Back
Home » திரைவிமர்சனம்
Thorati Review: வறண்டுபோன தமிழ் சினிமா நிலத்தில் ஓர் பெருமழை... தொரட்டி..! விமர்சனம்
Oneindia | 1st Aug, 2019 06:01 AM

சென்னை: பலரும் மறந்து போன கீதாரிகளின் வாழ்க்கையை மண்மணத்துடன், நட்பு, காதல், குடும்பம், துரோகம், பகை, பழிவாங்கல் என உணர்வுப்பூர்வமாக சொல்கிறது தொரட்டி.

தமிழில் ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்கள் வெளியாகின்றன. அதில் ஏதாவது ஒரு படம் தான் நம் மனதில் தடம் பதிக்கும். அப்படிப்பட்ட ஒரு வாழ்வியல் சார்ந்த படம் தான் தொரட்டி. நமக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் கிராமத்தானை உசுப்பிவிட்டு வெளியே எட்டிப்பார்க்க செய்கிறார்கள் மாயனும், செம்பொண்ணும்.

மாயன் குடும்பமும், செம்பொண்ணின் குடும்பமும் பரம்பரை பரம்பரையாக கிடை போட்டு ஆடு மேய்க்கும் கீதாரிகள். அழகு தான் மாயனின் அப்பா. தேவக்கோட்டை அருகே விளைநிலங்களில் ஆடுகளைக் கொண்டு கிடை போட்டு பிழைத்து வருகிறார். கிடைக்கூலி கொடுக்க மறுக்கும் ஒரு கருமி பணக்காரனின் நிலத்தில், பச்சைக் களையத்தை புதைத்து பூசைப் போட முயற்சிக்கிறார்கள் மாயனும் அழகும். (அப்படி செய்தால் அந்த நிலம் மலடாகும் என்பது நம்பிக்கை)

இதை பார்த்து ஆத்திரமடைந்த பண்ணையார் அவர்கள் இருவரையும் பிடித்து தனது மாட்டுக் கொட்டகையில் அடைத்து வைக்கிறார். அன்று இரவு மாட்டை களவாட வரும் மூன்று திருடர்கள், மாயனையும் அவரது தந்தையையும் காப்பாற்றுகிறார்கள். இதனால் அவர்கள் மீது பாசம் கொள்கிறான் மாயன்.

திருடர்களுடன் சேரும் மாயன் குடிகாரனாக மாறுகிறான். சதா குடித்துவிட்டு, தனது கிடையில் இருந்தே ஆடுகளை களவாண்டு போய் நண்பர்களுக்கு கறிச் சோறு போடுகிறான். மகனுக்கு ஒரு கால் கட்டு போட்டால் சரியாகிவிடும் என நினைக்கும் பெற்றோர் செம்பொண்ணை மணம் முடிக்க கேட்கிறார்கள். குடிகாரனுக்கு பெண்கொடுக்க நாயகியின் பெற்றோர் மறுக்கிறார்கள். ஆனால் மாயனைத்தான் கல்யாணம் செய்வேன் என அடம்பிடித்து மணக்கிறார் செம்பொண்ணு.

இதற்கிடையே மாயனின் கூட்டாளிகளான திருடர்களை ஒரு திருட்டு வழக்கில் காட்டிக்கொடுக்கிறார் செம்பொண்ணு. போலீசார் அவர்களை பெண்டு நிமித்தி சிறையில் போடுகிறார்கள். செம்பொண்ணுவை எப்படி பழிதீர்க்க வேண்டும் என தீர்மானிக்கிறார்கள். கூடா நட்பு கேடாய் முடிந்ததா என்பதே உருகவைக்கும் தொரட்டியின் மிச்சக்கதை.

