Back
Home » செய்தி
என்ன சொல்லப்போகிறது உச்சநீதிமன்றம்.. கர்நாடக எம்எல்ஏக்கள் வழக்கு இன்று மீண்டும் விசாரணை
Oneindia | 12th Jul, 2019 11:28 AM

பெங்களூர்: கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக குமாரசாமி பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதில் சுமார் 11 பேர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.

அதில், 10 எம்எல்ஏக்கள் பேர் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் ஒரு வழக்கு தொடர்ந்தனர். சபாநாயகர் தங்களை தகுதி நீக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், இதில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும், ராஜினாமா கடிதங்களை ஏற்க, சபாநாயகருக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து வியாழக்கிழமை மாலை 6 மணிக்குள், சபாநாயகரை அதிருப்தி எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து, விருப்பம் இருந்தால், தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை, வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தது. இதையேற்று, மும்பையிலிருந்து பெங்களூர் வந்த 10 எம்எல்ஏக்களும், சபாநாயகரிடம் நேரில் நேற்று ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.

காங்கிரசை கழற்றிவிட்டு பாஜகவுடன் சேருகிறதா மஜத? குமாரசாமி, எடியூரப்பா என்ன சொல்றாங்க தெரியுமா?

இந்த நிலையில், அவசர கதியில், விசாரணையை நடத்த முடியாது என கூறி, சபாநாயகர் ரமேஷ் குமார் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கும், இன்றுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, எம்எல்ஏக்கள் 10 பேர் தன்னிடம் ராஜினாமா அளித்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த சபாநாயகர் அந்த வீடியோ ஆதாரங்கள் மற்றும் தனது பதிலை, அறிக்கையாக, உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்.

எனவே, இன்றைய விசாரணையில் உச்சநீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது, ஒருவேளை எம்எல்ஏக்கள் ராஜினாமாக்களை ஏற்க சபாநாயகருக்கு கால நிர்ணயம் செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் கூறுமா என்பது போன்ற கேள்விகள் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

   
 
ஆரோக்கியம்