Back
Home » திரைவிமர்சனம்
Neeya 2 Review: எல்லாப் பிரச்சினைக்கும் வரலட்சுமி தான் காரணமாமே... நீயா 2! விமர்சனம்
Oneindia | 26th May, 2019 02:02 PM

சென்னை: ஒரு இச்சாதாரி பெண் நாகத்தின் காதல் போராட்டம் தான் நீயா 2 படத்தின் ஒன்லைன்.

இப்பட அறிவிப்பு வெளியான நாள் முதலே மக்களுக்கு ஒரு மாபெரும் சந்தேகம் இருந்து வந்தது. அது கடந்த 1979-ல் கமல்ஹாசன் - ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான 'நீயா' படத்தின் இரண்டாம் பாகம் தான் நீயா 2வா என்பது தான். எனவே, அதை முதலில் தெளிவு படுத்தி விட்டு பின்னர் நாம் விமர்சனத்திற்குள் நகரலாம்.

தலைப்பு, இச்சாதாரி நாகம், ஒரு ஜீவன் பாடல், மூன்று ஹீரோயின்கள் என சில ஒற்றுமைகளைத் தவிர்த்து, நீயாவிற்கும், நீயா 2விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, அப்படத்தை மனதில் வைத்துக் கொண்டு இப்படத்தை நாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

சரி நீயா 2 கதைக்கு வருவோம். ராய் லட்சுமி ஒரு இச்சாதாரி கருநாகம். பகலில் மனுஷியாகவும், இரவில் பாம்பாகவும் மாறி, அவஸ்தைப்பட்டு வருகிறார். அவருடையே ஒரே நோக்கம், தேடல் எல்லாம், 25 ஆண்டுகளுக்கு முன், தான் இழந்த காதலை மீட்பது மட்டுமே. அதற்காக ஜெய்யை தேடி ஊர் ஊராக அழைகிறார்.

இது ஒருபுறம் இருக்க, சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜெய்யை, கேத்ரின் தெரசா விரட்டி விரட்டி காதலிக்கிறார். ஆனால் தனக்கு நாக தோஷம் இருப்பதால், கேத்ரினின் காதலை ஏற்க மறுக்கிறார் ஜெய். இதனால் தனக்கும் நாகதோஷம் இருப்பதாக பொய் ஜாதகம் தயாரித்து ஜெய்யை திருமணம் செய்கிறார் கேத்ரின்.

ஆனால் விதியின் விளையாட்டு பாம்பு ரூபத்தில் அவரை துரத்துகிறது. பரிகாரம் செய்வதற்காக ஜெய்யும், கேத்ரினும் கொடைக்கானல் கிளம்புகிறார்கள். அங்கு ஜெய், கேத்ரின், ராய் லட்சுமிக்கு இடையே நடக்கும் சம்பவங்கள் தான் மீதிப்படம்.

நாய், பாம்பு, குரங்கு என விலங்குகளை நடிக்க வைத்தால், படத்துக்கு மினிமம் கேரண்டி இருக்கும் என்பதாலேயே நீயா 2வை எடுத்திருக்கிறார் இயக்குனர் எல்.சுரேஷ். முதல் பாதி படம் கொஞ்சம் விறுவிறுப்பாக நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் படத்தை நீட்டிக்கொண்டே போவதால் போதும் போதும் என்றாகிவிடுகிறது.

பாம்புக்கும், நம் மக்களுக்கும் இடையே ஆதாம், ஏவாள் காலத்தில் இருந்தே ஒரு தொடர்பு இருக்கிறது. பாம்பு பற்றிய மூடநம்பிக்கையும், செண்டிமெண்டும் நம்மூரில் அதிகம் என்பதால் பாம்பு படங்களுக்கும் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. ஆனால் அதனை சரியாக பயன்படுத்த தவறிவிட்டார் இயக்குனர். சமூக வலைதளங்களின் ஆதிக்கம் உச்சத்தில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில், கதை மீது மக்களுக்கு நம்பதன்மையை ஏற்படுத்துவது மிகவும் சிரமம். அது தான் நீயா 2-ன் பிரச்சினையும்.

திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை. இது தான் கதை, இது தான் பின்னர் நடக்கப் போகிறது என எளிதாக யூகித்துவிட முடிகிறது. அதேபோல் வரலட்சுமி வரும் பிளாஷ் பேக் காட்சிகள் நம்பகத் தன்மையை ஏற்படுத்த தவறிவிடுகிறது. கிராபிக்ஸ் காட்சிகள் சில இடங்களில் அருமையாக இருக்கிறது. ஆனால் பல இடங்களில் அப்பட்டமாக தெரிகிறது. இதுவும் படத்தின் மற்றொரு பிரச்சினை.

ஜெய், கேத்ரின் தெரசா, வரலட்சுமி என நிறைய பேர் நடித்திருத்தாலும், ராய் லட்சுமி தான் அதிகம் ஸ்கோர் செய்கிறார். தனது நிலையை நினைத்து உருகுவது, காதலனை நினைத்து ஏங்குவது, கோபத்தை விஷமாக கக்கி எதிரிகளை பந்தாடுவது என இதனை தனக்கு மட்டுமான படமாக மாற்றிக்கொண்டிருக்கிறார் ராய் லட்சுமி. குறிப்பாக கிளாமர் காட்சிகள் இன்னும் சிறப்பு.

வழக்கம் போல் எல்லாக் காட்சிகளுக்குமே ஒரே மாதியான ரியாக்ஷன் கொடுத்து நடித்துக் கொ(கெ)டுத்திருக்கிறார் ஜெய். பிளாஷ் பேக் காட்சிகளில் மதுரை இளைஞனாக வந்து, சுப்ரமணியபுரத்தை நினைவுப்படுத்துகிறார்.

கேத்ரின் தெரசாவுக்கு ஜெய்யை காதலிப்பதும், கிளாமர் காட்டுவதும் தான் முக்கியம் பணி. அதை செவ்வணே செய்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டும் கொஞ்சம் பெர்மானஸ் காட்டுகிறார். கேத்ரின் அளவுக்கு கூட முக்கியத்துவம் இல்லாத ரோல் வரலட்சுமிக்கு. ஒரு பாடலுக்கு நடனமாடி, நஞ்சை உமிழ்ந்து, சாபம் கொடுத்துவிட்டு சென்றிவிடுகிறார்.

ஷபீரின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இருக்கிறது. ஒரே ஜீவன் பாடலை மீண்டும் திரையில் பார்க்கும் போது, பரவசமாகிறது. ஆனால் பின்னணி இசை படத்துக்கு சுத்தமாக செட்டாகவில்லை.

ராஜவேல் மோகனின் ஒளிப்பதிவு தான் படத்திற்கு மிகப்பெரிய பலம். கிராபிக்ஸ் சரியில்லாவிட்டாலும், ராஜவேலின் கேமரா தான், பரபரப்பை ஏற்ற வைக்கிறது. கோபி கிருஷ்ணாவின் எடிட்டிங்கில், முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு, இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சி வழவழா கொழகொழா.

பி அண்ட் சி செண்டர்களில் நிச்சயம் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும். காரணம் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையே ஆட்டிப் படைத்த இராமநாராயணின் படங்களை சற்று நினைவு படுத்துகிறது இப்படம்.

பார்வையாளர்களுக்கு கதையின் மீது நம்பகத் தன்மையை ஏற்படுத்தியிருந்தால், இந்த பாம்பு மனுஷி இன்னும் அதிகமாக மிரட்டியிருப்பாள். சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை, மோசமான காட்சியமைப்பு என பல பலவீனங்கள் ஒன்று சேர்ந்துக் கொண்டு, ஆடியன்ஸை தியேட்டரை விட்டே துரத்துகிறது இந்த பாம்பு.

   
 
ஆரோக்கியம்