Back
Home » திரைவிமர்சனம்
Lisa Review: ப்பேபப... நான் தான் 'லிசா'... அட நீ வேற சிரிப்பு காட்டிக்கிட்டு... போம்மா அந்த பக்கம்!
Oneindia | 24th May, 2019 06:08 PM

சென்னை: தமிழ் சினிமாவின் வழக்கமான பயமுறுத்தும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பேய் படம் போல் வெளிவந்திருக்கும் படம் லிசா.

எவ்வளவு கஷ்டப்பட்டு முயற்சி செய்தும் படத்தில் கதை என்ற ஒன்றை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏற்கனவே வந்த பல பேய் படங்களை போல், இதிலும் ஹீரோ, ஹீரோயின் ஒரு பேய் வீட்டில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்களை கொஞ்சநாள் பயமுறுத்தும் பேய், பின்னர் ஒருவரின் உடம்புக்குள் புகுந்து தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் அதே பழைய பார்முலா தான் .

சிறுவயதிலேயே அப்பாவை இழந்த நாயகி லிசா (அஞ்சலி), விதவை தாயுடன் வளர்கிறாள். இளம் பெண்ணான லிசாவுக்கு தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் மறுப்பு தெரிவிக்கும் அம்மா, காதல் திருமணம் செய்து கொண்டதால், தனது அம்மா, அப்பாவின் தொடர்பு இல்லாமல் போய்விட்டதாகக் கூறுகிறார்.

இதையடுத்து தாத்தா, பாட்டியை தேடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு செல்கிறார் அஞ்சலி. கூடவே தனது கல்லூரி ஜூனியர் சாம் ஜோன்சையும் அழைத்து செல்கிறார். அங்கு ஒரு வயதான தம்பதி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை தனது தாத்தா, பாட்டி என நினைத்துக் கொள்கிறார் அஞ்சலி.

சிலுக்குன்னு கூப்பிட்டு இருக்கானே...அந்த கண்களின் கவர்ச்சிக்காகவா?

அந்த வயதான தம்பதியின் நடவடிக்கைகள் சந்தேகத்தை வரவைக்கிறது. அந்த வீட்டில் ஒரு பேயும் இருக்கிறது. ஒரு நாள் அந்த பேய் அஞ்சலி முன் வந்து பயமுறுத்துகிறது. சாம் ஜோன்ஸ் பயந்து நடுங்குகிறார். ஆனால் எதுக்கும் அஞ்சாத அஞ்சலி, அந்த பேய் குறித்து அறிய நினைக்கிறார். வயதான தம்பதியின் பின் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க பார்க்கிறார். அஞ்சலி அதை சாதித்தாரா என்பது தான் படம்.

திறந்த கதவு தானா மூடுவது, சாய்வு நாற்காலி தானாக ஆடுவது, ஜன்னலில் கைரேகை படிவது, லைட், டிவி, டேப்ரெக்காடர் போன்றை தானாக இயங்குவது, 'வாம்மா மின்னல்' ரேஞ்சுக்கு ஒரு கருப்பு உருவம் சர்ரென ஓடுவது என வழக்கமான பேய் பட டெம்லேட் காட்சிகள் அனைத்தும் லிசாவில் உண்டு. என்ன ஒரே வித்தியாசம், அவை அனைத்தும் 3டி வடிவத்தில் வருகின்றன.

பேய் படம் என்றாலே, யாராவது ரெண்டு பேர் ரோபோ போல் உடம்பை ஸ்டிப்பாக வைத்துக்கொண்டு நடப்பது, கரகரக் குரலில் பேசுவது போல் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இந்த படத்தில் லிசாவின் காட்டு பங்களா தாத்தா பாட்டி தான் இந்த கேரக்டர்ஸ். சாரா பாட்டிய சாதாரணமா பார்த்தாளே பயமா இருக்கு. 3டியில் இன்னும் டெரராக இருங்காங்க.

இடைவேளைக்கு முன்பு வரும் ஒரு காட்சியில் மட்டும் தான் பேய் கொஞ்சம் பயமுறுத்துகிறது. மற்றக் காட்சிகளில் நான் தான் பேய் பேசுறேன் என பல்லிழித்து நிற்கிறது. இப்படியே போனால் நம்ம வீட்டி குட்டிப் பசங்க எல்லாம், பேய்க் கூட ஐஸ் பாய்ஸ் விளையாட ஆரம்பிச்சாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்ல. அந்த அளவுக்கு பேய் இங்கு மலிந்துவிட்டது.

