Back
Home » திரைவிமர்சனம்
Sindhubaadh Review: இது கன்னித்தீவு இல்ல.. ஆனா, அதே சிந்துபாத் தான்.. அப்பா, மகனின் மேஜிக் புதுசு!
Oneindia | 27th Jun, 2019 04:09 PM

சென்னை: வெளிநாட்டில் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் மனைவியை காப்பாற்ற கடல் கடந்து செல்லும் கணவனே சிந்துபாத்.

நம்ம தாத்தாக்களில் இருந்து, இப்போதைய தலைமுறை வரை எல்லோருக்குமே சிந்துபாத் கதை நல்லாவே தெரியும். இன்னமும் கடல் கடந்து போய்டே தான் இருக்கார் சிந்துபாத். அதே கதையை காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன் கலந்து தனது ஸ்டைலில் மாஸாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் அருண்குமார்.

தென்தமிழ்நாட்டில் (அப்டி தாங்க லொகேஷன் கார்டு போட்டாங்க) உள்ள ஒரு ஊரில், ராபின்ஹுட் ஸ்டைலில் சின்ன சின்ன திருட்டு வேலைகள் செஞ்சுட்டு வராங்க திருவும் (விஜய் சேதுபதி), அவரோட உடன்பிறவா தம்பி சூப்பரும் (சூர்யா விஜய் சேதுபதி). விஜய் சேதுபதிக்கு சத்தமா பேசுனா தான் காது கேட்கும்.

மலேசியாவுல ரப்பர் தோட்டத்துல வேலை பார்க்கும் வெண்பா (அஞ்சலி), லீவுக்காக அம்மா வீட்டுக்கு (விஜய் சேதுபதி இருக்கும் அதே ஊர்) வராங்க. அஞ்சலிக்கு மெதுவா பேச வராது. எப்பவுமே கத்தி கத்தி தான் பேசுவாங்க. இதனால மாப்பிள்ளை செட்டாகல.

காது பிரச்சினை இருக்கும் விஜய் சேதுபதிக்கு, தொண்டை பிரச்சினை உள்ள அஞ்சலி மீது காதல் உருவாகுது. வழக்கம் போலதான், முதல்ல நோ சொல்லும் அஞ்சலி, பின்னாடியே சுத்தும் விஜய் சேதுபதிக்கு கொஞ்ச நாள் கழிச்சி ஓகே சொல்லிட்றாங்க. அப்புறம் என்ன, டூயட், லிப்லாக் என வாழ்க்கை ஜாலியா நகருது.

இவங்க காதலுக்கு பிரச்சினையா வர்றாரு அஞ்சலியோட அக்கா கணவர் அருள்தாஸ். விஜய் சேதுபதி அவரைப்போட்டு ரோட்டுல புரட்டி எடுக்குறாரு. லீவு முடிஞ்சு அஞ்சலி மலேசியாவுக்கு திரும்பும் போது, ஏர்போர்ட்ல வெச்சு விஜய் சேதுபதி தாலிக்கட்ட, அங்கேயே இரண்டு பேருக்கும் கல்யாணம் ஓவர்.

கட்டின தாலியோட மலேசியா போகும் அஞ்சலி, ஒரு பிரச்சினையில சிக்கி தாய்லாந்துக்கு கடத்தப்படுறாங்க. இதை விஜய் சேதுபதிக்கிட்ட போன் போட்டு சொல்ல, அவரும், சூப்பரும் திருட்டு பாஸ்போர்ட்டில், பாரின் கிளம்புறாங்க. போன இடத்துல அந்த ஊரு தாதா லிங்காவுக்கும் விஜய் சேதுபதிக்கும் முட்டிக்குது. லிங்காவ சமாளிச்சு, விஜய் சேதுபதியும், சூர்யாவும், அஞ்சலிய எப்டி காப்பாத்துறாங்கன்றது தான் மீதிப்படம்.

கதை என்னமோ பழசு தான். ஆனா அதுல ஸ்கின் டிரேட், மலேசியா, தாய்லாந்து, கம்போடியான்னு புதுசா ரீல் சுத்தியருக்காரு இயக்குனர் அருண்குமார். முதல் பாதி படம் ஜாலியா, கலகலப்பாக நகருது. இடைவேளை வரும் போது சீரியஸ் டோனுக்கு மாறிடுது.

இரண்டாம் பாதி படம் முழுக்க ஆக்ஷன் தான். விஜய் சேதுபதியும், சூர்யாவும் ஒரு பக்கம் கலாய்ச்சிக்கிட்டே மறுபக்கம் சண்டை போட்டு, படத்த முடிக்கிறாங்க. விதவிதமான லொகேன்ஷன்கள் கண்ணுக்கு விருந்து படைக்குது.

மாஸ் ஹீரோ படம்ன்னு முடிவு பண்ணத்துக்கு பிறகு லாஜிக் எல்லாம் எதுக்குன்னு முடிவு பண்ணிட்டார் இயக்குனர். வெளிநாட்டுல ஒரு இந்தியர் பிரச்சினையில் மாட்டிக்கிட்டா, இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்றது தான் முதல் வேலையாக இருக்கும். பாவம் அவங்க ஏற்கனவே பிஸியா இருப்பாங்கன்னு நினைச்சு, அதிகாரிகளை எல்லாம் தொந்தரவு செய்யாம விஜய் சேதுபதியே நேரா கிளம்பி தாய்லாந்து, கம்போடியான்னு ஊர் சுற்றி சண்டை போட்டு, சிலப்பல கொலைகளை செஞ்சு மனைவியை காப்பாத்துறாரு.

விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்ப பற்றி நம்ம எல்லோருக்கும் நல்லாவே தெரியும். இந்த படத்துல பெரிய சர்ப்ரைஸ் 'சூப்பர்' சூர்யா தான். ஒவ்வொரு சீன்லயும் செமையா ஸ்கோர் செஞ்சிருக்காரு. அதுவும் ஜார்ஜ்கிட்ட 'சூப்பர்' கதை சொல்லும் இடம் செம கலாய். அப்பாவோட சேர்ந்து செமையா லூட்டி அடிச்சிருக்காரு.

சின்ன சின்ன ரியாக்ஷன் காண்பிச்சு படத்த கலகலப்பா நகர்த்தறாரு விஜய் சேதுபதி. ஏர்போர்ட் டில் அஞ்சலிக்கு தாலிக்கட்டும் காட்சியில் இரண்டு பேருமே ஸ்கோர் பண்றாங்க. ஒரு சின்ன ரியாக்ஷன் கொடுத்து, அவங்களையே தூக்கி சாப்பிடுறாரு சூர்யா.

விஜய் சேதுபதியோட நடிப்புக்கு ஒவ்வொரு பிரேமிலும் டப் கொடுத்திருக்காங்க அஞ்சலி. காதலை கண்ணில் காட்டும் அந்த ஒரு சீன் போதும் அவங்க நடிப்பை பாராட்ட. விஜய் சேதுபதிக்கும், அஞ்சலிக்கும் இடையே கெமிஸ்ட்ரி நல்லாவே வேலை செய்கிறது. ஆனால், மகன் சூர்யா முன்னாடி அவர்களது ரொமான்ஸ் தான் பார்க்கும் நம் கண்களை உறுத்துகிறது. மொத்தத்துல சூர்யா, விஜய் சேதுபதி, அஞ்சலியின் நடிப்புக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம்.

கொஞ்ச நேரமே வந்தாலும், ஒரு சின்ன தாக்கத்தை ஏற்படுத்திட்டு போய்டறாரு விவேக் பிரசன்னா. சீரியஸ் வில்லன் ரோலுக்கு செமையா பிட்டாகுறாரு லிங்கா. சேதுபதியில் பார்த்த அப்பாவி போலீசா இவருன்னு வாய்ப்பிளக்க வைக்கிறாரு.

தமிழ்நாட்டுக்கு ஒருமாதிரியும், வெளிநாட்டுக்கு ஒரு மாதிரியும் பின்னணி இசையை ஒலிக்கவிட்டிருக்கார் யுவன். யூடியூபில் ஏற்கனவே ஹிட்டான 'நெஞ்சே உனக்காக' பாட்டை, பெரிய திரையில் பார்க்கும் போது இன்னும் ரசிக்க முடியுது. 'உன்னால தான் நான் உள்மூச்சு வாங்கி' பாட்டு யூத்களின் மொபைல்டோனாக ஒலிக்கலாம். 'ராக்ஸ்டார் ராபர்ஸ்' யுவன் ஸ்பெஷல்.

பசுமை நிறைந்த தென்காசியை மிக அழகா படம் பிடிச்சிருக்கும் விஜய் கார்த்திக்கின் கேமரா, மலேசியா, தாய்லாந்து, கம்போடியான்னு புகுந்து விளையாடியிருக்கு. ஒவ்வொரு பிரேமையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார். முதல் பாதி படம் ஜாலியாக நகர்ந்தாலும், கொஞ்சம் நீளமாக தெரியுது. அதேபோல, இரண்டாம் பாதியிலும் தேவையில்லாத நிறைய காட்சிகள் வந்துட்டு போகுது. அதை கொஞ்சம் கவனமாக வெட்டியிருக்கலாம் எடிட்டர் ரூபன்.

பெண்களை பொருளாக மட்டுமே பார்க்கும் ஒரு உலகை கண்முன் நிறுத்திருக்கிறார் இயக்குனர் அருண்குமார். ஸ்கின் டிரேடிங் எனும் ஒரு புதிய மாஃபியாவை நமக்கு அறிமுகப்படுத்தி பயமுறுத்துகிறார். ஆனால் இதையெல்லாம் அளவுக்கு மீறிய சினிமாதனத்தில் சொல்லியிருப்பது தான் ஒரு உறுத்தல். அதுவும், சூர்யாவை டிரம்பில் வைத்து, 40வது மாடியில் இருந்து உருட்டிவிடுவதெல்லாம் டூ மச் புரோ.

லாஜிக் இல்லையென்றாலும், விஜய் சேதுபதி, சூர்யா, அஞ்சலியின் நடிப்பு மேஜிக்கால் நம்மை கவர்கிறான் இந்த சிந்துபாத்.

   
 
ஆரோக்கியம்