Back
Home » Business
ஓரமா போய் சண்டை போடுங்க... வியாபாரம் பாதிக்குதுல்ல- அமெரிக்கா சீனாவை எச்சரிக்கும் ஐஎம்எஃப்
Good Returns | 11th Jun, 2019 11:31 AM
 • அமெரிக்காவின் வரலாறு

  வல்லரசு நாடான அமெரிக்கா தன்னுடைய கழுகுப்பார்வையில் இருந்து யாரும் தப்பிக்க கூடாது என்ற எண்ணத்தில் அனைத்து நாடுகளையும் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்துக்கொண்டிருக்கிறது. தனக்கு கைகட்டி அடிபணிந்து நடக்கும் நாடுகளை தடவிக்கொடுத்து தனக்கு வேண்டியதை சாதித்துக்கொள்ளும். அதேபோல் எந்த நாடாவது சற்று முறைத்துக்கொண்டால், அந்த நாட்டை தரைமட்டமாக்கும் வரையிலும் ஏதாவது ஏழரையை இழுத்துக்கொண்டே இருக்கும். அமெரிக்காவின் 300 ஆண்டு வரலாறும் நமக்கு இதைத்தான் எடுத்துக்காட்டுகிறது.


 • பொருளாதாரத் தடை மிரட்டல்

  முதலில் பாலஸ்தீனத்தை உலக வரைபடத்திலிருந்து எடுத்துவிட்டு, இஸ்ரேலை கொண்டுவந்துவிட்டது. பின்னர் ஈராக்கை தரைமட்டமாக்கியது. இப்பொழுது ஈரான் நாட்டின் மீது தன்னுடைய பார்வையை பதித்துள்ளது. அதற்கு காரணம் அதன் எண்ணை வளம்தான். அதை அபகரிக்க அணு ஆயுதத்தை வைத்துள்ளது என்றும் யுரேனியத்தை பிற நாடுகளுக்கு விற்பனை செய்கிறது என்றும் கொளுத்திப்போட்டதோடு, பொருளாதாரத் தடையையும் விதித்தது. இதன் காரணமாக ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.


 • தினசரி நடவடிக்கை

  அடுத்ததாக, கடந்த சில மாதங்களாக, ஆசிய நாடுகளான இந்தியா மற்றும் சீனாவோடும், அண்டை நாடுகளான மெக்ஸிகோ மற்றும் கனடா ஆகியவற்றுடனும் வர்த்தகப் போரை நடத்திக்கொண்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய தினசரி நடவடிக்கையில், இன்றைக்கு எந்த நாட்டை ஓரண்டைக்கு இழுக்கலாம் என்று யோசித்து அதற்கேற்ப தன்னுடைய தினசரி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.


 • இந்தியா, சீனாவோடு மோதல்

  அண்டை நாடான மெக்ஸிகோவுடன் தற்போது சமாதானமாகி வரியில்லாத வர்த்தகம் நடைபெற ஒப்பந்தம் மேற்கொள்ள ட்ரம்ப் முன்வந்துள்ளார். இது வரவேற்கத்தக்கதாகும். ஆனால் சீனாவுடனும், இந்தியாவுடனும் இன்னமும் மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தொடர்ந்து கூடுதல் வரி விதிக்கப்போவதாக மிரட்டிக்கொண்டிருக்கிறார்.


 • வர்த்தக முன்னுரிமை சலுகை ரத்து

  அடுத்ததாக இந்தியாவுடன் இறக்குமதி வரி தொடர்பாக தொடர்ந்து மிரட்டும் தொனியிலேயே நடந்து கொண்டு வருகிறார். இந்தியா பேச்சுவார்த்தைக்கு அழைத்தும், அதை உதாசீனப்படுத்திவிட்டு, இந்தியாவுக்கு அளித்து வந்த முன்னுரிமை வர்த்தக சலுகையை ரத்து செய்துவிட்டது. இதனால் இந்தியாவுக்கு பெரிதாக நட்டம் ஒன்றும் ஏற்படப்போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 • ஜி-20 உச்சிமாநாடு

  இந்நிலையில் கடந்த 8 மற்றும் 9ஆம் தேதிகளில் ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் அந்த நாடுகளின் தலைமை வங்கிகளின் (Reserve Bank) ஆளுநர்களும் பங்கேற்ற மாநாடு ஜப்பானின் ஃபுகோகா நகரில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.


