Back
Home » திரைவிமர்சனம்
Thumba Review: புலி, குரங்கு, அணில், மான், யானை... குழந்தைகளை மகிழ்விக்கும் தும்பா! விமர்சனம்
Oneindia | 22nd Jun, 2019 12:18 PM

சென்னை: ஒரு பெண் புலியை காப்பாற்ற போராடும் மூன்று இளைஞர்களின் கதையே தும்பா.

நாயகன் 'கனா' தர்ஷனுக்கு டீக்கடை தொடங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் அதற்கு பணம் இல்லாததால், கிடைத்த வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் நண்பன் தீனாவுடன் சேர்ந்து, டாப்ஸ்லிப்புக்கு பேயின்டிங் வேலைக்கு உதவியாக செல்கிறார்.

ஒயில்ட் லைப் போட்டோகிராப்பரான கீர்த்தி பாண்டியனுக்கு, புலிகளை போட்டோ எடுக்க வேண்டும் என்பது ஆசை. அதற்காக அவரும் டாப்ஸ்லிப் வருகிறார். புலியை போட்டோ எடுக்க உதவினால் பணம் தருவதாக கீர்த்தி கூற, தர்ஷனும், தீனாவும் அவருடன் உதவியாக காட்டுக்குள் செல்கிறார்கள்.

இந்த நிலையில், கேரள வனப்பகுதியில் இருந்து டாப்ஸ்லிப் வனத்துக்குள், தனது குட்டியுடன் ஒரு பெண் புலி நுழைகிறது. அதனை எப்படியாவது வேட்டையாடி பணம் பார்க்க வேண்டும் என துடிக்கிறார் வனத்துறை அதிகாரி. புலி இவர்களை வேட்டையாடியதா? இல்லை புலியை அவர்கள் பிடித்தார்களா என்பதே தும்பா சொல்லும் ஜாலிக் கதை.

இயற்கையின் சமநிலைக்கும், காடுகள் அழியாமல் இருப்பதற்கும் புலிகள் எவ்வளவு முக்கியம் என்பதை தும்பா மூலம் ஜாலியாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹரீஷ் ராம். முழக்க முழக்க குழந்தைகளை மனதில் வைத்தே படத்தை உருவாக்கியிருக்கிறார். அதனால் காதல் கசமுசா எல்லாம் இல்லாமல், படம் கண்ணியமாக இருக்கிறது.

படத்தில் வரும் வனவிலங்குகள் எல்லாமே கிராப்பிக்ஸ் தான். ஆனால் அதனை உயர்ந்த தரத்தில் நம்பும்படியாக உருவாக்கியிருக்கிறார்கள். அதனால் நெருடல் இல்லாமல் படத்தை பார்க்க முடிகிறது. கிராப்பிக்ஸ் அணில் மற்றும் 'டைகர்' குரங்கு செய்யும் சேட்டைகளை குழந்தைகள் நிச்சயம் ரசிப்பார்கள்.

பெண் புலியின் கிராப்பிக்ஸ் காட்சி தத்ரூபமாக இருப்பதால், சண்டைக்காட்சிகளும் அவ்வாறே உள்ளன. இருந்தாலும், சிங்கம் சூர்யா ரேஞ்சுக்கு 'தும்பா' சண்டை போடுவதெல்லாம் டூ டூ மச் ப்ரோ. குழந்தைகள் மட்டும் பார்தாங்கன்னா ஓகே.

'கனா' தர்ஷனுக்கு அப்பாவியான பயந்தாங்கொள்ளி இளைஞர் வேடம். கனாவை போலவே சிறப்பாக செய்திருக்கிறார். தீனாவுடன் சேர்ந்து அவர் செய்யும் சேட்டைகள், சிரிப்புக்கு கேரண்டி தருகிறது. தீனாவும் தன்பங்குக்கு கவுண்டர் டயலாக்குகளில் கலக்குகிறார்.

கீர்த்தி பாண்டியனை பற்றி சொல்ல வேண்டும் என்றால், "ஒல்லிக்குச்சி உடம்புக்காரி, நடிப்புல நீ கெட்டிக்காரி" என பாட்டாவே பாடலாம். சின்னதாக ஒரு ஷாட்ஸ் போட்டு நடித்திருந்தாலும், விரசமாக தெரியவில்லை. அதுதான் இந்த படத்தில் கீர்த்தியின் பிளஸ் பாயிண்ட். மற்றப்படி கீர்த்தியை ஒயில்ட்லைப் போட்டோகிராப்பர் என சொன்னால், குழந்தைகள் வேண்டுமானால் நம்பலாம்.

ஒரே ஒரு காட்சியில் தோன்றி, ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிவிட்டு போகிறார் ஜெயம் ரவி. ஒரு வாசகம் என்றாலும், திருவாசகமாக சொல்லிவிட்டு செல்கிறார்.

புலியை வேட்டையாட வரும் ஜார்ஜும், அவரது கூட்டாளியும் சீரியஸாக காமெடி செய்கிறார்கள். 'இட்லி என சொன்னால் சட்னி கூட நம்பாது' எனும் ரேஞ்சுக்கு தான் படம் முழுவதும் வலம் வருகிறார்கள். அதுவும் வனத்துறை அதிகாரி கேரக்டர், திணிக்கப்பட்ட வில்லத்தனம்.

அனிருத், விவேக் - மெர்வின் இசையில் அனைத்து பாடர்களும் ரம்மியமாக வந்துள்ளன. 'சில்லாரா' பாட்டு செம மெட்டு. தனது பின்னணி இசையால் படத்தை தூக்கி நிறுத்துகிறார் சந்தோஷ் தயாநிதி. ஒலிக்கலவையும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் ரியல் ஹீரோ நரேன் எலனின் கேமரா தான். டாப்ஸ்லிப்பின் இயற்கை எழிலை, அப்படியே படம் பிடித்திருக்கும் நரேன், காட்டுக்குள் நம்மை ஒரு டிரெக்கிங் அழைத்து செல்கிறார். இரண்டாம் பாதியை போல், முதல் பாதி படத்தையும் ஷார்ப்பாக எடிட் செய்திருக்கலாம் படத்தொகுப்பாளர் கலைவானன்.

கதையில் நம்பகத்தன்மை மிகவும் குறைவு. நிறைய இடங்களில் காதில் பூ சுற்றுகிறார் இயக்குனர். புலியை நேருக்கு நேர் போட்டோ எடுப்பதெல்லாம் கிராப்பிக்சில் மட்டும் தான் சாத்தியம் ப்ரோ. இருந்தாலும், ஒரு புலி எப்படி மேன் ஈட்டராக மாறுகிறது என்பதை சொன்னவிதம் அருமை.

குழந்தைகளை மகிழ்விக்கும் நகைப்பாவாக வந்துள்ளது தும்பா.

   
 
ஆரோக்கியம்