Back
Home » திரைவிமர்சனம்
Kalavani 2 Movie Review: ஆனி போய், ஆடிபோய், ஆவணி வந்தா அன்னப்போஸ்ட் தான்... 'களவாணி 2' விமர்சனம்!
Oneindia | 8th Jul, 2019 12:04 PM

சென்னை: வெட்டியாக ஊர் சுற்றி திரியும் ஒரு இளைஞன், களவாணித்தனம் செய்து ஊரின் தலைவராவதே களவாணி 2.

முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் இருக்கும் ஒற்றுமை நடிகர்கள் மற்றும் ஒரத்தநாடு, அரசனூர் போன்ற கதைக்களம் மட்டுமே. மற்றப்படி, முந்தைய படத்துக்கும், இதற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.

வேலை வெட்டிக்கு போகாவிட்டாலும், கஞ்சி போட்டு வெரப்பாக நிற்கும் அயர்ன் செய்த வெள்ளை வேட்டி, சட்டையோடு சும்மாவே ஊர் சுற்றி வருகிறார் விமல். அவருடன் சேர்ந்து களவாணித்தனம் செய்து கொண்டு திரிகிறார் விக்னேஷ்காந்த். இருவருக்கும் கிடைத்த ஊறுகாய் கஞ்சா கருப்பு.

அப்பா இளவரசுவின் புலம்பல்களை காதில் போட்டுக்கொள்ளாமல் ஊரைச் சுற்றித் திரியும் விமலை, ஆனி போய், ஆடிபோய், ஆவணி வந்தா அன்னப்போஸ்ட் தான் என செல்லம் கொடுத்து கெடுக்கும் அதே தாய் சரண்யா. முதல் பாகத்தில் அண்ணனிடம் தலையில் கொட்டு வாங்கிய தங்கைக்கு, இந்த பாகத்தில் கல்யாணம் ஆகி புருஷன் வீட்டில் இருக்கும் பெண்ணாக புரொமோசன். ஆனால் ஓவியாவும், விமலும் இதில் மீண்டும் புதிதாக காதலிக்கிறார்கள். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திருமணம் ரத்தாகிடிச்சு போல. சரி அது அவங்க குடும்ப விசயம், நாம கதைக்கு வருவோம்.

யாரைய ஆட்டையப்போட்டு பணம் பார்க்கலாம் என காத்துக்கொண்டிருக்கும் விமலுக்கு ஜாக்பாட் அடித்தது போல் வருகிறது உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு. தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்து, எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து பணம் பறித்து வாபஸ் வாங்கலாம் என்பது விமல் பிளான். உடன் விக்னேஷை சேர்த்துக் கொண்டு, கஞ்சா கருப்புக்கு ஆசைக்காட்டி பணத்தை லவட்டி தேர்தலில் மனு தாக்கல் செய்கிறார்.

ஆனால் இவர்கள் மனு செய்தது இவர்களை தவிர ஊருக்குள் வேறு யாருக்குமே தெரியவில்லை. எதிர்த்து போட்டியிடும் சொந்த மாமாவும், ஓவியாவின் அப்பாவும் விமலை ஏளனமாக பேச, எப்படியாவது தேர்தலில் ஜெயித்தே தீரவேண்டும் என சபதம் போடுகிறார் விமல். இதன் பிறகு அவர் செய்யும் களவாணித்தனங்கள், நிறைய அதிரடி அட்ராசிட்டிகள் தான் களவாணி 2ன் மீதிக்கதை.

முதல் பாகத்தில் இருந்த பிரஷ்னஸ் இதில் டோட்டலாக மிஸ்சிங். எல்லோருமே ஏற்கனவே பார்த்த கேரக்டர்கள் என்பதால் முதல் பாகத்தின் தொடர்ச்சி எனும் உணர்வே ஏற்படுகிறது. எனவே விமல் - ஓவியா காதல், அப்பா - மகன் சண்டை, அம்மா சப்போர்ட் என எல்லாமே சுவாரஸ்ய சறுக்கல்கள்.

விமல் - விக்னேஷ்காந்த் - கஞ்சா கருப்பு என புதிய கூட்டணி அமைத்து காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் முதல் பாதி படத்தில் தியேட்டரில் சிரிப்பு சத்தமே கேட்கவில்லை. இரண்டாம் பாதியில் தான் காமெடி களைக்கட்ட ஆரம்பிக்கிறது. அதுவும் மயில்சாமியின் தோசை எபிசோட் செம ரகளை. இண்டர்வெலுக்கு பிறகு தான் விமலின் களவாணித்தனங்கள் ஒர்க்கவுட் ஆகிறது.

வழக்கம் போல் இந்த படத்திலும் கிராமத்து இளைஞனாக இயல்பாக நடித்திருக்கிறார் விமல். லிப்சிங்க் இல்லாமல் வசனம் பேசினாலும், சிரிப்பு வரும்படியாக சேஷ்ட்டைகள் செய்து ரசிக்க வைக்கிறார். தேர்தலில் ஜெயிக்க அவர் செய்யும் களவாணித்தனங்கள் அல்டிமேட் அட்ராசிட்டிகள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு படம் முழுவதும் சுடிதார், பாவாடை தாவணி என கண்ணியமான உடையில் வருகிறார் ஓவியா. அதனாலோ என்னவோ அழகாக தெரிகிறார். ஆனால் முந்தைய பாகம் அளவுக்கு, இதில் லவ் கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க்கவுட் ஆகவில்லை.

விமல் - ஓவியா ஜோடி தடுமாறும் இடங்களில் எல்லாம், இளவரசு - சரண்யா ஜோடிதான் அதை பேலன்ஸ் செய்கிறது. களவாணி இரண்டிலும் இவர்களது ரகளை தொடர்கிறது. 'ஆனி போய், ஆடிபோய், ஆவணி வந்தா 'அன்னப்போஸ்ட்(Unopposed) தான்' என மகனை கெடுக்கும் அதேவேலையை இதிலும் செய்து ரசிக்க வைக்கிறார் தமிழ் சினிமாவின் 'அம்மா' சரண்யா.

இராவணன் கதாபாத்திரத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகியிருக்கும் துரை சுதாகர் நல்ல தேர்வு. யதார்த்தமாக நடித்து அசத்தி இருக்கிறார். விக்னேஷ்காந்த்துக்கு கிராமத்து காமெடி சுத்தமாக செட்டாகவில்லை. கஞ்சா கருப்பும், மயில்சாமியும் ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.

பாடல்கள் கேட்கும் படியாக இருந்தாலும், மனதில் பதியவில்லை. மாசானியின் ஒளிப்பதிவில் ஊரும், ஊராரும் அழகாக தெரிகிறார்கள். ராஜா முகமதுவின் எடிட்டிங்கில் இரண்டாம் பாதி படம் செம சுவாரஸ்யம்.

இரண்டாம் பாதியை போல் முதல் பாதியிலும் காமெடியை கூட்டியிருந்தால் இந்த களவாணியும் ரசிக்க வைத்திருப்பான். முந்தைய பாகத்தை ஒப்பிடும்போது, இரண்டாவது களவாணி மனதை கொள்ளையடிக்க தவறிவிட்டான்.

   
 
ஆரோக்கியம்