Back
Home » திரைவிமர்சனம்
மாமியாரிடம் களவாணித்தனம் செய்யும் மாப்பிள்ளை.. ‘களவாணி மாப்பிள்ளை’ - விமர்சனம்
Oneindia | 8th Nov, 2018 01:52 PM

சென்னை: மாமியாரிடம் களவாணித்தனம் செய்யும் மாப்பிள்ளையின் தில்லாலங்கடி எபிசோட் தான் களவாணி மாப்பிள்ளை திரைப்படத்தின் கதை.

தொழிலதிபர் தேவயானிக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை பொய். கார் ஓட்ட தெரியாததை மறைத்து தன்னிடம் பொய் சொன்னதற்காக கணவர் ஆனந்தராஜையே ஓரங்கட்டி டம்மி பீஸாக வைத்திருக்கும் அளவுக்கு கறார்காரர். இவருடைய மகள் அதிதி மேனன் எதிர்பாராத விதமாக நாயகன் தினேஷ் மீது காதலில் விழுகிறார். ஆனால் தினேஷுக்கு வாகன தோஷம் இருப்பதால், டூவிலர், ஃபோர் வீலர் என எதையும் ஓட்டத்தெரியாது. இதனால் கிராமத்தில் ஆடு, மாடுகளை மட்டும் ஓட்டித் திரிகிறார்.

தனக்கு வண்டி ஓட்டத் தெரியாது என்பதை மாமியார் தேவயானியிடம் மறைத்து, காதலியை கரம்பிடிக்க முயல்கிறார் தினேஷ். தன்னை மதிக்காமல் நிச்சயிக்கப்படும் இந்த கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என அதிரிபுதிரி வேலைகள் செய்கிறார் மாமனார் ஆனந்த்ராஜ். கல்யாணம் நடக்கவும், தடுக்கவும் இருவரும் செய்யும் களவாணி வேலைகள் தான் படம்.

தனது தந்தை மணிவாசகத்தை போலவே, முதல் படத்தை பி மற்றும் சி ஆடியன்சுக்கு தகுந்த மாதிரி கமர்சியலாக எடுத்திருக்கிறார் காந்தி மணிவாசகம். அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார். படத்தின் திரைக்கதையை கொஞ்சம் சுவாரஸ்யமாக அமைத்திருந்தால், இன்னும் ரசித்திருக்கலாம்.

யதார்த்த சினிமாவில் இருந்து விலகி கமர்சியல் பக்கம் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார் தினேஷ். காமெடி ஏரியா என்பதால் கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார். காலரை தூக்கி கெத்து காட்டுவதோடு தனது கடமையை நிறைவு செய்திருக்கிறார்.

அறிமுகக் காட்சியிலேயே ரேஸ் பைக் ஓட்டி அசர வைக்கிறார் அதிதி மேனன். படம் முழுக்க அழகு தேவதையாக வலம் வருகிறார். விரைவில் நிறைய படங்களில் பார்க்கலாம் அதிதியை.

90களில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக திகழ்ந்த தேவயானிக்கு நேரடியாக மாமியார் புரோமோஷன். வில்லத்தனம் செய்யாமல் அவருடைய அக்மார்க் கொஞ்சல் நடிப்பில் மாண்புமிகு மாமியாராக மாஸ் காட்டியிருக்கிறார். சில இடங்களில் அதிதிக்கு அக்கா போல் தான் தெரிகிறார்.

மனைவிக்கு அடங்கி நடக்கும் அப்பாவி கணவன் கதாபத்திரம் இந்த முறை ஆனந்த்ராஜ்க்கு. 90களில் நம்மை பயறுத்தியே வைத்திருந்த பழைய வில்லனுக்கு பிட்டான காமெடி ரோல். வழக்கம் போல் அசத்தி இருக்கிறார்.

மொட்ட ராஜேந்திரன், முனிஸ்காந்த் ராமதாஸ் என படத்தில் நிறைய காமெடி கதாபாத்திரங்கள். இருந்து காமெடி தான் பெரிதாக இல்லை. ஓரளவுக்கு சிரிக்க வைக்கிறார்கள்.

என்.ஆர்.ரகுநாதன் இசையில் 'என்ன புள்ள செஞ்ச' பாடல் சூப்பர் ஹிட் என்றால், 'வா கள்ளி முன்னால' பாட்டு செம குத்து. 'குறிஞ்சி குறிஞ்சி பூவுக்கு' பாடலை இனி கல்யாண டி.வி.டிக்களில் அதிகம் கேட்கலாம். ஆனால் ரீரெக்கார்டிங் தான் பழைய கிராமபோன் மாதிரி இழுக்குது.

படத்துல ஆக்ஷன் காட்சிக்கு வேலையே இல்ல. ஆனா வலுக்கட்டாய ஒரு பைட் வெச்சு காமெடி பண்ணியிருக்காங்க. சரவணன் அபிமன்யூவின் ஒளிப்பதிவு சின்ன பட்ஜெட் படத்தையும் ஹைடெக்காக காட்டுது. பிகேவின் எடிட்டிங்கில் இரண்டாம் பாதி கொஞ்சம் நீளம்.

படத்துல லாஜிக் எல்லாம் எதுவும் இல்ல. ஆடியன்ஸை சிரிக்க வைக்கணும்னு இஷ்டத்துக்கு விளையாடி இருக்காங்க. திரைக்கதையில் இன்னும் கொஞ்சும் சுவாரஸ்யத்தை கூட்டியிருந்தால் இந்த மாப்பிள்ளையின் களவாணித்தனத்தை நல்லா ரசிச்சிருக்கலாம்.

   
 
ஆரோக்கியம்