Back
Home » திரைவிமர்சனம்
Dharmaprabhu Review: அரசியல்வாதிகளை எமலோகத்தில் வெச்சு செய்யும் யோகி பாபு... 'தர்மபிரபு' விமர்சனம்!
Oneindia | 28th Jun, 2019 07:47 PM

சென்னை: எமலோகத்தை பின்னணியாக வைத்துக்கொண்டு தமிழக மற்றும் இந்திய அரசியலையும், அரசியல்வாதிகளையும் நையாண்டி செய்கிறது யோகி பாபுவின் தர்மபிரபு.

பல ஆயிரக்கணக்கான வருடங்களாக எமன் பதவியில் இருக்கும் எமதர்மராஜா ராதாரவி வயோதிகத்தின் காரணமாக ஓய்வுபெற விரும்புகிறார். அடுத்த எமனாக யாரை தேர்வு செய்வது என ராதாரவி யோசித்துக்கொண்டிருக்கும் போது, தனது மகனை (யோகிபாபு) தான் அடுத்த எமனாக நியமிக்க வேண்டும் என அடம்பிடிக்கிறார் அவரது மனைவி ரேகா.

அப்பா - அம்மா கட்டாயத்திற்காக எம தர்மபிரபுவாக பதவி ஏற்கிறார் யோகி பாபு. ராதாரவிக்கு அடுத்து தனக்கு தான் எமன் பதவி என காத்திருக்கும் சித்ரகுப்தனுக்கு (ரமேஷ் திலக்) இது எரிச்சலை தருகிறது. பல்வேறு சூழ்ச்சிகளை செய்து தர்மபிரபு பதவியை பறிக்கப் பார்க்கிறார்.

மரணத்திற்கு பிறகு மேலோகத்தில் நரகத்தில் வசிக்கும் கோ.ரங்கசாமியின் (கிட்டத்தட்ட சோ.ராமசாமியின் ஜெராக்ஸ்) ஆலோசனைப்படி யோகிபாபுவை பூலோகத்துக்கு அழைத்து செல்கிறார் சித்ரகுப்தன் ரமேஷ் திலக். அங்கு ஒரு சிறுமியின் உயிரை காப்பாற்றிவிடுகிறார் தர்மபிரபு.

உயிரை எடுக்க வேண்டிய யோகி பாபு சிறுமியின் உயிரை காப்பாற்றியதால் சிவபெருமானின் (மொட்ட ராஜேந்திரன்) கோபத்துக்கு ஆளாகிறார். மேலும் அந்த சிறுமியின் உயிருடன், பலரை கொன்று சாதிக்கட்சி நடத்தி வரும் அரக்கனாக வர்ணிக்கப்படும் உழைக்கும் மக்கள் கட்சித் தலைவர் ஐயா குமரகுருவின் (அழகம் பெருமாள்) உயிரும் காப்பாற்றப்படுகிறது.

ஒரு வாரத்திற்குள் சாதிக்கட்சி தலைவரின் உயிரை எடுக்காவிட்டால் எமலோகத்தை அழித்துவிடுவேன் என மிரட்டுகிறார் சிவன். தர்மபிரபு யோகி பாபுவும், மனம் திருந்திய சித்ரகுப்தன் ரமேஷ் திலக்கும் ஐயாவை எப்படி கொல்கிறார்கள் என்பதே கலகல க்ளைமாக்ஸ்.

யோகி பாபுவை எமலோகத்தில் அமரவைத்து, பூலோகத்தை செம கலாய் கலாய்த்திருக்கிறார் இயக்குனர் முத்துகுமரன். அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, பாஜக என அனைத்து கட்சியையும் வெச்சு செய்திருக்கிறார்கள். யோகி பாபுவை ஹீரோவாக வைத்து, அரசியல் நையாண்டி படம் எடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் இயக்குனர் முத்துகுமரன்.

'டயர் நக்கி அமைச்சர்கள்', 'கூவத்தூர் மந்திரி புத்தி' என வசனங்கள் முழுவதும் அரசியல் நெடி உச்சத்தில் இருக்கிறது. யோசிக்காமல் செம கலாய் கலாய்த்திருக்கிறார் யோகி பாபு. சத்யாநந்தா, ஜிபிஎஸ், ஐயா என கேரக்டர்களின் பெயர்களிலும் செம நக்கல் தான்.

