Back
Home » திரைவிமர்சனம்
House Owner Review:சென்னை வெள்ளம்.. சாரலாய் ஒரு காதல்.. பதற வைக்கும் க்ளைமாக்ஸ் .. சபாஷ் ஹவுஸ் ஓனர்!
Oneindia | 26th Jun, 2019 02:17 PM

சென்னை: 2015 சென்னை மழை வெள்ளத்தின் பின்னணியில் ஒரு காதலை மென்சாரலாய் கொண்டாடுகிறது ஹவுஸ் ஓனர்.

2015 டிசம்பர் 1,2 தேதிகளில் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை வரலாறு மறக்காது. எத்தனையோ ஆயிரம் மக்கள் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த உடைமைகளை இழந்தார்கள். பல இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. அப்படிப்பட்ட ஒரு இழப்பை பதிவு செய்யும் படம் தான் இந்த ஹவுஸ் ஓனர்.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான கிஷோர் ஒரு அல்சைமர் (ஞாபக மறதி) நோயாளி. உயிருக்கு உயிராக நேசிக்கும் தனது மனைவியின் முகமே அவருக்கு மறந்து போகிறது. சென்னையில் உள்ள ஒரு ராணுவ குடியிருப்பில் சொந்தமாக கட்டிய வீட்டில் வசித்து வருகிறார்.

திருமண பந்தம் ஆரம்பித்த நாளில் இருந்து தன்னை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்ட கணவன் (கிஷோர்), இன்று அனைத்தையும் மறந்து குழந்தையாய் மாறிப் போனதை நினைத்து தவிக்கும் மனைவி ராதாவாய் ஸ்ரீரஞ்சனி. கணவன் செய்யும் சிறுபிள்ளைத்தனமான காரியங்களை பொறுத்துக்கொண்டு, அவருக்கு ஆதரவாய் குடும்பம் நடத்தி வருகிறார்.

மகள் திருமணமாகி வெளியூர் (வெளிநாடு) சென்றுவிட, கணவனும், மனைவியும் தங்களுடைய சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். அது ஒரு மழைக்காலம். வெளியில் 'சோ'வென்று மழை கொட்டுகிறது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் உறவினர் வீடுகளுக்கு சென்றுவிட, கிஷோரின் பிடிவாதத்தால், கணவனும், மனைவியும், அதே வீட்டில் தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

நேரமாக ஆக மழை அதிகரிக்கிறது. வீட்டிற்குள் வெள்ளம் நுழைகிறது. அல்சைமர் நோயாளியான கணவரை வைத்துக்கொண்டு செய்வதறியாது தவிக்கிறார் ஸ்ரீரஞ்சனி. மழை வெள்ளத்தில் இருந்து தம்பதியர் தப்பித்தனரா இல்லையா? என்பதே படபடக்கும் க்ளைமாக்ஸ்.

மிகவும் எளிமையான ஒரு காதல் கதை. மழையை பின்னணியாக வைத்துக்கொண்டு, கிளாசிக் திரைக்கதையில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன். சிறுவயதில், திருமணமான புதிதில், இளம் ஜோடிகளுக்கு இடையேயான அன்னியோன்யத்தை அத்தனை அழகாக காட்டியிருக்கிறார்.

அந்த இளம் வயது காதலை மட்டுமே நினைவில் கொண்டிருக்கும் கிஷோரும், முதுமையின் இயலாமையிலும் கணவன் மீது நிபந்தனையற்ற அன்பு செலுத்தும் ஸ்ரீரஞ்சனியும், உண்மைக் காதலின் சின்னங்கள். ஒவ்வொரு காட்சியையும், பிரேமையும் நுட்பமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

சிறு வயது காதல், முதுமைப்பருவ மோதல் என இரண்டையும் பேலன்ஸ் செய்து காட்சியாக்கியிருக்கிறார். "கண்ணன் ஒரு கைக்குழந்தை" என ரேடியோவில் ஒலிக்கும் பாடலாகட்டும், செய்தி சேனலில் திக்கித்திக்கி ரிபோர்டிங் செய்யும் நிருபராகட்டும், அனைத்தையும் தனது படத்தின் சூழ்நிலையாக்கிறார் லட்சுமி.

குறிப்பாக, கடைசி 20 நிமிடக் காட்சிகள் மனதை பதைபதைக்க வைக்கிறது. வீட்டுக்குள் தண்ணீர் புகும் காட்சிகளை எல்லாம் மிக தத்ரூபமாக எடுத்திருக்கிறார். இது தான் முடிவு என சொல்லாமல், சில குறியீடுகளை மட்டும் காட்டிவிட்டு, பார்வையாளர்களின் முடிவுக்கே படத்தை விட்டுவிடுகிறார் இயக்குனர்.

