Back
Home » திரைவிமர்சனம்
Jackpot Review: 'தலைவி' பின்னி பெடலெடுக்குறாங்களே... ஜோதிகாவிற்கு சரியான ஜாக்பாட் தான்..! விமர்சனம்
Oneindia | 2nd Aug, 2019 04:53 PM

சென்னை: ஒரு பொக்கிஷத்தை கைப்பற்ற ஜோதிகாவும், ரேவதியும் செய்யும் அதிரடி அட்டகாசங்கள் தான் ஜாக்பாட்.

"இந்த கதையை சொல்லத் தொடங்க வேண்டுமானால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயணிக்க வேண்டும்" என தசாவதாரம் கமல் ரேஞ்சுக்கு ஒரு பெரிய பிளாஷ் பேக்குடன் ஆரம்பமாகிறது படம். அள்ள அள்ளக் குறையாத 'அட்சய பாத்திரம்' என ஒரு பாத்திரத்தை பற்றி புராணங்களில் கேள்விப்பட்டிருக்கீங்கள்ல, அது தான் இந்த படத்தின் ஜாக்பாட்.

பல பேர் கை மாறி ஒரு ஏழை பால்காரரிடம் வந்து சேர்கிறது அந்த அட்சய பாத்திரம். அதை வைத்து அவர் பெரிய பணக்காரராக உயர்கிறார். அந்த பாத்திரத்தை அவருடைய வீட்டில் இருந்து இரண்டு திருடர்கள் ஆட்டயப் போடுகிறார்கள். தப்பிச் செல்லும் போது ஒரு ஆற்றில் அந்த பாத்திரம் விழுந்துவிடுகிறது.

பின்னர் ஓர் இடத்தில் கரை ஒதுங்கும் பாத்திரத்தை 'குமாரி' சச்சு கண்டெடுக்கிறார். அதில் நூறு ரூபாய் நோட்டை போட்டவுடன் அது பல மடங்காகிறது. பாத்திரத்தை ஆனந்த்ராஜ் வீட்டு மாட்டுக்கொட்டகையில் புதைத்துவிட்டு, பேங்க்கு போகும் சச்சு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். ஏனென்றால் அட்சய பாத்திரத்தில் இருந்து அவர் எடுத்த அத்தனை நோட்டுகளும் ஒரே சீரியல் நம்பரில் இருக்கின்றன.

இந்த கதையை அவருடன் சிறையில் இருக்கும் ஜோதிகா மற்றும் ரேவதியிடம் சொல்கிறார் சச்சு. ஜோதிகாவும், ரேவதியும் ஊருக்குள் பலரை ஏமாற்றி, மொள்ளமாரித்தனம் செய்து, கேப்மாரியாக வாழ்கிறவர்கள். உடனே அந்த அட்சய பாத்திரத்தை ஆனந்த்ராஜ் வீட்டில் இருந்து ஆட்டயப் போட திட்டம் போடுகிறார்கள். அது ஒர்க்கவுட் ஆகி அவர்களுக்கு ஜாக்பாட் அடித்ததா? இல்லையா? என்பதே கலகல மீதிக்கதை.

குஷியில் பார்த்த துறுதுறு ஜோதிகாவை மீண்டும் திரையில் பார்ப்பதற்கு இத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது. தலைவி சும்மா பின்னி பெடலெடுத்திருக்காங்க. ஒரு ஃபைட்டில் விஜயகாந்த் ஸ்டைலில் சுவரில் கால் வைத்து எகிறி மைனா சூசனை எட்டி உதைக்கிறார். இன்னொரு சண்டையில் விஸ்வரூபம் கமல் ரேஞ்சுக்கு அடி வெளுக்கிறார். காமெடி, சென்டிமெண்ட் என நம்ம பழைய 'ஜோ' இஸ் பேக்.

ஒரு வரியில் எழுதிவிடக் கூடிய கதையை இரண்டரை மணி நேர படமாக, சுவாரஸ்யம் குறையாமல் எடுக்கும் திறமை இயக்குனர் கல்யாணுக்கு நிறைய இருக்கு. முதல் பாதியில் ஆனந்த்ராஜ் அண்ட் கோவுடன், ஜோதிகாவும், ரேவதியும் சேர்ந்து செய்யும் ரகளைகள் சிரிப்பு மத்தாப்பூ.

