Back
Home » பயணம்
சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Native Planet | 24th Jun, 2019 02:54 PM

Satyajeet Sahu

சிர்பூர் அல்லது ஷிர்பூர் என்று அழைக்கப்படும் இந்த நகரம் செல்வச்செழிப்புடன் திகழ்ந்த ஒரு புராதான நகரமாக இருந்திருக்கிறது. குபேர நகரம் என்ற பொருளைத்தரும் 'ஷீபூர்' என்ற ஆதிப்பெயரால் இது அழைக்கப்பட்டிருக்கிறது. இங்கு கிடைத்திருக்கும் ஏராளமான தொல்லியல் சான்றுகள் மற்றும் இங்கு காணப்படும் தனித்தன்மையான கலாச்சார பாரம்பரிய அம்சங்கள் போன்றவை அதற்கான ஆதாரங்களாக விளங்குகின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரமான ராய்பூரிலிருந்து 80 கி.மீ தூரத்தில், மஹாநதியின் கரைப்பகுதியில் இந்த சிர்பூர் நகரம் அமைந்திருக்கிறது. பல்வேறு மதங்களையும் அரவணைத்து ஆதரவளித்து ஆண்ட ஹிந்து மன்னர்களின் மஹோன்னத ராஜ்ஜியமாக இது ஒரு காலத்தில் திகழ்ந்திருக்கிறது.

Anujsingh08

சிர்பூர் மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா சுவாரசியங்கள்!

பல்வேறு புராதன வரலாற்றுச்சின்னங்கள் இந்த சிர்பூர் பகுதியில் நிரம்பியுள்ளன. 'லக்ஷ்மணா கோயில்' எனும் புராதனமான கோயில் இந்நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாக வீற்றிருக்கிறது. இது இந்திய கோயிற்கலை நுணுக்கங்களுக்கான மிகச்சிறந்த உதாரணமாக காட்சியளிக்கிறது. அது தவிர ஆனந்த் பிரபு குடி விஹார், துர்துரியா, புத்த விஹார், ராம் கோயில், பர்ணவபாரா காட்டுயிர் சரணாலயம் மற்றும் கந்தேஷ்வர் கோயில் ஆகியவையும் இந்நகரத்தில் பார்க்க வேண்டிய விசேஷ அம்சங்களாக அமைந்திருக்கின்றன. வரலாற்றின் பக்கங்கள் ஊடே... புராதான நகரமான சிர்பூர் 5ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. 6ம் நூற்றாண்டிலிருந்து 10 ம் நூற்றாண்டு வரை இது ஒரு முக்கியமான பௌத்த யாத்திரை ஸ்தலமாக விளங்கியிருக்கிறது. இருப்பினும் 12ம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தின்போது இந்த ஒட்டுமொத்த நகரமும் புதையுண்டு போனது. அதிலிருந்து நமக்கு கிடைக்கும் சான்றுகள்தான் இந்நகரத்தின் மஹோன்னத வரலாற்று பின்னணியை கூறுகின்றன. எப்படி செல்லலாம்? ரயில் மற்றும் சாலை மார்க்கமாக மாநிலத்தின் பிற பகுதிகளுடன் நல்ல முறையில் சிர்பூர் இணைக்கப்பட்டிருக்கிறது. ராய்பூர் விமான நிலையம் சிர்பூருக்கு அருகில் உள்ளது.

ராமபிரானின் தம்பி லட்சுமணனுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்த லக்ஷ்மணா கோயில் இந்தியாவில் முதல் முதலாக செங்கற்களால் எழுப்பப்பட்ட கோயிலாக பிரசித்தி பெற்றுள்ளது. சத்திஸ்ஹர் மாநிலத்தின் தலைநகரமான ராய்பூரிலிருந்து 90 கி.மீ தூரத்தில் இந்த கோயில் அமைந்திருக்கிறது. நுணுக்கமான சிற்ப வடிப்புகள் மற்றும் கலையம்சங்களை இந்த கோயிலில் காணலாம். ஒரு பிரம்மாண்டமான பீட அமைப்பின்மீது நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த செங்கற்கோயில் மூன்று முக்கியமான அங்கங்களை கொண்டிருக்கிறது. கருவறை, அந்த்ராலா எனப்படும் நடைவெளி மற்றும் மண்டபம் என்பவையே அவை. இந்த கோயிலில் உள்ள தூண்களில் வாதயன், சித்யா காவாக்ஷா, பர்வஹாக்னா, அஜா, கீர்த்திமுக் மற்ரும் காமா அமாலக் போன்ற உருவங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

சிர்பூர் நகரம் இங்குள்ள புத்த விஹாரங்களுக்கு வெகு பிரசித்தமாக அறியப்படுகிறது. இவற்றில், ஆனந்த் பிரபு குடி விஹார் எனும் மடாலயம் முக்கியமானதாக அமைந்திருக்கிறது. இந்த புத்த விஹாரம் புத்தரின் தீவிர பக்தரான ஆனந்த் பிரபு பிக்ஷு என்பவரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த விஹாரத்தில் 14 அறைகள் மற்றும் ஒரு பிரதான வாசல் ஆகியவை அமைந்திருக்கின்றன. சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட பல கற்தூண்களையும் இதன் உள்ளே பார்க்கலாம். 6 அடி உயர புத்தர் சிலை இந்த விஹாரத்தின் நடுநாயகமாக வீற்றிருக்கிறது.

   
 
ஆரோக்கியம்