ஒரு நிஜ வீட்டுக்குள் கணவன், மனைவி எப்படி இருப்பார்களோ, அதை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள் ஸ்ரீரஞ்சனியும், கிஷோரும். கணவனின் முந்தைய கால அன்பை நினைப்பில் வைத்துக் கொண்டு, நிகழ்காலத்தில் அவர் உமிழும் வெறுப்பை பொறுத்துக்கொண்டு, பதிலுக்கு காதலை மட்டுமே பரிசாக தந்து, நம்மை நெகிழ வைக்கிறார் ஸ்ரீரஞ்சனி. க்ளைமாக்சில் அவர் பதறும் காட்சிகள், நம் மனதை இறுக்கமாக்கி விடுகிறது.

மறதியால் ஸ்ரீரஞ்சனியை கட்டிப்பிடித்து டான்ஸ் ஆடிவிட்டு, பின்னர் ஞாபகம் வந்தவராய் அவரைப்பிடித்து தள்ளும் அந்த ஒரு காட்சி போதும், கிஷோர் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பதை சொல்ல. வயோதிகராய், அல்சைமர் நோயாளியாய், இளம் வயது காதலில் மலரும் நினைவுகளில் மூழ்கிக் கிடப்பவராய் என கர்னல் வாசுதேவனாகவே வாழ்ந்திருக்கிறார்.

விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் நல்ல அறிமுகம். அழகாய் வெட்கப்படுகிறார். கண்கள் விரித்து, படர்ந்து சிரிக்கிறார். பசங்க கிஷோருக்கு, குட்டி பையனில் இருந்து வாலிப புரோமோஷன். நல்லா ரொமான்ஸ் செய்திருக்கிறார்.

மழை கொட்டும் வேளையில் காரில் இளையராஜா பாடலை கேட்டுக்கொண்டே கார் ஓட்டும் சுகத்தை தருகிறது ஜிப்ரானின் இசை. நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி, தூக்க வேண்டிய இடத்தில் தூக்கி, படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

படத்தின் உண்மையான ஹீரோ கேமராமேன் கிருஷ்ணா சேகர் தான். சென்னை வெள்ளம், பாலகாட்டு மழை, ராணுவ முகாம் என அனைத்தையும் தத்ரூபமாக காட்சிப் படுத்தி இருக்கிறார். நான்கு வருடங்களுக்கு முன்னர் நாம் நேரில் அனுபவித்ததை, அப்படியே க்ளைமாக்ஸ் காட்சியில் கண்முன் கொண்டு வந்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து வெட்டியிருக்கிறார் எடிட்டர் பிரேம் குமார்.

விதவை பாட்டிக்கு பூக்கொடுப்பது, பிராமணனாக இருந்து கொண்டு அசைவம் சாப்பிடுவது என சில முற்போக்கு விஷயங்களையும் காட்டியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதேநேரத்தில், படத்தில் சாதிய வாடை தூக்கலாக இருக்கிறது.

படத்தின் ஹீரோ, ஹீரோயின் பாலக்காட்டு பிராமணர்களாக காட்டப்படுகிறார்கள். ஆனால் இந்த காதலை உணர்த்த, பாலக்காட்டு பிராமணர்கள் எனும் அடையாளம் இயக்குனருக்கு ஏன் தேவைப்பட்டது என தெரியவில்லை. எந்த சாதிய அடையாளமும் இல்லாமல் இந்த காதலை காட்டியிருக்கலாமே. சாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் கடந்தது தானே காதல். அதை சொல்ல ஏன் இந்த சாதிய அடையாளம் லட்சுமி ராமகிருஷ்ணன்.

கிஷோரின் செயல்பாடுகள் அவருக்கு இருப்பது அல்சைமர் நோய் தானா, அல்லது வேறு ஏதாவது மனப்பிரழ்வா எனும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல், படத்தின் முடிவை பார்வையாளர்களின் கையில் விட்டது, பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறி, குழப்பத்தையே உருவாக்குகிறது. "என்ன சொல்ல வர்றாங்க. அவங்க ரெண்டு பேரும் செத்துட்டாங்களா இல்லை தப்பிச்சுட்டாங்களா", எனும் குழப்பமான மனநிலையில் தான் பார்வையாளர் தியேட்டரைவிட்டு வெளியே வருகிறார்கள். தலைப்பும் படத்துடன் ஒட்டவில்லை.

சாதிய அடையாளங்களை களைந்து, காதலை மட்டும் கொண்டாடியிருந்தால் 'ஹவுஸ் ஓனர்'ன் காதலில் நாமும் மூழ்கியிருக்கலாம்.

   
 
ஆரோக்கியம்