ஆனால் இரண்டாம் பாதியில் அந்த கலகலப்பு மிஸ்ஸிங். கொஞ்ச நேரம் யோகி பாபு மேனேஜ் செய்கிறார். யோகி பாபுவின் என்ட்ரி சீன் அல்டிமேட் ஆல்ட்ரேஷன். முழுக்க முழுக்க சிரிக்க வைக்கவில்லை என்றாலும், ஒரு சில இடங்களில் குபீர் சிரிப்பை வரவைக்கிறார் யோகி பாபு.

பல இடங்களில் சோலோவாக ஸ்கோர் செய்கிறார் ஆனந்த் ராஜ். இடைவேளைக்கு முந்தைய காட்சிகள் காமெடி சரவெடி. இதில் மானஸ்தன், மானஸ்தி என டுயல் ரோல் வேற. ஒருகாலத்தில் எப்படிப்பட்ட வில்லனாக இருந்தவர். நானும் ரவுடி தான்னு இப்படி காமெடியனாக மாறிட்டீங்களே பாஸ். ஆனா சும்மா சொல்லக்கூடாது, கலக்கு கலக்குன்னு கலக்கிருக்கீங்க.

ஆனந்த்ராஜ் அண்ட் கோவில் உள்ள கோகோ டோனி அசால்ட்டா சிரிக்க வைக்கிறாரு. ப்ப்பா... சின்ன சின்ன டயலாக்ஸ் தான். ஆனா குபீர்ன்னு சிரிப்பு வருது. பழைய ஜோக் தங்கதுரை, மன்சூர் அலிகான், மொட்ட ராஜேந்திரன் என எல்லோருமே காமெடிக்கு கேரண்டி தருகிறார்கள்.

ஒரு காலத்தில் ரஜினி, கமல், கார்த்திக்ன்னு டாப் ஹீரோக்கள் காதலித்த ரேவதியை இன்று மொட்ட ராஜேந்திரன் காதலிக்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. எல்லாம் 'வயசான கோளாறு' தான் காரணம். முதுமை முகத்தில் தெரிந்தாலும், நடிப்பில் தெரியவில்லை ரேவதி மேம். அரங்கேற்ற வேலையில் பார்த்த அதே மாஷாவின் துறுதுறுப்பு இப்போதும் தெறிக்கிறது.

விஷால் சந்திரசேகரின் இசையில் ஷீரோ ஷீரோ பாட்டு செம பீட்டு. ஜாக்பாட் பாடல் அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார் எல்லோரையும் கலர்புல்லாக காட்டியிருக்கிறார். விஜய் வேலுக்குட்டியின் எடிட்டிங்கில் இரண்டாம் பாதியின் நீளம் அதிகம்.

மகாநதி, நாயகன், விஸ்வரூபம் என சில படங்களை ஸ்பூப் செய்திருக்கிறார் இயக்குனர். அதில் மகாநதி வழுக்கி விழுந்துட்டேன் காமெடி செம. ஆனந்த்ராஜ் அண்ட் கேங்கின் ஆந்திர எபிசோடில் வரும் 'தமிழ் பெயர் பலகை' மட்டுமே படத்தின் அல்டிமேட் காமெடி. பிங்கி மாடின் க்ளைமாக்ஸ் டிவிஸ்ட், முதலில் காணாமல் போய், பின்னர் தோன்றும் சில கதாபாத்திரங்கள் என திரைக்கதையில் சில சுவாரஸ்யங்களும் இருக்கிறது.

ஆனால் அது மட்டுமே போதுமா இயக்குனரே. முதல் பாதியை போல் இரண்டாம் பாதியிலும் காமெடியை கூட்டியிருக்கலாம். முழுக்க முழுக்க கேப்மாரித்தனம் செய்துவிட்டு கடைசியில் 'இல்லாமையை இல்லாமல் செய்வோம்' என டயலாக் பேசி மெசேஜ் சொல்வதெல்லாம் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பார்க்கப் போகிறோமோ? அதேபோல் சமுத்திரக்கனி மற்றும் அவரது மகள் கதாபாத்திரம் படத்தில் இடம்பெற்றதற்கு சொல்லப்படும் காரணம்... அடேங்கப்பா சாமி முடியில.

இருந்தாலும் இது ஜோதிகா ரசிகர்களுக்கு சரியான 'ஜாக்பாட்' தான்.

   
 
ஆரோக்கியம்