Back
Home » திரைவிமர்சனம்
Kolaiyuthir Kaalam Review: துரத்தும் மர்மம், தவிக்கும் நயன்.. கண்ணாமூச்சி ஆடும் கொலையுதிர் காலம்!
Oneindia | 10th Aug, 2019 09:48 AM

சென்னை: தன்னை கொலை செய்ய வரும் ஒரு மர்ம மனிதனுடன் நயன்தாரா விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டம் தான் கொலையுதிர் காலம்.

பிறவியிலேயே வாய் பேச முடியாதவர், ஆனால் அபார ஓவிய திறமை கொண்டவர் நயன்தாரா. இந்தியாவில் ஒரு ஆசிரமத்தில் வளரும் அவரை, லண்டனை சேர்ந்த மல்டி மில்லினியர் அபா லான்சன் தத்தெடுக்கிறார். தாய் லண்டன் சென்றுவிட, இந்தியாவில் வளர்கிறார் நயன்.

ஒருநாள் தனது தத்து தாய் இறந்துவிட, லண்டனுக்கு செல்கிறார் நயன். அங்கு பல்லாயிரம் கோடி சொத்துக்கு உரிமை கொண்டாடி வரும் பூமிகாவும், அவரது கணவரும் நயன்தாராவை மிரட்டுகிறார்கள். எல்லா சொத்துகளையும் தங்களுக்கு எழுதி கொடுத்துவிட்டு இந்தியா திரும்பிவிட வேண்டும் என வற்புறுத்துகிறார்கள்.

இந்நிலையில், தனிமையில் இருக்கும் அந்த பங்களா வீட்டில், நயனும், வேலைக்கார பாட்டி ரோகினியும் இருக்கிறார்கள். பிரதாப் போத்தனும் அவர்களுடன் இருக்கிறார். இந்நிலையில் அண்டர்டேக்கர் போல் உடல்வாகு கொண்ட ஒரு மர்ம மனிதன், பிரதாப்போத்தன் மற்றும் ரோகினி பாட்டியை போட்டு தள்ளிவிட்டு நயன்தாராவையும் கொலை செய்ய முயற்சிக்கிறான்.

அவனிடம் இருந்து தப்பிக்க வீட்டிற்குள் ஓடி ஒளிகிறார் நயன். அந்த மர்ம மனிதன் யார்? எதற்காக நயன்தாராவை கொல்லப்பார்க்கிறான்? அந்த மர்ம மனிதனிடம் இருந்து நயன் தப்பித்தாரா? என்பதே கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் மிச்ச திரில்லர்.

ஹஷ் எனும் ஆங்கிலப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் கொலையுதிர் காலம். லண்டன், பனி சூழ்ந்த பெரிய பங்களா, அழகான புல்வெளி, பச்சைப்பசேல் என காட்சியளிக்கும் தோட்டம் என கண்ணுக்கு ரம்மியமான லொகேஷன்களில் படத்தை எடுத்ததற்காக முதல் பாராட்டுகள்.

கோரி கெய்ர்க்கின் ஒளிப்பதிவும், அச்சு ராஜாமணியின் பின்னணி இசையும் படத்தை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்து சென்றுள்ளது. படத்தின் மேக்கிங்கும் செம தரம். ஆனால் இது மட்டுமே ஒரு படத்துக்கு போதுமானதா? அதுவும் ஒரு திரில்லர் படத்துக்கு அடிப்படை தேவை என்ன?

அடுத்து என்ன நடக்கும் என பார்வையாளர்கள் யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைப்பது தான் ஒரு திரில்லர் படத்துக்கு மிகவும் அவசியம். சமீபத்தில் வெளியான ராட்சசன், இமைக்கா நொடிகள் போன்ற படங்கள், திரில்லர் வகை படங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு.

ஆனால் கொலையுதிர் காலத்தில் பின்னணி இசையும், ஒளிப்பதிவையும் தவிர திரில்லர் என சொல்வதற்கு வேறு எந்த அத்தாட்சியும் இல்லை. நயன்தாராவை அண்டர்டேக்கர் ஏன் துரத்துகிறான் என்பது ஒரு கட்டத்தில் தெளிவாக தெரிந்துவிடுகிறது. இதனால் சுவாரஸ்யம் என்பது மருந்துக்கு கூட இல்லை.

படம் தொடங்கிய அரை மணி நேரத்தில் நயன்தாரா ஓடிஒளிய ஆரம்பிக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சி வரை ஓடி ஓடி ஒளிந்து கொண்டே இருக்கிறார். ஆனால் அவ்வளவு பெரிய உருவத்தால் அவரைப் பிடிக்க முடியவில்லை..! உஸ்ஸ்ஸ்ஸ்... இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.

