Back
Home » திரைவிமர்சனம்
Bodhai Yeri Budhi Maari Review: போதை ஏறி புத்தி மாறி... வாழ்வை தொலைக்கும் நாயகன்..! விமர்சனம்
Oneindia | 12th Jul, 2019 12:38 PM

சென்னை: தெரியாத்தனமாக செய்யும் தவறு ஒரு இளைஞனின் வாழ்வை எப்படி எல்லாம் மாற்றிப் போடுகிறது என்பதை தலைச்சுற்ற காட்டுகிறது போதை ஏறி புத்தி மாறி திரைப்படம்.

மறுநாள் திருமணத்தை வைத்துக்கொண்டு நண்பனின் வீட்டுக்கு செல்கிறார் நாயகன் கார்த்திக் (டாக்டர் தீரஜ்). அங்கு அவரது நண்பர்கள் குடியும் குடித்தனமாக கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நண்பர் கூட்டத்தில் ஒருவர் விபரீதமான ஒரு போதை பழக்கத்துக்கு அடிமைப்பட்டு கிடக்கிறார். விளையாட்டாக அந்த போதை மருந்தை எடுத்துக்கொள்கிறார் கார்த்திக். போதை தலைக்கு ஏறி புத்தி மாறி ஏதேதோ செய்ய ஆரம்பிக்கிறார். அதில் இருந்து அவருக்கு பிரச்சினை தொடங்குகிறது.

இதற்கிடையே பக்கத்து பிளாட்டில் இருக்கும் பத்திரிக்கையாளர் பிருந்தா (பிரதாயினி), போதை மருந்து மாஃபியாக்களின் தகவல்களை திரட்டி ஒரு ஹார்ட்டிஸ்கில் வைத்திருக்கிறார். அதனை அவரது காதலரான (லிவிங்டூகெதர் கணவர்) போலீஸ் அதிகாரி அபகரிக்க முயற்சிக்கிறார். அந்த ஹார்ட்டிஸ்கை போதையில் இருக்கும் கார்த்திக்கிடம் தருகிறார் பிருந்தா. ஒருகட்டத்தில் போதை உச்சிக்கு ஏறி மட்டையாகிறார் கார்த்திக். போதை தெளிந்து எழும் போது,பிருந்தாவும், கார்த்திக்கின் நண்பர்களும் அந்த அப்பார்ட்மெண்ட்டில் இறந்துகிடக்கிறார்கள். அவர்களை யார் கொன்றது? அந்த வீட்டில் இருந்து கார்த்திக் எப்படி தப்பிக்கிறார் என்பதை நமக்கும் போதை ஏறும் அளவுக்கு காட்டுகிறது மீதிப்படம்.

போதை பழக்கம் ஒருவரது வாழ்வை எப்படி எல்லாம் சீர்க்குலைக்கிறது என்பதை சொல்ல முயன்றிருக்கும் அறிமுக இயக்குனர் சந்துருவுக்கு வாழ்த்துக்கள். ஆனால் அதை தலைச்சுற்று திரைக்கதையில் சொல்லியிருப்பது தான் நமக்கு போதை ஏற்றுகிறது. வித்தியாசமான திரைக்கதையின் மூலம் படம் நகர்கிறது. இது புதிது தான் என்றாலும், திருப்பங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே பல காட்சிகளை வலிய திணித்திருப்பது நன்றாக தெரிகிறது.

முதல் காட்சியில் கார்த்திக்கின் நண்பர் ரோஷன் அவரை ஏமாற்றிய காதலி மீரா மிதுனை போதையில் அடித்துக் கொல்கிறார். ஆனால் அதன் பிறகு கடைசி வரை அது தொடர்பான காட்சிகளோ, விளக்கமோ மருந்துக்குகூட எட்டிப்பார்க்கவில்லை. மதுவைக்கூட கையில் தொடாத கார்த்திக், ஆபத்தான டிரக்சை விளையாட்டாக எடுத்துக்கொள்கிறார். அதனால் அவர் வாழ்க்கை சீரழிகிறது. ஆனால் இந்த டிரக்சுக்கு அடிமையான நண்பர் ரோஷன் (மீராவை கொன்றவர்) கடைசி வரை நன்றாக தான் இருக்கிறார். இப்படி பல முரண்களும், கேள்விகளும் படம் முழுவதும் எழுந்து தலைச்சுற்ற வைக்கிறது.

அடுத்து என்ன நடக்கும் என பார்வையாளர் யூகித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை மட்டுமே மனதில் வைத்து, கதில் நடராசனுடன் சேர்ந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் சந்துரு. ஆனால் அவர்களது மெனக்கெடல்கள் பார்வையாளர்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. ஒருகட்டத்தில் இது தான் கதை என எளிதில் யூகித்துவிட முடிகிறது.

படத்தின் நாயகன் தீரஜ் ஒரு புகழ்பெற்ற இதயநோய் மருத்துவர். நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் இந்த படத்தை தோளில் தூக்கி சுமக்க நினைத்திருக்கிறார். தன்னால் முடிந்த அளவு போதையாகியிருக்கிறார். ஆனால் இன்னும் நிறைய பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்பதே நமது எண்ணம்.

பிரதாயினி, துஷாரா என இரண்டு நாயகிகளும் அவ்வப்போது வந்து தலைகாட்டுகிறார்கள். பிரதாயினி மட்டுமே ஓரளவுக்கு நடித்திருக்கிறார். சின்ன சின்ன ரியாக்ஷன்களை மட்டுமே செய்து கவர்கிறார் துஷாரா. மீரா மிதுனுக்கு இவர்கள் அளவுக்கு கூட வேலை இல்லை.

சீனியர் நடிகர் ராதாரவி நாயகனின் அப்பாவாக அமைதியாக நடித்து கடந்து போகிறார். நண்பர்கள் பட்டாளத்தில், ரோஷனின் நடிப்பு மட்டுமே கவனிக்க வைக்கிறது. போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அஜய், சில காட்சிகளில் அசத்துகிறார். சரத், அர்ஜுன், ஆஷிக், செந்தில் குமரன் என மற்ற நண்பர்கள் அனைவருமே சதா குடித்துக்கொண்டு, நமக்கும் போதை ஏற்றுகிறார்கள்.

படத்தை தூக்கி நிறுத்துவது கேபியின் இசையும், பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவும் தான். கேபியின் பின்னணி இசையும், வெர்ஷின் ஸ்டோனர் பாடலும் தான் படத்தை காப்பாற்றுகிறது. ஒரு அப்பார்ட்மெண்டில் நடக்கும் காட்சிகளை, விதவிதமான கோணத்தில் காட்டி, மிரள வைக்கிறார் கேமராமேன் பாலசுப்பிரமணியம். குழப்பமான திரைக்கதையை தெளிவாக காட்ட முயற்சித்திருக்கிறார் எடிட்டர் ரூபன்.

திரைக்கதையில் கவனம் செலுத்திய இயக்குனர் கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் க்ளைமாக்ஸ் வேறு ரூட்டுக்கு நம்மை அழைத்து செல்கிறது. படம் முடிந்து வெளியே வரும் போது நமக்கும் போதை ஏறி புத்தி மாறிவிடுகிறது.

'போதை ஏறி புத்தி மாறி' புதியவர்களின் வித்தியாச முயற்சி மட்டுமே.

   
 
ஆரோக்கியம்