Back
Home » Business
பட்ஜெட் 2019-20: ஐடியா கொடுக்க வாங்க... ஆலோசனைக்கூட்டத்திற்கு அழைக்கும் நிர்மலா சீதாராமன்
Good Returns | 11th Jun, 2019 02:24 PM

டெல்லி: நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி அதற்கான ஆயத்தப்பணிகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டுள்ளார். பட்ஜட் தயாரிப்பதற்கான ஆலோசனைகளை பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அவர் கேட்டுள்ளார். இதற்கான ஆலோசனைக் கூட்டத்தையும் இன்று கூட்டுகிறார்.

இதற்காக இன்று அவர் பொருளாதார நிபுணர்கள், வரி ஆலோசகர்கள் மற்றும் வங்கித் துறையினரை சந்தித்து ஆலோசிக்க உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கி வரும் ஜூன் 23ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்றும் நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைந்ததால் நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் இடைப்பட்ட ஏப்ரல்- ஜூன் வரையிலான மூன்று மாதங்களுக்கான மத்திய அரசின் அத்தியாவசிய செலவினங்களை மேற்கொள்வதற்காக லோக்சபாவின் ஒப்புதலுடன், கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது லோக்சபா தேர்தல் நிறைவுபெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. மோடியே மீண்டு பிரதமராக தொடர்கிறார். முந்தைய பாஜக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, தன்னுடைய உடல் நிலைமையை காரணம் காட்டி நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.

இதையடுத்து பிரதமர் மோடி, தனக்கு அடுத்து அதிகாரம் மிக்க நிதியமைச்சர் பதவிக்கு முந்தைய ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனை கொண்டு வந்தார். அவரும், நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

பட்ஜெட் தாக்கலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பட்ஜெட் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துவிட்டார். பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளை பலதரப்பினரிடம் இருந்தும் கேட்டுள்ளார். பொது மக்களும் தங்களின் கருத்துக்களை கூறும்படி அறிவித்துள்ளார். பொதுமக்களும் தங்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் மத்திய அரசின் my.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது.

பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தை ஜூன் 11ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலும் நடத்தப்போவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்தக்கூட்டத்தில் அனைத்து பொருளாதார நிபுணர்கள், தொழில் துறை அமைப்பினர், வங்கித்துறை அதிகாரிகள், வரி ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.. மேலும் பட்ஜெட் குறித்து பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்களின் கருத்துக்களையும் கேட்க உள்ளார். முதல் முறையாக நிதியமைச்சராக பொறப்பேற்கும் அவர் முன் நிறைய சவால்கள் காத்திருக்கின்றன.

வருவாய் துறை செயலாளர் அஜய் பூசன் பாண்டே (Ajay Bhushan Pandey) ஏற்கனவே தொழில்துறை பிரமுகர்களுடன் தனது முதல் சுற்று பேச்சுவார்த்தையை முடித்துவிட்டார். இதில் அனைத்து தொழில் துறையினரும் நிறுவனங்களுக்கு விதிக்கும் நிறுவன வரியை குறைக்குமாறும், மேட் வரியை (MAT) நீக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும், வாகன உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு மின்சார வாகன உற்பத்திக்கு சலுகைகளை வழங்கவேண்டும் என்றும், தனிநபர் பிரிவின் கீழ் வருமான வரி செலுத்துபவர்களுக்கு பணவீக்க உயர்வை கருத்தில் கொண்டு. படிச்செலவுகளை (allowances)யும் வருமான வரியில் விலக்கு அளிக்க முன்வரவேண்டும் என்றும் தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், சரிந்து வரும் பொருளாதார வளர்ச்சி விகிதம், ரிசர்வ் வங்கியின் உச்சவரம்பைப் காட்டிலும் உயர்ந்துவரும் பணவீக்க விகிதம், வங்கிகளின் வாராக்கடன் பிரிச்சனையால் வங்கிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பீடு, வங்கி சாரா நிதி நிறுனங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதிப்பிரச்சனைகள், தனியார் முதலீடுகள், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள வர்த்தகப்பற்றாக்குறை என இவர் முன் பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கின்றன. இதை எல்லாம் திறம்பட சமாளிக்கும் வகையில் நிர்மலா சீதாராமன் தனது முதல் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்து மோடியின் குட்புக்கில் இடம்பெறுவாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

   
 
ஆரோக்கியம்