முதலில் வீட்டுக்குள் ஓடி ஒளிகிறார். பிறகு வெளியே புல்வெளி இடுக்குகளில் ஓடி ஒளிகிறார். கொஞ்ச நேரம் சண்டை போட முயற்சிக்கிறார். பின்னர் மீண்டும் வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொள்கிறார். 'ஒருகட்டத்தில் என்னதான்ப்பா சொல்ல வர்றீங்க' என பார்வையாளர்களின் மைண்ட் வாய்ஸ் வெளியில் கேட்க ஆரம்பித்துவிடுகிறது.

முழு படத்தின் வசனத்தையும் ஒரு ஏ4 ஷீட்டில் அடக்கிவிடலாம். அதுவும் இரண்டாம் பாதியில் வசனமே இல்லை. வெறும் பின்னணி இசையும், நயன்தாராவின் மூச்சுவிடும் சத்தமும், கதறலும் தான் கேட்கிறது. இதுவே படத்தை சலிப்படைய செய்துவிடுகிறது.

அண்டர்டேக்கரை கொடூர வில்லனாக காட்ட வேண்டும் என்பதறக்காகவே தேவையே இல்லாமல் நிறைய காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர். வந்தமா கொலை பண்ணமா போனமான்னு இல்லாமா, நம்ம பொறுமையை சோதிக்கிற மாதிரி, நிதானமா உட்கார்து டிபன் சாப்பிட்டு முடித்துவிட்டு நயன்தாராவை தேட ஆரம்பிப்பது எல்லாம் அண்டர்டேக்கருக்கே ஆகாது.

கடைசி காட்சியில் அந்த அண்டர்டேக்கர் உயிர் பெற்று வருவது போல காட்டியுள்ளார் இயக்குனர். மெயின் வில்லன் செத்த பிறகு, இந்த அண்டர்டேக்கர் உயிரோடு வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? ஹாலிவுட் சீரியல் கில்லர்/சைகோ கில்லர் படங்களைப் போல் பீல் செய்திருக்கிறார் இயக்குனர் சக்ரி டோலட்டி.

அதாவது அடுத்தடுத்த பாகங்கள் வெளிவரும் என சிம்பாளிக்காக காட்டுகிறாராம். எடுத்த ஒரு படத்தையே சொன்ன தேதிக்கு ரிலீஸ் செய்ய முடியல. எட்டு முறை தள்ளிப்போய், இப்போதுதான் ஒரு வழியாக பிரச்சினைகள் எல்லாம் முடிவாகி ரிலீசாகியிருக்கு. இதுல அடுத்த பாகம் வேறையா? யோசனை மஞ்சவாண்டு தான்.

நயன்தாரா... இந்த பெயரை கேட்டு தான் ஏமாந்து போய்விட்டோம். பாவம் நம்ம லேடி சூப்பர் ஸ்டார், அண்டர்டேக்கரை பார்த்து பயந்து நடுங்கி, அவ்வளவு பெரிய உருவத்தோட சண்டைப் போட்டு, ஓடி ஒளிந்துன்னு நிறைய கஷ்டப்பட்டு நடிச்சிருக்காங்க. தலைவியை தவிர வேறு யாராவது இந்த படத்துல நடிச்சிருந்தா முதல் பாதி படத்தைக் கூட பார்த்திருக்க முடியாது. நயன்தாராவின் எல்லா உழைப்பும் விழலுக்கு இரைத்த நீராய் வீணாக போய்விட்டது.

யார் பெத்த மகனோ தெரியல, நல்லா முக்கா அண்டர்டேக்கர், கால் கேன் என படம் முழக்க அந்த வீட்டை சுற்றி சுற்றி வந்து பயமுறுத்தியிருக்கார் ஒருவர். பூமிகாவுக்கு வில்லி வேடம் பொருந்தவே இல்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லத்தனமாக அவர் பேசும் டயலாக்கை கேட்டு சிரிப்பு சிரிப்பா வருது. எதுக்கு வந்தோம், என்ன பண்ணோம், எதுக்காக செத்தோம்ன்னே தெரியாமலேயே போய்விடுகிறார் பிரதாப் போத்தன்.

ஹ்ம்ம்ம் பாவம் நம்ம அண்ணன் ராதாரவி, தன்னால முடிச்ச அளவுக்கு இந்த படத்துக்கு புரொமோஷன் செய்து கொடுத்தார். ஆனால் என்ன செய்ய, அவரோட உழைப்பும் வீணாகிவிட்டது. நயன்தாரா நடிப்பு, கோரி கெர்யகின் ஒளிப்பதிவு, அச்சு ராஜாமணியின் பின்னணி இசை.. இது தான் படத்தின் பிளஸ். மற்ற எல்லாமே மைனஸ் தான்.

நயன்தாராவின் பிளாப் லிஸ்டில் மற்றொரு படம் 'கொலையுதிர் காலம்'.

   
 
ஆரோக்கியம்