Back
Home » திரைவிமர்சனம்
A1 Review: காமெடி சரவெடி.. அடிச்சுத்தூக்கும் சந்தானம்.. தியேட்டரில் ஒரு லொள்ளு சபா.. ஏ1 விமர்சனம்!
Oneindia | 27th Jul, 2019 11:46 AM

சென்னை: சந்தானத்தின் அக்மார்க் கலாய் வசனங்கள் நிரம்ப காமெடி காதல் கதையாக வந்துள்ளது அக்யூஸ்ட் நம்பர் 1.

உலகிலேயே உத்தமர் என்றால் அது ஏ1 படத்தின் நாயகி தாராவின் தந்தை அனந்தராமன் தான். அப்படிப்பட்ட உத்தமர் பெத்த பொண்ணுக்கு தளபதி ரஜினி கேரக்டரில் ஒருவரை காதலித்து கல்யாணம் செய்ய வேண்டும் என்பது ஆசை. ஆனால் அவர் தனது சாதியை (ஐயங்கார்) சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதாவது ஒரு ரவுடி ஐயங்காரை மணக்க வேண்டுமாம் தாராவுக்கு. (மைண்ட் வாய்ஸ்: இப்படி ஒரு ஆசை நிச்சயமா எந்த பொண்ணுக்கும் இருக்காது)

இப்படிப்பட்ட ஒரு மாப்பிள்ளையை தேடிக் கொண்டிருக்கும் தாராவின் கண்முன்னே நெற்றியில் நாமத்துடன் வந்து நின்று, ரவுடிகளை (ஐந்து கிழவர்களை - காமெடியாமாம்) வெளுத்து வாங்குகிறார் சந்தானம். உடனே சந்தானம் ஒரு அக்மார்க் ஐயங்கார் ரவுடி என நம்பி, கண்டதும் காதலில் விழுந்து லிப் லாக் எல்லாம் கொடுத்து அவரை கரெக்ட் செய்கிறார் மாமி. பிறகு தான் தெரிய வருகிறது சந்தானம் 'அவா' இல்ல, மாவா போட்டுகிண்ணு சுத்துர லோக்கல் பையன்னு.

உடனே பிரேக் அப். அதற்கடுத்த சீனே தாராவின் அப்பா நெஞ்சை பிடிச்சுகிட்டு ரோட்டுல விழ, அவர சந்தானம் காப்பாற்ற மீண்டும் லவ்வாகிவிடுகிறார் அரலூசு மாமி. ஆனால் சந்தானத்தை காதலிப்பது தாராவின் அப்பாவிற்கு பிடிக்கவில்லை. உலகிலேயே உத்தமரான தன்னுடைய தந்தையை கெட்டவர் என நிரூபித்தால் கல்யாணத்துக்கு ஓகே என்கிறார் தாரா. உலக உத்தமர் அனந்தராமனை கெட்டவர் என நிரூமிக்க சந்தானம் என்ன செய்கிறார் என்பதே காமெடி சரவெடியின் பிற்பாதி.

சந்தானத்தின் அக்மார்க் கலாய் வசனங்களை தவிர படத்தில் வேறு எந்த ஸ்பெஷலும் இல்லை. ஆனால் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை காமெடி சரவெடியாய் வெடிக்கிறது படம். ஒரு சில இடங்களில் தியேட்டரே வெடித்து சிரிக்கிறது.

காமெடின்னு வந்ததுக்கு அப்புறம் வேறெதையும் பார்க்க வேண்டாம் என முடிவு செய்தே படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஜான்சன். கோகோ டோனியின் (கோலமாவு கோகிலா) ரகளைகள் செமையாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. நாயகி தாராவை பெண் பார்க்க வரும் பார்த்தசாரதியிடம் 'திவ்யாவ நாங்க லவ் பண்றோம்' என அவர் சொல்லும் போது தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிறது.

அதேபோல மெக்கானிக் ஷாப்பில் வரும் சரக்கு சீன், மொட்டை ராஜேந்திரனுடன் வரும் தண்டச்சோறு காமெடி எல்லாம் ஆடியன்சுக்கு செம ட்ரீட். சந்தானம் - தாராவின் எதிர்பாட்டு சீனும் காமெடி சாம்பியன் தான். இருந்தாலும் காமெடி என்ற பெயரில் சாவு வீட்டில் நடக்கும் காட்சிகள் எல்லாம், சிரிக்க வைத்தாலும் மட்டமான ரசனை தான். சைடு கேப்பில் தமிழிசை, லட்சுமி ராமகிருஷ்ணன் என எல்லோரையும் கலாய்த்திருக்கிறார்கள்.

ரொம்ப ரிஸ்க் எடுக்காமல், ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் தனக்கு வரும் விஷயங்களை வைத்து மட்டும் படம் எடுத்தால் போதும் எனும் முடிவுக்கு வந்துவிட்டார் சந்தானம் என்பது நன்றாக தெரிகிறது. காதல் காமெடி, ஹாரர் காமெடி, என குறிப்பிட்ட ஜானருக்குள் மட்டுமே சுற்ற நினைக்கிறார். உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் சந்தானம். ஒரு இடத்திலேயே முடங்கிடாதீங்க ப்ளீஸ்.

உலக உத்தமர் ரோலுக்கு 'வசூல் ராஜா எம்பிபிஎஸ்' யதின் காரேகர் சரியான தேர்வு. எம்.எஸ்.பாஸ்கர், மீரா கிருஷ்ணன் ஆகிய இரண்டு பேரும் இறங்கி அடித்திருக்கிறார்கள். தாரா அப்பாவின் க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் செம மாஸ். பழைய ஜோக் தங்கதுரை, கோகோ டோனி, மொட்ட ராஜேந்திரன், மனோகர் என எல்லோரும் சேர்ந்து லொள்ளு சபா பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறார்கள். நாயகி தாரா , போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்குமார் கேரக்டர்கள் எல்லாம் செம க்ளீஷே.

தியேட்டரைவிட்டு வெளியே வந்த பிறகும் 'மாலை நேர மல்லிப்பூ' பாட்டை தான் வாய் முணுமுணுக்கிறது. சென்னை லோக்கல் படத்துக்கு தகுந்த மாதிரி கானா பாடல்களையே பின்னணியாக இசைத்திருப்பது சந்தோஷ் நாராயணனின் புத்திசாலித்தனம். நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

கோபி ஜெகதீஸ்வரன் எவ்வளவு மெனக்கெட்டும் சந்தானத்தின் வயதை குறைத்து காட்ட முடியவில்லை. லியோ ஜான் பாலின் எடிட்டிங்கில் எந்த குறையும் இல்லை.

கொடுத்த காசுக்கு வயிறு குலுங்க சிரிக்க வைத்து அனுப்புகிறான் இந்த அக்யூஸ்ட் நம்பர் 1.

   
 
ஆரோக்கியம்