Back
Home » பயணம்
சாவந்த்வாடி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Native Planet | 27th May, 2019 06:13 PM

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சாவந்த்வாடி நகரம், பசுமையான காடுகளுக்கும், கவின் கொஞ்சும் ஏரிகளுக்கும், மலைகளுக்கும் நடுவே இந்திரலோகம் போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நகரத்தை முன்னர் கேம்-சாவந்த் என்ற குடும்பம் ஆட்சி செய்து வந்ததால் இது சாவந்த்வாடி என்று அழைக்கப்படுகிறது. சாவந்த்வாடி நகருக்கு கிழக்கில் மேற்கு தொடர்ச்சி மலைகள் மதிலாய் அமைந்திருக்க, மேற்கில் அரபிக் கடல் சூழ்ந்திருக்க, இயற்கை எழுதிய கவிதை போல தோற்றமளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நகரத்துக்கு ஒருமுறை வந்தாலும் போதும் அதன் நினைவுகள் அழியா சித்திரமாய் அவர்களின் நெஞ்சங்களில் போய் சேகரமாகிவிடும். மேலும் இந்த நகரம் கோவாவிலிருந்து கல்லெறியும் தூரத்திலேயே இருப்பதால், இங்கும் கொங்கனி வாடை வீசும்.

Vish350

சாவந்த்வாடி மக்கள்

சாவந்த்வாடி நகரம் முன்னர் மராட்டிய அரசின் பிடியில் இருந்தது. அதன் பின்பு தனி அரசாக மாறிய இந்த நகரத்தில் ஆண்டாண்டு காலமாக மால்வானி இன மக்கள்தான் அதிக எண்ணிகையில் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் தங்கள் கலாச்சாரத்தின் மீது மிகுந்த மரியாதையும், பற்றும் கொண்டவர்கள். அதோடு கலைகளிலும், கைத்தொழிலிலும் திறம்பட செயல்பட்டு வருகின்றனர்.

சாவந்த்வாடியின் கலாச்சாரம்

சாவந்த்வாடியில் கிடைக்கக்கூடிய கலைப் பொருட்கள் தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. இந்தப் பொருட்கள் அனைத்தும் சிறு தொழில் நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. இதில் மரபொம்மைகள், ஓவியங்கள் மற்றும் மூங்கிலை கொண்டு செய்யப்படும் கலைப்பொருட்கள் என்று எதை வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வாங்கிச் செல்லலாம்.

சாவந்த்வாடி நகரில் கொங்கனி, மராத்தி, உருது, ஆங்கிலம் போன்ற மொழிகள் பரவலாக பேசப்படுகின்றன. இங்கு உள்ள காடுகளில் காட்டெருமை, சிறுத்தை, புலி போன்ற விலங்குகளை பார்க்கலாம். அதோடு மருத்துவ மூலிகைகளும் இந்தக் காடுகளில் கிடைக்கும். சாவந்த்வாடி வரும் பயணிகள் மோட்டி தலாவ், ராயல் பேலஸ், ஆத்மேஷ்வர் தாலி, நரேந்திர கார்டன், ஹனுமான் மந்திர், அம்போலி மலைவாசஸ்தலம், கோல்காவ்ன் தர்வாஜா, விட்டல் மந்திர் போன்ற இடங்களுக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.

தி ராயல் பேலஸ், கேம் சாவந்த் போன்ஸ்லே மூன்றாம் மன்னரின் ஆட்சியில், 1755 மற்றும் 1803-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டது. இந்த அரண்மனை முழுக்க முழுக்க செங்கற்களால் எழுப்பப்பட்டிருக்கும் கலாச்சார சின்னமாகும். மேலும் இதன் உட்சுவர்களில் வரிசையாக காணப்படும் அரசர் கால பழைய புகைப்படங்கள் பற்பல கதைகளை நமக்கு சொல்லும். அதோடு இந்த அரண்மனையின் அழகிய வேலைப்பாடுகளை உடைய அறைகளும், போராயுதங்களும், கலைப்பொருட்களும் நம்மை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அழைத்துச் சென்று விடும்.

Sumaira Abdulali

மரகதக் குன்றுகளுக்கும், பனை மற்றும் மாமரங்களுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் மோட்டி தலாவ், கருங்கற்களுக்கு நடுவே கிடக்கும் ஒரு முத்தை போலே பிரகாசமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஏரி ராயல் பேலஸின் முன்பு செயற்கை முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு வரும் பயணிகள் படகு சவாரி மற்றும் பிற நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.

கலைப் பொருட்கள் உற்பத்திக்காகவும், கைத்தொழில் வளர்சிக்காகவும் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டத்தின் வடிவம்தான் இந்த ஷில்ப்கிராம். இந்த சிறிய கிராமத்தில் எண்ணற்ற கைவினை பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இங்கு வரும் பயணிகள் அற்புதமான படைப்புகளை உருவாக்கும் கலைஞர்களின் கைவண்ணத்தை நேரில் காணும் அறிய வாய்ப்பை பெறுவது மட்டுமில்லாமல், அவர்கள் கண்முன்னே உருவான பொருளையே அவர்கள் வாங்கிச் செல்லலாம். குறிப்பாக இங்கு தயாரிக்கபடும் காஞ்சிஃபா கார்ட்ஸ், அலங்கரிக்கப்பட்ட வளையல்கள் மற்றும் நகைபெட்டிகள் போன்ற அரிய பொருட்கள் பயணிகளிடையே மிகப்பிரபலம்.

சாவந்த்வாடி வரும் பயணிகள் ஏதேனும் கைவினைப் பொருட்களை வாங்காமல் ஊர் திரும்பினால் இந்த நகரத்துக்கு சுற்றுலா வந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். எனவே ஷாப்பிங் செல்ல விரும்பும் பயணிகள் சாவந்த்வாடி சந்தைக்கு செவ்வாய் கிழமைகளில் சென்று தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்குவது சிறப்பாக இருக்கும். மேலும், இங்கு முந்திரி லட்டு, பலாப்பழத்தில் செய்த பதார்த்தங்கள் போன்றவை மிகவும் பிரசித்தம்.

   
 
ஆரோக்கியம்