Back
Home » பயணம்
ஷேக்ஹாவதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Native Planet | 30th May, 2019 05:43 PM

ராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்குப்பகுதியில் பாலைவனப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஷேக்ஹாவதி அனைத்து இந்தியர்களுமே பெருமைப்படத்தக்க வரலாற்று முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. மஹாபாரத காவியத்தில் பல இடங்களில் இந்த நகரம் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஹிந்துக்களின் புனிதநூலான 'வேதம்' இந்த ஸ்தலத்தில் இயற்றப்பட்டதாக பலமான நம்பிக்கைகள் நிலவுகின்றன. இப்பிரதேசத்தை ஆண்ட வலிமை பொருந்திய ஷேக்ஹாவத் வம்சாவளியினரின் பெயரையே இந்நகரம் பூண்டுள்ளது.

ஷேக்ஹாவதி நகரத்தின் சிறப்பம்சங்கள்

'ராஜஸ்தான் மாநிலத்தின் ஓப்பன் ஆர்ட் காலரி' என்ற பெருமையுடன் அறியப்படும் ஷேக்ஹாவதி பல வண்ணமயமான ஹவேலி மாளிகைகள், கோட்டைகள் மற்றும் இதர வரலாற்று சின்னங்களுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. நாடினி பிரின்ஸ் ஹவேலி, மொரார்கா ஹவேலி மியூசியம், டாக்டர் ராம்நாத் ஏ. பொத்தார் ஹவேலி மியூசியம், ஜகந்நாத் சிங்கானியா ஹவேலி மற்றும் கேத்ரி மஹால் ஆகியவை இங்குள்ள குறிப்பிடத்தக்க ஹவேலி மாளிகைகளாகும். 1802ம் ஆண்டில் கட்டப்பட்ட நாடினி பிரின்ஸ் ஹவேலி தற்போது அதன் புதிய உரிமையாளரான ஒரு ஃபிரெஞ்சு நாட்டவரால் ஒரு ஆர்ட் காலரி மற்றும் பாரம்பரிய மையமாக மாற்றப்பட்டுள்ளது.

டாக்டர் ராம்நாத் ஏ. பொத்தார் ஹவேலி மியூசியத்தில் பல ராஜஸ்தானிய பாரம்பரிய காட்சிக்கூடங்கள் (கேலரிகள்) உள்ளன. மொரார்கா ஹவேலி மியூசியம் அங்குள்ள 250 வருட பழமை வாய்ந்த கோட்டைக்கு பெயர் பெற்றுள்ளது. 1770 ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ள கேத்ரி மஹால் எனும் ஹவேலி தன் உன்னதமான கட்டமைப்பு மற்றும் தோற்றத்துடன் வரலாற்றுகால கட்டிடக்கலை அம்சங்களுக்கு சான்றாய் ஜொலிக்கிறது. மண்டாவா கோட்டை, முகுந்த்கர் கோட்டை மற்றும் துண்ட்லோட் கோட்டை ஆகியவை இப்பிரதேசத்தின் முக்கிய கோட்டைகள் எனும் பெருமையை தாங்கி நிற்கின்றன. இவற்றில் மண்டாவா கோட்டை ஒரு பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டு விட்டது.

துண்ட்லார்டு கோட்டையானது ஐரோப்பிய ஓவியங்களுக்கான ஒரு பிரத்யேக நூலகம் எனும் புகழுடன் செயல்படுகிறது. 800 ச. மீ பரப்பளவில் பரந்துள்ள முகுந்த்கர் கோட்டை பல முற்றங்கள் கூடங்கள் மற்றும் பலகணிகளுடன் ராஜகம்பீரமாக காட்சியளிக்கிறது. பல உன்னதமான மசூதிகள் மற்றும் ஒரு மான்கள் சரணாலயம் போன்றவை இப்பிரதேசத்தில் பார்க்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும். 'கேமல் சஃபாரி' எனும் ஒட்டக சவாரி செய்து பாலைவன காட்சிகளை ரசிப்பது இங்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் முக்கிய விருப்பமாக உள்ளது. இந்த பிரதேசத்தின் பல பழைய அரண்மனைகள் அவற்றின் இயல்பு கெடாமல் பாரம்பரிய ஹோட்டல்களாக மாற்றப்பட்டுள்ளதால் பயணிகளுக்கு கால இயந்திரத்தில் சவாரி செய்தது போன்ற வரலாற்றுக்கால கனவு அனுபவத்தை அவை அளிக்கின்றன.

சந்தைகள், திருவிழாக்கள் மற்றும் கேளிக்கைகள்

ஷேக்ஹாவதி திருவிழா என்றழைக்கப்படும் வருடாந்திர பாலைவனத் திருவிழா இங்கு பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அச்சமயம் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க ஏராளமான பயணிகள் இங்கு திரள்கின்றனர். இத்திருவிழாவானது மாநில சுற்றுலாத்துறை மற்றும் சிகார், சுரு மற்றும் ஜுஞ்ஜுனு மாவட்ட நிர்வாகங்களின் கூட்டுப்பொறுப்பில் முழுக்க முழுக்க அரசு ஆதரவுடன் நடத்தப்படுகிறது. ஷெகாவாடி திருவிழாவின் போது 'கேமல் சஃபாரி' மற்றும் 'ஜீப் சவாரி' ஆகிய இரண்டும் முக்கிய உற்சாக கேளிக்கை பொழுதுபோக்குகளாக பிரசித்தி பெற்றுள்ளன. திருவிழாவின் போது கூடும் சந்தையில் இப்பகுதியின் கிராமிய ஊர்ப்புற வாழ்க்கை முறைகள் பற்றிய சுவாரசியங்களை பயணிகள் அறிந்துகொள்ளலாம். பல்வேறு கிராமிய விளையாட்டுகள், ஹவேலி போட்டிகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், பண்ணைச்சுற்றுலா மற்றும் வாணவேடிக்கைகள் போன்ற ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இவ்விழாவின்போது நடத்தப்படுகின்றன. இந்த பாலைவனத்திருவிழாவானது நாவால்கர், ஜுஞ்ஜுனு, சிகார் மற்றும் சுரு ஆகிய ஸ்தலங்களில் நடத்தப்படுகின்றன. இந்த நான்கு ஸ்தலங்களில் ஷெகாவாடி திருவிழாவின் முக்கிய ஸ்தலமான நாவால்கருக்கு 150 கி.மீ தூரத்தில் உள்ள ஜெய்பூரிலிருந்து ரயில் அல்லது பேருந்து மூலம் செல்லலாம்.

ஷேக்ஹாவதிக்கு எப்போது விஜயம் செய்யலாம்?

நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான பருவமே ஷேக்ஹாவதி நகருக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. இக்காலத்தில் பருவநிலை குளுமையுடன் காணப்படுகிறது. கோடையில் இப்பிரதேசத்தில் 43° C வெப்பநிலை நிலவுவதால் அச்சமயம் ஷேக்ஹாவதிக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

பயண வசதிகள்

ஷேக்ஹாவதி நகரம் ஜெய்பபூர் மற்றும் பிக்கானேர் நகரங்களுடன் நல்ல சாலை வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களிலிருந்து உள்ளூர் ரயில் வசதியும் ஷேக்ஹாவதி நகரத்துக்கு இயக்கப்படுகிறது.ஷெகாவாடி பிரதேசத்தில் பெரும்பாலும் ராஜஸ்தானிகள் மற்றும் மார்வாரிகள் பரவலாக வசிக்கின்றனர். இங்கு ராஜஸ்தானி மொழி உள்ளூர் மொழியாக உள்ளது.

   
 
ஆரோக்கியம்