படத்தோட திரைக்கதையில் நிறைய பிரச்சினைகள் இருக்கு. பயமுறுத்தவும் இல்லாம, இரக்கப்பட வைக்கவும் இல்லாம ஏனோ தானோன்னு படம் நகர்கிறது. பிளாஷ் பேக் காட்சிகளும் உருக்கமா இல்ல. இதனால மொத்தப் படமும் நசநசன்னு ஆகிடுது.

முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை அஞ்சலி தான் படம் முழுவதையும் தோளில் தாங்கியிருக்காங்க. ஆனா அவங்க உழைப்பு அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராக வீணாகியிருக்கு. அஞ்சலி ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும். ஏன்னா, ஒல்லியான அழகு தேவதையா ஜொலிக்கிறாங்க அஞ்சலி.

சாம் ஜோன்ஸ் இந்த படத்தின் நாயகன் என அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவருக்கு சப்போர்டிங் ரோல் தான். நிறைய பயந்து, கொஞ்சமாக நடித்து தனது கடமையை நிறைவு செய்திருக்கிறார்.

பேருக்கு தான் யோகி பாபு காமெடி. படத்துல அவர் வருவது இரண்டே சீன்கள் தான். இந்த இரண்டு காட்சியிலும், காமெடி பண்றேன்னு கடுப்பேத்துறார். யோகி பாபு கால்ஷீட் பிரச்சினையை பேலன்ஸ் செய்வதற்காக, தெலுங்கு நடிகர் பிரம்மானந்தத்தை பயன்படுத்தி இருக்காங்க. யோகி பாபுவுக்கு மேல அவர் டென்ஷனாக்குறார்.

வில்லன் மகரந்த் தேஷ் பாண்டே உருவத்துக்கும், குரலுக்கும் சம்மந்தமே இல்ல. ஆனா அவர் தான் கொஞ்சமாச்சும் பயமுறுத்தியிருக்கிறார்.

ஒரு பேய் படத்துக்கு இசை தான் மிகவும் முக்கியம். இந்த படத்தோட பெரிய பலவீனம் சந்தோஷ் தயாநிதியின் இசை. குறிப்பாக பின்னணி இசை படத்தோடு ஒட்டவே இல்ல. அதனாலேயே பயம் வரமாட்டேங்குது. ஒலிக்கலவையும் இதற்கு ஒரு காரணம்.

தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையா தான் படத்தோடு ஒளிப்பதிவாளர். மிகவும் சிரமப்பட்டு நிறைய காட்சிகளை எடுத்திருக்கிறார். நெட்டிவ் 3டி கேரமாவில் படம் பிடித்துள்ளால், 3டி எபெக்ட் நன்றாக இருக்கிறது. மழை, காடு, மேடு என படத்தையும் அழகாக படம் பிடித்திருக்கிறார்.

படத்தோட ஒரே பிரச்சினை கதை தான். வில்லனுக்கும் பட்சாதாபம் தேட முயற்சித்திருப்பது அபத்தமான விஷயம். அதனாலேயே படம் நம்முடன் ஒட்ட மறுக்கிறது. பிளாஷ் பேக் காட்சியில் நம்பக தன்மையே இல்ல.

மொத்தத்தில் படம் எப்படி இருக்கிறது என்றால், தியேட்டரை விட்டு நான் வெளியே வரும் போதும், காலேஜ் பசங்க இரண்டு பேர் பேசியதை தான் குறிப்பிட விரும்புகிறேன்.

பையன் 1 : நான் அப்பவே சொன்னேன்ல. ஏதாவது இங்கிலீஷ் படத்துக்கு போலாம்னு. கேட்டியா நீயி. இப்ப பாரு உச்சி வெயில்ல மண்ட காயுர மாதிரி இருக்குது. காசுக்கு பிடிச்ச தெண்டம்.

பையன் 2: விட்றா மாப்ள. அதான் நம்ம தலைவி அஞ்சலிய பாத்தோம்ல. அவ்வளவு தான் விஷயம். அது போதும். நான் ஹேப்பிபா.

இப்ப புரிஞ்சிருக்கும் படம் எப்படி இருக்குதுன்னு...

(இந்த படத்த பார்த்து விமர்சனம் அடிக்கிறதுக்குள்ள எனக்கு மண்டகாய்ஞ்சு போச்சு. ச்சீசீ என்னா பொலப்புடா இது. யப்பா கடைக்காரா, சில்லுனு ஒரு மோர் குடுப்பா... உஸ்ஸ்ஸ்ஸ்...முடியில...)

   
 
ஆரோக்கியம்