படத்தில் வரும் ஒன் பிளஸ் ஒன் (1+1) திட்டத்தின் மூலம் விவசாயிகள் பிரச்சினை, பாலியல் பலாத்காரம், அபிராமியின் கள்ளக்காதல், திருச்சி கர்ப்பிணி பெண் மரணம் என தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பல்வேறு பரபரப்பு பிரச்சினைகள் பற்றியும் பேசியிருக்கிறார்கள். எமனோட ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளும் அபாராமான கற்பனை. பூலோகத்திலும் எமனின் ஆட்சி வராதா என ஏங்க வைக்கிறது.

பெரியார், அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், காந்தி என மறைந்த தலைவர்களை மேலோகத்தில் சந்திக்க வைத்திருப்பது கிரியேட்டிவிட்டியின் உச்சம். அம்பேத்கரை சாதிய தலைவராக அடையாளப்படுத்துவதையும் கேள்வி கேட்கிறார் எமன். மறைந்த மாபெரும் தலைவர்கள் மற்றும் ஆளுமைகளை திரையில் பார்ப்பது மகிழ்ச்சி.

வழக்கம் போல தனது பஞ்ச் வசனங்களால் தியேட்டரை அலறவிடுகிறார் யோகி பாபு. கவுண்டமணி, வினுசக்கரவர்த்திக்கு பிறகு எமன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கதையின் நாயகனாக யோகி பாபுவுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகளை நிச்சயம் ஏற்படுத்திக்கொடுக்கும் தர்மபிரபு.

அசால்டாக அரசியல் பேசி சிரிக்க வைக்கிறார் ராதாரவி. எமனின் தந்தையாக கச்சிதமாகப் பொருந்துகிறார். யோகி பாபுவுடன் சேர்ந்து ரேகாவும் காமெடி செய்திருக்கிறார். சித்ரகுப்தன் ரமேஷ் திலக் படத்தின் ,இரண்டாவது ஹீரோவாகவே தெரிகிறார்.

சாம் ஜோன்ஸ், ஜனனி காதல் படத்திற்கு தொய்வை ஏற்படுத்தினால், திரைக்கதையில் திருப்பத்தை ஏற்படுத்த உதவுகிறது. பெரிய வேலை இல்லை என்றாலும், ஒன்றிரண்டு காட்சிகள் வந்து ரசிக்க வைக்கிறார்கள் இருவரும்.

அழகம் பெருமாள் தான் படத்தின் வில்லன். அவரது மேனரிசத்தையும், பெயரையும் பார்த்தால், தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய தலைவரின் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. 'எமனிடமே சென்று நீங்களும் என் ஜாதி தான் தம்பி' என லந்துவிடுவது செம.

மொட்ட பாஸ்கியை வைத்து சோவையும் கலாய்த்திருக்கிறார்கள். இதில் நடிக்க அவர் எப்படி ஒப்புக்கொண்டார் என்பதே ஆச்சரியம் தான். சாதிய அரசியல், பிராமிணிசம், வாக்கு வங்கி அரசியல், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்தையும் நையாண்டி செய்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் காந்தியைக் கூட லேசாக நக்கல் செய்திருக்கிறார்கள். அதேபோல் 'அவரை'யும் கலாய்த்திருந்தால் நடுநிலையாக இருந்திருக்கும்.

விவசாயிகளைப் பற்றிய பாடலும், மான்டேஜாக ஒலிக்கும் வரிகளும் ரசிக்க வைக்கின்றன ஜஸ்டின் பிரபாரகரனின் இசையில். பின்னணி இசை மூலம் பல பேரை கலாய்திருக்கிறார் மனிதர்.

மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு படத்தை தரமாக காட்டுகிறது. முதற்பாதியிலும், இரண்டாம் பாதியிலும் ஒரு சில காட்சிகளை கத்தரித்திருக்கலாம் எடிட்டர் சாம் லோகேஷ்.

படத்தின் பிளஸ்சும் யோகி பாபு தான். மைனசும் அவரே தான். எல்லாக் காட்சிகளுக்கும் ஒரே மாதிரியாக ரியாக்ஷன் காட்டும் ஒரு நடிகரை கதையின் நாயகனாக பல படங்களில் பார்ப்பது கடினம். அரசியல் நையாண்டி, திரைக்கதை மற்றும் காமெடியில் அதிக கவனம் செலுத்தி உள்ள இயக்கனர் கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒரு கட்டத்துக்கு மேல் ஒரே இடத்திலேயே சுற்றி சுற்றி வருகிறது படம்.

தமிழ்நாட்டில் எமதர்மனின் ஆட்சி வந்தால் மட்டுமே பல பிரிச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்ப வைக்கிறார் 'தர்மபிரபு'.

   
 
ஆரோக்கியம்