Back
Home » திரைவிமர்சனம்
Perazhagi Iso Review: இளம் குமரியாக மாறும் பாட்டி.. என்னா லூட்டி தெரியுமா.. பேரழகி ஐஎஸ்ஓ! விமர்சனம்
Oneindia | 24th May, 2019 10:47 AM

சென்னை: 60 வயது பாட்டி மீண்டும் 20 வயது குமரியாக மாறினால் என்னவெல்லாம் நடக்கும் என்பதே பேரழகி ஐஎஸ்ஓ படத்தின் மையக்கரு.

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள ஒரு ராஜா, தன்னை எப்போதும் இளமையாக வைத்திருக்க எண்ணி, மருத்துவர்களிடம் மருந்து கண்டுபிடிக்க உத்தரவு பிறப்பிக்கிறார். ராஜாவின் ஆசைப்படி, மருத்துவர் ஒருவர் அந்த மருந்தை கண்டுபிடிக்கிறார். ஆனால் அந்த ராஜாவின் எதிரிகள், மருத்துவர்களையும், ராஜாவையும் போட்டு தள்ளிவிட்டு, ஆட்சியை கைப்பற்றுவதுடன், மருத்துவக் குறிப்பை ஆற்றில் வீசி விடுகின்றனர்.

450 ஆண்டுகள் கழித்து இதுகுறித்து கேள்விப்படும் அழகுசாதன கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று, அந்த மருத்துவக் குறிப்பை கடலுக்கு அடியில் இருந்து தேடி எடுக்கிறது. வயதான பாட்டிகளை கடத்தி, அவர்கள் மீது அந்த மருத்துவக்குறிப்பை வைத்து பரிசோதனை செய்கிறார்கள். அழகு பராமரிப்பில் அதிக ஆர்வம் கொண்ட சச்சு, வழிவிக்கப் போய் அந்த கும்பலிடம் சிக்குகிறார். மருத்துவ பரிசோதனையில் அழகான குமரியாகிவிடுகிறார். அதற்கு பிறகு அவர் அடிக்கும் லூட்டிகள் தான் மீதிப்படம்.

வித்தியாசமான ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்டு, அதனை குழப்பம் இல்லாமல் தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜயன். மிஸ் கிராணி எனும் கொரிய படத்தின் தழுவல் தான் பேரழகி. அதை குறிப்பிடும் வகையில், படத்தில் ஒரு காட்சியையும் வைத்திருக்கிறார்.

சயின்ஸ் பிக்ஷன் படம் என்பதால், ஆல்பா, பீட்டா, காமா என டெக்னிக்கலாக எதையும் பேசாமல், ஜாலியான பொழுபோக்கு அம்சமுள்ள படமாக பேரழகியை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். படத்தின் பிளஸ்சும் இது தான். மைனசும் இது தான்.

ஒரு சயின்ஸ் பிக்ஷன் படத்தில் குறைந்தபட்ச டீடெயிலிங்காவது வேண்டும். ஆனால் அது எதுவும் இந்த படத்தில் இல்லை. எனினும் படம் போரடிக்காமல் நகர்கிறது. 20 வயது பியூட்டியாக மாறி பாட்டி செய்யும் அலப்பறைகள் 'அடடேய்' என காமெடிக்கு கேரண்டி கொடுக்கிறது. அதேபோல், மெசேஜ் சொல்கிறேன் பேர்வழி என எதையும் திணிக்காமல் இருந்ததற்காக இயக்குனருக்கு ஒரு சபாஷ்.

இதய ராணி ஷில்பாவுக்கு மூன்றாவது படமே ஹீரோயின் சப்ஜெட். அதுவும் டபுள் ஆக்ஷன். அதை சரியாக உணர்ந்து அட்டகாசமாக நடித்திருக்கிறார். நார்மல் பேத்தி, பாட்டி இன்சைடு பேத்தி என இரண்டு கதாபாத்திரங்களையும் அழகாக கையாண்டிருக்கிறார். வாழ்த்துக்கள் ஷில்பா.

'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் தான் படத்தின் கதாநாயகன். தனது ரோலை சரியாக செய்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் இன்னும் சிறப்பாக நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

சச்சு பாட்டிக்கு தனி வாழ்த்துக்கள். அயோக்யாவுக்கு பிறகு அவர் நடித்துள்ள படம். தனது அனுபவத்தை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார். பியூட்டிபுல் பாட்டி.

லிவிங்ஸ்டன், சரவண சுப்பையா, ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்டவர்களும் தங்கள் கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்கள்.

சார்லஸ் தனாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையும் சரியாக ஒர்க்கவுட் ஆகவில்லை. நவ்ஷாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு உதவியாக இருக்கிறது. தேவையான காட்சிகளை மட்டுமே வைத்து, படத்தை கிரிஸ்ப்பாக கொடுத்திருக்கிறார் எடிட்டர்.

செல்வராகவனின் '3 நொடி விதி' பத்தி தெரியுமா.. ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் 'என் ஜி கே' சீக்ரெட்!

பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டிய படம் இது. ஆனால் அதனை மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கி இருப்பதால், அந்த குறை அப்பட்டமாக திரையில் தெரிகிறது. ஷங்கர் இந்த படத்தை இயக்கி இருந்தால், 50 கேஜி தாஜ்மஹாலை இறக்குமதி செய்து, டிக்கிலோனா விளையாடி இருப்பார். ஆனால் பாவம் விஜயன், தன் சொந்த பணத்தை போட்டு, தனது திறமையை நிரூபிக்க முதல் அடி எடுத்து வைத்திருக்கிறார். அந்த ஒரு காரணத்திற்காகவே அவரை வரவேற்போம்.

பேரழகி ஐஎஸ்ஓ 'மெசேஜ்' சொல்லாத ராணி.

   
 
ஆரோக்கியம்