Back
Home » திரைவிமர்சனம்
Pakkiri Review: 'ஜாலியா ஒரு வெர்ல்ட் டிரிப் போலாமா'... வாங்க 'பக்கிரி'க்கு போகலாம்... விமர்சனம்!
Oneindia | 22nd Jun, 2019 03:23 PM

சென்னை: பார்வையாளர்களை ஒரு உலக சுற்றுலாவுக்கு ஜாலியாக கைப்பிடித்து அழைத்து செல்கிறது பக்கிரி.

'தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் ஹூ காட் ட்ராப்ட் இன் ஆன் இகியா வார்ட்ரோப் (The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe)' என்ற பிரெஞ்ச் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ஹாலிவுட் படம் தான் ஃபக்கீர். கடந்த வருடம் பிரான்ஸ் நாட்டில் வெளியான இப்படத்தை தான் தற்போது தமிழில் டப் செய்து 'பக்கிரி'யாக வெளியிட்டுள்ளனர்.

மும்பையின் சேரி பகுதியில் வசிக்கும் சிறுவன் தனுஷுக்கு அவரது அப்பா யார் என்றே தெரியாது. அம்மா தான் சிரமப்பட்டு வளர்க்கிறார். எப்படியாவது பணக்காரனாக வேண்டும் எனும் லட்சியத்துடன் மேஜிக் கற்றுகொள்கிறான் சிறுவன்.

தனுஷும் அவரது கூட்டாளிகளும் கண்கட்டி வித்தைகாட்டி மக்களிடம் இருந்து பணம், செல்போன் போன்றவைகளை பறிக்கிறார்கள். பெரியவனான இந்த வேலையை தொடர்ந்து செய்யும் தனுஷ், தாயின் மறைவிற்கு பிறகு பிரான்ஸ் செல்கிறார். அங்கிருந்து, உலகின் பல்வேறு பகுதிகளிலுக்கு பயணப்படுகிறார். அவரது ஜாலியான பயண அனுபவங்களுடன், நம்மையும் கைப்பிடித்து உலக சுற்றுலாவுக்கு அழைத்து செல்கிறது படம்.

ஒரு ஹாலிவுட் படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் நடிக்கிறார் என்பது எத்தனை பெருமையான விஷயம். தனக்கும், மற்றவர்களுக்கும் அந்த பெருமையை தேடித்தந்த தனுஷுக்கு முதலில் பாராட்டுகள். தனுஷின் நடிப்பை பற்றி புதிதாக சொல்ல வேண்டியதில்லை. படம் முழுவதும் அவரது ராஜ்ஜியம் தான்.

தனுஷுக்கு அடுத்தப்படியாக நம்மை அதிகம் கவர்பது, அவரது சிறு வயது பாத்திரத்தில் நடித்திருக்கும் ஹார்ட்டி சிங். சின்ன சின்ன விஷயங்களில் கூட நம் மனதை கொள்ளை கொள்கிறான். தனுஷின் அம்மாவா நடித்துள்ள அம்ருதாவும் கவனம் ஈர்க்கிறார்.

ஒரே காட்சியில் தனுஷுடன் காதலில் விழும் எரின் மொரியாட்டி அழகு பதுமையாக வருகிறார். நன்றாக நடித்தும் இருக்கிறார். நடிகையாகவே வரும் இன்னொரு நாயகி பெரினீ பேஜோவும் சிறப்பான தேர்வு. தனுஷின் கூட்டாளியாக கறுப்பின இளைஞராக வரும் பர்காத் அப்டி, கஸ்டம்ஸ் ஆபிசராக வந்து காமெடி செய்யும் பென் மில்லர் என அனைவரும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துகிறார்கள்.

குழந்தைகளுக்கு ஏற்புடையதாக இல்லை என்றாலும், படத்தின் நடுவே வரும் 'லெஸ்பியன்' விவகாரம், ரசிக்கும்படியான அடல்ட்ஸ் ஒன்லி காமெடி. ஐரோப்பிய நாடுகளில் அகதிகள் எவ்வாறு கையாளப்படுகிறார்கள் என்பதையும் மேலோட்டமாக காட்டியிருக்கிறார்கள்.

பர்னிச்சர் கடையில் தனுசும் எரினும் காதலை பரிமாறிக்கொள்ளும் காட்சிகள், தன் பணத்தை எல்லாம் அகதிகளுக்கு தனுஷ் பிரித்து கொடுக்கும் காட்சி, சிறையில் தனுஷுக்கு உலகின் இன்னொரு பக்கத்தை காட்டும் கண் தெரியாத பாபா என்று படம் முழுக்க ரசிக்க வைக்கின்றன. ஆங்கில படங்களுக்கே உரித்தான லாஜிக் மீறல்களும் இதில் உண்டு.

பிரான்ஸ், லண்டன், ஸ்பெயின், இத்தாலி, லிபியா என பல்வேறு நாடுகளையும், மனிதர்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறான் பக்கிரி. படம் முழுவதும் வெவ்வேறு விதமான நிலப்பரப்புகளும், மனிதர்கள் வருவதால் சுவாரஸ்யம் குறையாமல் நகர்கிறது படம்.

பல நாடுகளில் நடக்கும் கதை என்பதால் வின்செண்ட் மேத்யூசின் ஒளிப்பதிவு அந்தந்த நாட்டின் சிறப்பான இடஙக்ளை அழகாக காட்டியுள்ளது. பாராசூட்டில் தனுஷ் பறக்கும் காட்சிகளும் ஈபிள் டவர் காட்சிகளும் கண்களுக்கு விருந்து. நிக்கோலஸ் - அமித் திரிவேதி கூட்டணியின் இசை மனதை வருடுகிறது.

ஒரு பயணத்தின் மூலம் வாழ்க்கை இவ்வளவு தான் உணர்த்துகிறான் பக்கிரி.

   
 
ஆரோக்கியம்