ஏப்ரல், மே மாத கோடை வெயிலில் மக்கள் எல்லாம் தவித்திருக்கும் போது, திடீரென ஒருநாள் மாலை மழை பெய்து நம்மை குளிர்விக்குமே, அப்போது மனதில் ஒரு சந்தோஷம் ஏற்படும் பாருங்க... அதே உணர்வைத் தான் தருகிறது தொரட்டி. வறண்ட் கிடக்கும் தமிழ் சினிமா நிலத்தை, ஈரமாக்கி மீண்டும் நல்ல படைப்புகளை நடவு செய்யுங்கள் என்கிறது படம்.

பெரிய கண்களை உருட்டி உருட்டி பேசும் செம்பொண்ணின் (சத்தியகலா) ஒவ்வொரு வார்த்தையும் வில்லுப்பாட்டாய் ஒலிக்கிறது. சத்தியகலா மட்டுமல்ல படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் தடம் பதிக்கின்றன. 80களில் நடக்கும் ஒரு கதையை மிக எளிமையாக, அதேநேரம் வலுவான காட்சி அமைப்புகளுடன் தந்திருக்கும் இயக்குனர் மாரிமுத்துவுக்கு பாராட்டுகள். வசனங்கள் தான் படத்தின் மிகப்பெரிய பலம். தென்மாவட்ட வட்டார வழக்கு மொழியை கொண்டு ரசிக்க வைத்துள்ளார். நாயகி கதாபாத்திரத்தின் வலிமையும், அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகையும் அபாரம்.

அடிப்படையில் ஒளிப்பதிவாளரான ஷமன் மித்ரு தான் இந்த படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவும். மாயன் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸ் அள்ளுகிறார் ஷமன். அவர் மட்டுமல்ல அவருடைய கூட்டாளிகளாக வரும் அனைவருமே சிறப்பான அறிமுகங்கள். குறிப்பாக மெயின் வில்லனை இனி நிறைய கமர்சியல் படங்களில் பார்ப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

நாயகி சத்தியகலாவை தனியாக பாராட்டியே தீரவேண்டும். சென்னையில் நமக்கு கிடைக்கும் வெளிச்சத்தில் பாதியளவுக்கூட கிடைக்காத ஒரு ஊரில் பிறந்து, வளர்ந்த இந்த பொண்ணுக்குள்ள இப்படியொரு அபார திறமையா என வியக்கவைக்கிறார். திறமைக்கு ஏது ஊர், மொழியெல்லாம். அது எங்கிருந்தாலும் ஒருநாள் வெளிப்பட்டே தீரும் என்பது சத்தியகலா சொல்லும் சேதி. பிரச்சினை எல்லாம் சீக்கிரமா முடிச்சிட்டு வெரசா வாங்க சத்தியகலா. தமிழ் சினிமாவில் உங்களுக்கான இடம் காத்துகிடக்கு.

வேத் சங்கரின் இசையில் 'சவுக்காரம்' பாட்டு அல்டிமேட். மறந்து போன பல வார்த்தைகளையும், வாத்தியங்களையும் தனது பாடல்கள் மூலம் மீண்டும் உயிர்பெற செய்திருக்கிறார். பின்னணி இசைக்காக வாழ்த்துகள் ஜித்தன் ரோஷன். வறண்ட பூமியான தேவக்கோட்டையையும் தனது கேமராவால் பச்சையாக காட்டி கண்ணுக்கு குளிரூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் குமார் ஸ்ரீதர்.

இரண்டாம் பாதியின் முதல் 15 நமிடங்கள் வரை யதார்த்தமாக நகர்ந்து கொண்டிருந்த படம், திடீரென கமர்சியல் சினிமா ரூட்டில் பயணிக்க தொடங்கிவிடுகிறது. க்ளைமாக்சில் ஏதாவது ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வலிய திணிக்கப்பட்ட காட்சிகள், 'அடப்போங்கப்பா நீங்களும் இப்படிதானா' என புலம்ப வைக்குது.

எனினும் மறைந்து போன ஒரு மனிதக்கூட்டத்தின் வாழ்க்கையை அதிகப்படியான உணர்வுகளுடன் நமக்கு காட்டும் 'தொரட்டி', செம பியூட்டி.

   
 
ஆரோக்கியம்