Back
Home » திரைவிமர்சனம்
Kolanji Review: குடும்பம்... காதல்... காமெடி... எமோஷன்... இன்னும் நிறைய... கொளஞ்சி..! விமர்சனம்
Oneindia | 26th Jul, 2019 05:36 PM

சென்னை: அப்பா, மகன் இடையேயான உறவை காதல், காமெடி கலந்து கமர்சியலாக சொல்கிறது கொளஞ்சி.

பெரியாரிஸ்டான சமுத்திரக்கனிக்கு ஒரு மனைவி (சங்கவி), இரண்டு மகன்கள். மூத்த மகன் பெயர் தான் கொளஞ்சி (கிருபாகரன்). வாலுப் பையனான கொளஞ்சி, நண்பன் நசாத்துடன் சேர்ந்து சேட்டை செய்துகொண்டு ஊர்ச்சுற்றி திரிகிறான். இதனாலேயே அப்பாவிடம் அடி வாங்காத நாளே இல்லை என்றாகிவிடுகிறது. அப்பாவை வெறுக்கும் கொளஞ்சி ஒரு அம்மா செல்லம். இளைய மகன் லெனின் தான் அப்பா செல்லம்.

அப்பாவிடம் இருந்து எப்படியாவது தப்பித்தால் போதும் என காத்திருக்கும் கொளஞ்சிக்கு, அந்த சந்தர்ப்பம் வாசல் தேடி வருகிறது. சமுத்திரக்கனிக்கும், சங்கவிக்கும் ஒரு நாள் பெரிய சண்டை வர, கோபத்தில் மனைவியை அடித்துவிடுகிறார் கனி. அவ்வளவு தான் கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறும் அம்மாவுடன் தானும் ஜாலியாக செல்கிறான் கொளஞ்சி. அப்பாவும் இளைய மகனும் ஒரு வீட்டில் இருக்க, அம்மாவுடன் தாய் மாமா வீட்டில் தஞ்சடைகிறான் கொளஞ்சி. தம்பதியர் சேர்ந்தனரா? அப்பா, மகன் உறவு என்ன ஆகிறது என்பதே கொளஞ்சி சொல்லும் வீட்டுப்பாடம்.

பொதுவாக எல்லா குடும்பத்திலும் அப்பாவும் மகனும் முறைத்துக்கொண்டே தான் திரிவார்கள். இருவருக்கும் நடுவில் அம்மா தான் பிரிட்ஜாக இருந்து படாதபாடு படுவர். ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்துக்கு பிறகு தான் அப்பாவின் அருமை மகனுக்கும், மகனின் அருமை அப்பாவுக்கும் புரியும். அதை அப்படியே கண்முன் நிறுத்துகிறது கொளஞ்சி.

கிருபாகரனும், நசாத்தும் செய்யும் சேட்டைகள் செம ரகளை. நிறையவே சிரிக்கவும், ரசிக்கவும் வைத்திருக்கிறார்கள். ராஜாஜ் - நைனா சர்வார் காதலை சேர்த்து வைப்பது, பின்னர் பிரிப்பது, நண்பனுக்காக பசங்களுடன் சண்டைக்கு போவது என இது சிறுவர்களின் கேம் ஷோ.

ஆனால் சொல்ல வந்த விஷயத்தை நேரடியாக சொல்லாமல், தலையைச் சுற்றி மூக்கை தொடுகிறது திரைக்கதை. ஒரு கமர்சியல் படத்தில் காதல் இல்லை என்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? அதற்காகவே ராஜாஜ் - நைனா சர்வார் காதல் சொருகப்பட்டிருக்கிறது. படம் காட்சிகளாக மட்டும் நகர்வதால் கதையோட்டம் டோட்டலாக மிஸ்சிங்.

அப்பா படத்தில் பார்த்த அதே சமுத்திரத்திக்கனி தான், இந்த படத்தில் கருப்பு சட்டையை மாட்டிக்கொண்டு பகுத்தறிவு பேசுகிறார். ஒரு சில காட்சிகள் நச் பதிவு. மகனை அடிப்பது, மனைவியிடம் பாசம் காட்டுவது, இளைய மகனை கொஞ்சுவது என யதார்த்த அப்பா 'கனி'.

நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளித்திரையில் சங்கவி. ஒரு காலத்தில் கிளாமர் ஹீரோயினாக விஜய், அஜித்துடன் ஜோடிபோட்டவர், இரண்டு பிள்ளைகளின் தாயாக, அன்பான மனைவியாக நிறைவாக நடித்திருக்கிறார். இனி சங்கவியை நிறைய படங்களில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றே தோன்றுகிறது.

படத்தின் ஷோ ஸ்டீலர்ஸ், கிருபாவும் நசாத்தும் தான். கொளஞ்சி கேரக்டருக்கு கிருபா செம பிட். வாட் சொல்லிங் நண்பா என ஆங்கிலமும் தமிழும் கலந்து நசாத் பேசும் வசனங்கள் காமெடி வெடி. எனது ரோல் இது தான் என்பதை உணர்ந்து அளவாக நடித்து அப்ளாஸ் வாங்குகிறார் ராஜாஜ். ஹீரோயின் நைனாவுக்கும் ஒரு சபாஷ் பார்சல்.

படத்தின் தயாரிப்பாளர் என்பதால், ஒரு காட்சியில் மட்டும் தலைக்காட்டிவிட்டு நகர்கிறார் மூடர் கூடம் நவீன். ஸ்பெஷல் அப்பியரன்ஸ் சென்ராயன், வடிவேலு ஸ்டைலில் டான்ஸ் எல்லாம் ஆடியிருக்கிறார். ஆனால் ரசிக்க தான் முடியவில்லை.

இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் பெரிய இளையராஜா ரசிகராக இருப்பார் போல. எல்லாப் பாடல்களும் 80'ஸ் மெட்டுகளையே ஞாபகப்படுத்துகிறது. விஜயன் முனுசாமியின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்துள்ளது. ஆதியப்பன் சிவாவின் எடிட்டிங்கில், படம் கதையைவிட்டுவிட்டு எங்கோ சென்று திரும்புகிறது.

சின்ன சின்ன நெருடல்கள் இருந்தாலும், கொளஞ்சி சொல்லும் சேதி நிச்சயம் நம் காதுகளில் விழ வேண்டும்.

   
 
ஆரோக்கியம்