Back
Home » திரைவிமர்சனம்
Kolaigaran Review: ஒரு கொலை... இரண்டு குற்றவாளிகள்... அவர்களில் யார் அந்த கொலைகாரன்? விமர்சனம்
Oneindia | 7th Jun, 2019 02:52 PM

சென்னை: ஒரு கொலையும், அந்த கொலையை செய்த குற்றவாளியைக் கண்டுபிடிக்க போலீஸ் நடத்தும் விசாரணையும் தான் கொலைகாரன் படத்தின் கதை.

கொலைகாரன் ஒரு க்ரைம் திரில்லர் படம். எனவே இதன் முதல் பாதி கதையை எழுதினால், படம் பார்க்கும் சுவாரஸ்யம் குறைந்துவிடும். ஆதலால், படத்தின் கதையை மேலோட்டமாக மட்டுமே எழுதுகிறோம்.

படத்தின் துவக்கத்தில் ஒரு பெண் கொடூரமாக கொலை செய்யப்படுகிறாள். அதற்கு அடுத்த காட்சியில், தான் ஒரு கொலை செய்துவிட்டதாக விஜய் ஆண்டனி போலீசில் சரணடைகிறார். விசாரணை அதிகாரி அர்ஜுனிடம், விஜய் ஆண்டனி அளிக்கும் வாக்குமூலமாக படம் விரிகிறது.

விஜய் ஆண்டனியும், நாயகி அமிஷா நர்வலும் எதிரெதிர் வீட்டில் குடியிருக்கிறார்கள். ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் விஜய் ஆண்டனியின் நடவடிக்கைகள் அனைத்தும் மர்மமாகவே இருக்கிறது. தினமும் காலையில், அமிஷா அலுவலகம் கிளம்பும் அதே நேரத்தில் விஜய் ஆண்டனியும் கதவை திறந்து வெளியே வருகிறார். அமிஷாவை பார்த்து வலியப் புன்னகைக்கிறார். இதனால் அமிஷாவை விஜய் ஆண்டனி ஒருதலையாக காதலிக்கிறார் என்பது புரிகிறது.

விஜய் படங்களில் புலி தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: கொலைகாரன் ஹீரோயின்

இதற்கிடையே ஆந்திர அமைச்சரின் தம்பி வம்சி அமிஷாவை பின்தொடர்ந்து சென்று டார்ச்சர் செய்கிறார். அதற்கு அடுத்தக்காட்சியில் அவர் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலையை செய்தது யார் என போலீஸ் அதிகாரி அர்ஜுன் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அமிஷா மற்றும் விஜய் ஆண்டனி மீது போலீஸ் சந்தேகப்படுகிறது. அந்த கொலைகாரன் யார் என்பதை போலீஸ் கண்டுபிடிக்கிறதா என்ற கேள்வியுடன் விறுவிறு திரைக்கதையில் பயணிக்கிறது மீதிப்படம்.

ராட்சசன், இமைக்கா நொடிகள் வரிசையில் மற்றொரு சூப்பர் க்ரைம் திரில்லர் படமாக வந்திருக்கிறது கொலைகாரன். கொலைகாரன் யார் என்பதை கடைசி வரை ரசிகர்கள் யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரு லுயிஸ். சின்ன சின்ன விஷயங்களையும் கவனமாக கையாண்டிருக்கிறார். குறிப்பாக கதாபாத்திரங்களின் பெயர்களில் கூட அதிக அக்கறை காட்டியிருக்கிறார். படத்தில் நாயகன் விஜய் ஆண்டனியின் பெயர் பிரபாகரன். போலீஸ் அதிகாரி அர்ஜுனின் பெயர் கார்த்திகேயன். இந்தப் பெயர் குறியீட்டைப் புரிந்து கொண்டால் படத்தை இன்னும் சுவாரஸ்யமாக பார்க்கலாம்.