 • பொருளாதார மந்தநிலை

  ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களின் கூட்டத்தை ஜப்பான் நிதியமைச்சர் தரோ அசோ (Taro Aso) தொகுத்து வழங்கினார். இதில் பல்வேற உலக நடப்புகள் அலசப்பட்டன. குறிப்பாக உலகளாவிய பொருளாதார மந்த நிலைமை பற்றியும், அமெரிக்கா மற்ற நாடுகளுடன் நடத்தி வரும் வர்த்தகப் போர் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர், கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் முக்கியமாக அமெரிக்கா மற்ற நாடுகளுடன் மேற்கொண்டுள்ள வர்த்தகப்போர் பற்றியே அதிகமாக அலசப்பட்டது.


 • மெக்ஸிகோவுடன் எல்லை தகராறு

  அமெரிக்கா தனது அண்டை நாடுகளான மெக்ஸிகோ மற்றும் கனடா நாடுகளுடன் நடத்தி வரும் எல்லைப் பிரச்சனை பற்றியும், வர்த்தகப் பிரச்சனை பற்றியும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக மெக்ஸிகோவுடன் குடியேற்றப் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து, மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 5 சதவிகித வரி விதிக்கத் தொடங்கியது. இருந்தாலும் சில நாட்களுக்கு முன்பு தான் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, இறக்குமதி வரியை அமெரிக்கா நீக்கியது.


 • கூகுளுக்கு வரி

  அடுத்ததாக, இணையதள நிறுவனங்களான கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்றவற்றுக்கு உலகளாவிய வரி (Global Tax) விதிப்பது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதோடு அமெரிக்க மற்ற நாடுகளோடு மேற்கொண்டு வரும் வர்த்தகப் போரால் சர்வதேச பொருளாதாரமும் சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதனை தடுத்து நிறத்த தேவையான நடவடிக்கை எடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.


 • சர்வதேச சந்தை சரியும் அபாயம்

  அமெரிக்கா மேற்கொண்டுள்ள வர்த்தகப் போரால் சர்வதேச சந்தையில் முதலீடு செய்வதற்கும் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தையும் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் கூட சரியும் வாய்ப்பு அதிகமாவே உள்ளது. அதோடு வர்த்தக ரீதியான பதட்டமும், புவி இடம் சார்ந்த பதற்றமும் அதிகரித்துள்ளது.


 • பஞ்சாயத்துக்கு நாங்க தயார்

  எனவே, இந்த வர்த்தகப்போரால் சர்வதேச பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை நீக்க தேவைப்பட்டால் இதில் தலையிட்டு தேவையான நடவடிக்கை எடுக்கவும் ஜி-20 நாடுகள் தயாராக உள்ளோம். மேலும் அனைவருக்கும் இடையில் கருத்தொற்றுமை அடிப்படையிலான சமாதான தீர்வை எட்ட எங்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்கவே விரும்புகிறோம் என்றும், மாநாட்டின் முடிவில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.


 • பொருளாதாரம் ஆட்டம் காணும்

  ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்களின் கூட்டம் நடைபெற்ற கடந்த ஞாயிறன்று, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரான கிறிஸ்டின் லகார்டெ (Christine Lagerde) ஜப்பானின் நிக்கி டெய்லி (Nikkei Daily) நாளிதழுக்கு பேட்டியளிக்கும்போது, வர்த்தகப்போர் என்பது சர்வதேச பொருளாதாரத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணவைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.


 • 32 லட்சம் கோடி ரூபாய் பாதிப்பு

  வர்த்தகப் போர் என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட காயம் போல, அசட்டையாக இருந்தால், சிறிது சிறிதாக சர்வதேச பொருளாதாரத்தை நாசம் செய்துவிடும். இதனால் அடுத்த ஆண்டில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி 0.5 சதவிகித அளவுக்கு அதாவது சுமார் 32 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது இந்த பாதிப்பு என்பது தென்னாப்பிரிக்காவின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் காட்டிலும் அதிகமாகும் என்றும் லகார்டெ கவலையுடன் குறிப்பிட்டார்.
ஃபுகோகா: அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கிடையே நடக்கும் வர்த்தகப்போரால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியே சரிவை நோக்கி சென்றுகொண்டுள்ளது. எனவே விரைவில் இதற்கு தீர்வுகாண வேண்டியது கட்டாயம் என்றும் ஜி-20 நாடுகளின் மாநாட்டில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் இந்தியாவின் சார்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸூம் கலந்துகொண்டனர். இதில் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்றவற்றுக்கு உலகளாவிய வரி விதிப்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது

மேலும் அமெரிக்கா, சீனா, இந்தியா, நாடுகளுக்கு இடையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இறக்குமதி வரி பிரச்சனை, ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிப் பிரச்சனை போன்றவற்றை முடிவுக்கு கொண்டுவரவும் கருத்தொற்றுமை அடிப்படையிலான தீர்வை எட்ட எங்களின் முயற்சியை இரட்டிப்பாக்க விரும்புகிறோம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   
 
ஆரோக்கியம்