Back
Home » திரைவிமர்சனம்
Kazhugu 2 Review:அடர்வனத்தில் செந்நாய்களின் தாக்குதலுக்கு நடுவில் ஓர் அழகான காதல்-கழுகு 2 விமர்சனம்
Oneindia | 1st Aug, 2019 11:58 AM

சென்னை: எளிய மனிதர்களுக்கு இடையேயான காதலை, அடர் வனத்தின் பின்னணியில் குளிர்ச்சியாக கூறும் படம் கழுகு 2.

கொடைக்கானலில் ஓர் அடர்ந்தக் காடு. அதில் செந்நாய்களின் ஆட்சி. மனிதர்களை வேட்டையாடும் செந்நாய்களுக்கு பயந்து, அந்த காட்டுக்குள் நுழையவே பயப்படுகின்றனர் ஊர் மக்கள். சுயநலம் கொண்ட ஒரு வியாபாரி மரங்களை வெட்டி லாபம் பார்ப்பதற்காக அந்த காட்டை ஏலம் எடுக்கிறார்.

தொழிலாளர்களின் அச்சத்தை போக்க துப்பாக்கியுடன் திரியும் இரண்டு வேட்டைக்காரர்களை (கிருஷ்ணா மற்றும் காளி வெங்கட்) பாதுகாப்பு பணியில் நியமிக்கிறார். ஆனால் அந்த இரண்டு பேரும் போலீசிடம் துப்பாக்கியை களவாடிய டுபாக்கூர்கள். அது தெரியாமல் மரம் வெட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள் தொழிலாளர்கள்.

அதில் ஒரு தொழிலாளியான பிந்து மாதவி, வந்தவர்கள் உண்மையான வேட்டையர் அல்ல என்பதை கண்டுகொள்கிறார். இருப்பினும் அனாதையான கிருஷ்ணா மீது பரிதாபம் கொண்டு, அவரை காதலிக்கத் தொடங்குகிறார். முதலில் காதலை ஏற்க மறுக்கும் கிருஷ்ணா, பின்னர் பிந்துவை காதலிக்க ஆரம்பிக்கிறார். இந்த காதலுக்கு பிந்துவின் தந்தை எம்.எஸ்.பாஸ்கர் வில்லனாக வருகிறார்.

அதேசமயம் பேராசைப் பிடித்த உள்ளூர் எம்எல்ஏ ஹரிஷ் பிராடி, காட்டுக்குள் இருந்து கொள்ளையடித்த பழங்காலத்து நகைகளை, கிருஷ்ணாவும், காளி வெங்கட்டும் ஆட்டையப் போடுகிறார்கள். தனது நகைகளை கொள்ளையடித்தவர்களை தேடி அலைகிறார் ஹரிஷ் பிராடி. கிருஷ்ணாவும், காளி வெங்கட்டும் எம்எல்ஏவிடம் சிக்காமல் தப்பிக்கிறார்களா?, கிருஷ்ணா - பிந்து மாதவி காதல் என்ன ஆகிறது என்பதே மீதிக்கதை.

முதலில் நாம் பாராட்ட விரும்புவது ஒளிப்பதிவாளர் ராஜாவை தான். ஆரம்பம் முதல் கடைசி வரை ஒவ்வொரு ஃப்ரேமையும் கவிதையாய் படைத்திருக்கிறார். முதல் காட்சியில் பச்சை பசேல் என காட்சியளிக்கு காட்டையும், அதன் அழகையும், அதில் ஒளிந்திருக்கும் அபாயத்தையும் ஒரு சேர படம் பிடித்து அசத்துகிறார். வெண்பனி ஓடும் மாலைப் பொழுதுகளில் மனதை மயக்குகிறார்.

ஒவ்வொரு காட்சியிலும் அசாதாரணமான நடிப்பை கொட்டியிருக்கிறார் பிந்து மாதவி. கிருஷ்ணாவின் மீது பரிதாபம் கொள்வது, தனது காதலுக்காக பெற்றோரை எதிர்ப்பது என ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். பழைய பாவாடை தாவணி, அதற்கு மேல் ஒரு கட்டுத்துணி என சிம்பிளான ஆடையிலும் அழகாய் ஜொலிக்கிறார்.

களவாணிப் பயல், டுபாக்கூர் வேட்டைக்காரன், அப்பாவிக் காதலன் என அனைத்து சூழ்நிலைக்கும் அச்சு அசலாய் பொருந்துகிறது கிருஷ்ணாவின் முகம். பீடியை இழுத்துக் கொண்டு காளி வெங்கட்டுடன் அவர் செய்யும் ரகளைகள் ரசிக்க வைக்கின்றன.

நீண்ட நாட்கள் கழித்து முழுப்படத்திலும் வருகிறார் காளி வெங்கட். ஹீரோவின் நண்பன் ரோலுக்கு செமபிட். இருந்தாலும் உங்களிடம் நிறைந்திருக்கும் திறமைக்கு இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் ப்ரோ. பிந்துவின் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கரும், தாயாக ரமாவும் கனக்கச்சிதம்.

கிருஷ்ணா, காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் காமெடி ஒரு சில இடங்களில் நன்றாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. வில்லன் ஹரிஷ் பிராடி வழக்கம் போல சைலண்டாக வந்து வைலண்டாக பயமுறுத்துகிறார்.

காடு, மரம் வெட்டும் தொழிலாளர்கள், செந்நாய்க்கூட்டம் என புதிய களத்தை காட்டுகிறார் இயக்குனர் சத்யசிவா. இரண்டாம் பாதியில் வரும் மரச்சாவி திருட்டு சீக்வென்ஸ் பிரெஷ் மெட்டிரியல். அதேபோல் பெண் பார்க்கும் காட்சியில் அந்த முதியவர் பேசும் டயலாக், அல்டிமேட் காமெடி.

ஆனால் படம் ஆரம்பித்ததில் இருந்து கும்கி படத்தின் பாதிப்பை உணர முடிகிறது. இரண்டாம் பாதியின் பாதி வரை ஒழுங்காக நகரும் படம், அதன் பிறகு முதுமக்கள் தாழி, திருட்டு, நகைக் கொள்ளை என திசை மாறிவிடுகிறது. அதனாலேயே படத்துடன் ஒன்ற முடியாமல் போய்விடுகிறது. காமெடி ஏரியாவிலும் இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கறை காட்டியிருக்கலாம். அதேபோல் செந்நாய்கள் தொடர்பான கிராபிக்ஸ் காட்சிகளிலும் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில், 'காந்த கண்ணழகி' யாஷிகா ஆடும் பாட்டு செம பீட்டு. பின்னணி இசையிலும் வழக்கம் போல் தனது முத்திரையை பதித்திருக்கிறார். கோபி கிருஷ்ணாவின் எடிட்டிங் படத்தை போரடிக்காமல் நகர்த்துகிறது.

கதையிலும், திரைக்கதையிலும் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் இந்த கழுகு 2-ம் வானுயரப் பறந்திருக்கும்.

   
 
ஆரோக்கியம்