப்புக்கரடி, பனிச்சிறுத்தை, ஹிமாலய கருப்பு கரடி மற்றும் பரல் போன்ற விலங்குகளையும் இங்கு பார்க்கலாம். மேலும் பனிக்கோழி, மோனல், காக்கை மற்றும் சுக்கோர் போன்ற பறவைகளும் இங்கு வசிக்கின்றன.

  ஜௌல்ஜிபி :

  பித்தோராகர் நகரிலிருந்து 68 கி.மீ தூரத்தில் ஜௌல்ஜிபி எனும் மற்றொரு பிரசித்தமான சுற்றுலாத்தலமும் அமைந்துள்ளது. இது கோரி மற்றும் காளி ஆறுகள் சந்திக்கும் ஸ்தலமாகும்.

  இது மட்டுமின்றி, தால் கேதார், சன்தக், பாதாள்புவனேஸ்வர், நாராயண் ஆஸ்ரமம், ஜூஹல்காட், சவுக்கோரி, நகுலேஸ்வரா கோவில், தவாஜ் கோவில் ஆகிய இடங்களுக்கும் மக்கள் அதிக அளவில் செல்கிறார்கள்.


 • பண்பாட்டு நிகழ்வுகள்

  துணி ஓவியம்

  துணிகளிலும் சுவர்களிலும், தாள்களிலும் கோலங்கள் வரைவது இப்பகுதி மக்களின் கலை ஆகும். அய்ப்பன் அல்லது அல்பனா என்று அழைக்கப்படும் இந்த கலை உடைகளிலும், துப்பட்டாகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

  களிமண் சிலை

  சிறப்பு நாள்களில், விழாக்களில் களியால் பொம்மைகள், கடவுள் உருவங்கள் செய்து வழிபடுகிறார்கள்.

  மோஸ்தமனு விழா

  ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் இந்த விழா மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

  சிவராத்திரியின் போது நடைபெறும் கபிலேஷ்வர் விழாவும், கலப்பானி பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவும், கோரி பள்ளத்தாக்கில் நடைபெறும் குஞ்சி கானர் தேவி விழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

  All Photos are taken from
  PC: pithoragarh
உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பித்தோராகர் மாவட்டம் இமயமலைத்தொடர்களுக்கான நுழைவாயிலாக அமைந்துள்ளது. இது ஒரு புறம் சோர் பள்ளத்தாக்கு பகுதியையும் மறுபுறம் அல்மோரா மாவட்டத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. இது நிச்சயம் சென்று காணவேண்டிய பல சுற்றுலாத் தளங்களை உள்ளடக்கியுள்ளது. வாருங்கள் பித்தோராகர் பற்றியும் இதன் சுற்றுலா அம்சங்கள் பற்றியும் காணலாம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

   
 
ஆரோக்கியம்