படத்தின் முதல்பாதியில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. எல்லாமே மர்ம முடிச்சுகளாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது, நம்மை சுவாரஸ்யம் பற்றிக்கொள்கிறது. ஆனால் எல்லாத்துக்கும் காரணம் சொல்லியிருப்பது படத்தின் நீளத்தை அதிகப்படுத்துகிறது. அதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதோடு, சில இடங்களில் லாஜிக் ஓட்டைகளும் இருப்பது உறுத்துகிறது.

அர்ஜுனை இதுவரை பல படங்களில் போலீஸ் வேடத்தில் பார்த்திருக்கிறோம். இருந்தாலும் இந்த படத்திலும் புதுசாகவே தெரிகிறார். அதிரடி ஆக்ஷன் எல்லாம் செய்யாமல், சைலண்டாக வந்து புத்திசாலித்தனமான விசாரணை அதிகாரியாக அப்ளாஸ் அள்ளுகிறார் ஆக்ஷன் கிங்.

இது என்னுடைய ஏரியா என கெத்து காட்டுகிறார் விஜய் ஆண்டனி. நான், சலீம், பிச்சைக்காரன் படங்களை போல அமைதியாக ஸ்கோர் செய்கிறார். பார்வையாலேயே உணர்வுகளை கடத்தி லைக்ஸ் வாங்குகிறார். முந்தைய படங்களின் தோல்விகளை நிச்சயமாக ஈடுகட்டுவான் இந்த கொலைகாரன்.

பக்கத்து வீட்டு பெண் போல ரம்மியமாக இருக்கிறார் நாயகி அமிஷா. காதல் காட்சிகளில் அதிகமாக கவனம் ஈர்க்கிறார். தமிழில் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கலாம்.

பல ஆண்டுகள் கழித்து திரையில் தோன்றியிருக்கிறார் சீதா. பாசமான அம்மாவாக நிறைவாக நடித்திருக்கிறார். தொடர்ந்து நிறைய படங்களில் நடிங்க சீதா. அதேபோல், நாசர், பகவதி பெருமாள் உள்பட படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்கள் கடமையை சரியாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலம் சைமன் கே கிங்கின் பின்னணி இசையும், முகேஷின் ஒளிப்பதிவும் தான். காதல், சஸ்பென்ஸ், திரில் என ஒவ்வொரு உணர்வையும் இசையாலேயே கடத்துகிறார் சைமன். கொல்லாதே கொல்லாதே, இதமாய் இதமாய் பாடல்கள் மெலடி மெட்டுகள் என்றால், ஆண்டவனே துணை பக்கா மாஸ்.

வியாசர்பாடியின் பருந்து பார்வை காட்சி ஒன்று போதும் முகேஷின் ஒளிப்பதிவை பாராட்ட. ஒவ்வொரு காட்சியையும் ஒளிஓவியமாக தீட்டியிருக்கிறார். குறிப்பாக, விஜய் ஆண்டனிக்கும், வில்லனுக்கும் இடையேயான சண்டை காட்சி செம லைட்டிங். ரிச்சர்ட் கேவினின் எடிட்டிங் படத்தை பற்றி பேச வைத்திருக்கிறது. இரண்டாம் பாதியை இன்னும் சுருக்கியிருந்தால், ரிச்சர்ட்டை பற்றி இன்னும் நிறைய பேசியிருக்கலாம்.

படத்தின் மேக்கிங் மற்றும் திரைக்கதை புதிதாக இருந்தாலும் கதை பழையது தான். சத்யராஜ், சுஜாதா நடித்த 'விடிஞ்சா கல்யாணம்' படத்தை தான் கொலைகாரன் கதை ஞாபகப் படுத்துகிறது.

இருப்பினும் அடர்ந்த காட்டுக்குள் மேற்கொள்ளும் டிரெக்கிங்கை போல் திரில்லிங் அனுபவத்தை தருகிறான் இந்த கொலைகாரன்.

   
 
ஆரோக்கியம்