Back
Home » திரைவிமர்சனம்
முரட்டு சிங்கிளின் வெறித்தனமான புலம்பல்... 'எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல'..! விமர்சனம்
Oneindia | 4th Jul, 2019 04:10 PM

சென்னை: மாமன் மகளை திருமணம் செய்ய முடியாமல் தவிக்கும் நாயகனின் புலம்பலே 'எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல'.

காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டிருப்பவர் நண்டு ஜெகன். அதே ஊரில் டீக்கடை நடத்தி வரும் மாமன் மகள் மனிஷாஜித்தை காதலிக்கிறார்.

போலீசாகி, ஐஜியிடம் கைக்குலுக்கினால் தான் தனது மகளை திருமணம் செய்து கொள்ள முடியும் என சொல்லிவிட்டு மண்டையை போட்டுவிடுகிறார் மாமா. தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்றினால் தான் கல்யாணம் என ஸ்டிரிக்டாக சொல்கிறார் மனிஷா.

மாமனின் ஆசைப்படி போலீசாகும் ஜெகன் வீரதீர செயல்புரிந்து ஐஜியிடம் கைக்குலுக்கி, ஊடகங்களில் செய்தியாகிறாரா? என்பதே மீதிப்படம். இதற்கிடையே, மற்றொரு காதலும் படத்தில் வருகிறது. அது என்ன ஆகிறது என்பதும் தனி டிராக்.

நிகழ்கால அரசியலிலை நையாண்டி செய்தபடியே நகர்கிறது படம். இரட்டை தலைமையில் இருந்து, ரஜினியின் அரசியல் அவதாரம் வரை கலாய்க்கிறார் ஜெகன். சைட் கேப்பில் ஆர்ஜே பாலாஜியையும் வம்புக்கு இழுக்கிறார். நடிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லாததால், டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போல், கடகடவென பேசிவிட்டு அடுத்தக் காட்சிக்கு நகர்ந்துவிடுகிறார்.

ஒரு சில படங்களில் ஏற்கனவே ஹீரோயினாக நடித்திருக்கும் மனிஷாஜித் தான் இதிலும் நாயகி. ஜெகனை ஏங்கவிட்டு, சூடேற்றி கிரங்க வைக்கிறார். இவரை தவிர டிசோஷா என்பவர் இரண்டாவது நாயகியாக படத்தில் வருகிறார். தைரியசாலி பெண்ணாக வந்து கவர்கிறார். நிறைய வசனம் பேசி, வில்லனிடம் அடிவாங்கி, அப்பாவி பத்திரிகையாளராக நடித்துள்ளார் 'குட்டி' விவேக்.

வில்லன் வேடம் ஏற்றிருக்கும் கவிஞர் பிறைசூடனின் உடல்மொழி அந்த ரோலுக்கு சுத்தமாக செட்டாகவில்லை. காமெடி என்ற பெயரில் சாம்ஸ் செய்யும் அலப்பறைகள், சிரிப்புக்கு பதில் கடுப்பை தான் ஏற்றுகிறது. ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி குஷிப்படுத்துகிறார் நடிகை அஷ்மிதா.

நிகழ்கால அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருந்தாலும், 1980- களில் எடுக்கப்பட்ட படம் போன்ற உணர்வையே அளிக்கிறது படத்தின் மேக்கிங். ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத காட்சிகளும், பலவீனமான திரைக்கதையும் படத்தின் மைனஸ். சிவாவின் ஒளிப்பதிவு இன்னும் தரமாக இருந்திருக்கலாம்.

நண்டு ஜெகனின் சிரக்க வைக்கும் புலம்பலே 'எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல'.

   
 
ஆரோக்கியம்