Back
Home » திரைவிமர்சனம்
Nerkonda Paarvai Review:ஒரு பொண்ணு நோ சொன்னா நோ தான்.. தெறிக்க விடும் தல -நேர்கொண்ட பார்வை விமர்சனம்
Oneindia | 8th Aug, 2019 10:51 AM

சென்னை: பெண்கள் பற்றி பொதுபுத்தியில் இருக்கும் பார்வையை மாற்ற துணிந்திருக்கிறது அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம்.

ஷ்ரத்தா, அபிராமி, ஆண்ட்ரியா ஆகிய மூன்று பேரும் தோழிகள். ஒரு நடன நிகழ்ச்சியில் இருந்து திரும்பும் போது, ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்களுடன் இரவு ஒரு ஹோட்டலுக்கு செல்கிறார்கள். அவர்களிடம் தவறாக நடக்க முயலும் ஆதிக்கின் நண்பரை பாட்டிலால் மண்டையை பிளந்துவிடுகிறார் ஷ்ரத்தா.

இதைடுத்து தோழிகள் மூன்று பேரும் ஒரு கேப் பிடித்து வீட்டுக்கு திரும்பி விடுகிறார்கள். ஆனால் காயமடைந்த வாலிபர், அதிகார பலத்தில் இருக்கும் அமைச்சர் ஒருவரின் உறவுக்காரர். இதனால் ஷ்ரத்தா மிரட்டப்படுகிறார். இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கும் ஷ்ரத்தாவை மானபங்கப்படுத்துகிறார்கள் சம்மந்தப்பட்ட வாலிபர்கள்.

இதையடுத்து தன்னை மிரட்டும் நபர்கள் மீது போலீசில் புகார் கொடுக்கிறார் ஷ்ரத்தா. அதிகார துஷ்பிரயோகத்தினால், ஷ்ரத்தா மீது விபச்சாரம் மற்றும் கொலை முயற்சி வழக்கு பதியப்படுகிறது. அவருடைய தோழிகளும் இதில் சிக்குகிறார்கள். காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா என அந்த மூன்று பெண்களும் தவித்துக்கொண்டிருக்கும் போது, ஆபத்பாந்தவனாய் வருகிறார் வழக்கிறஞரான அஜித்.

ஆனால் அஜித் ஒரு மன அழுத்த நோயாளி. மனைவி வித்யா பாலனின் திடீர் மறைவால் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகும் அஜித், அதில் இருந்து மீண்டும் வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அபாண்டமான பழிக்கு ஆளாகும் அந்த மூன்று இளம்பெண்களை, தனது நோயை சமாளித்து அஜித் எப்படி வாதாடி காப்பாற்றுகிறார் என்பதே கதை.

பிங்க் படத்தை அப்படியே எடுக்காமல், அதில் சில மாற்றங்களை செய்து தமிழ் ரசிகர்களுக்கு, குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி கொடுத்திருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். ஒரிஜினல் படத்தில் அபிதாப் ஒரு குடிகாரர். ஆனால் இந்த அஜித் ஒரு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளி. இந்த மாற்றம் நிச்சயம் வரவேற்க வேண்டிய விஷயம். ஏனெனில் அஜித்தை குடிகாரராக காட்டாமல் இருந்தது, அவரது ரசிகர்கள் மீது வினோத்துக்கு இருக்கும் அக்கறையை காட்டுகிறது.

இந்தி படத்தில் அபிதாப்க்கு சண்டை காட்சியோ, ரொமான்ஸ் காட்சியோ கிடையாது. ஆனால் இதில் தல ரசிகர்களை திருப்திப்படுத்த சண்டை மற்றும் ஒரு காதல் பாடலை திணித்திருக்கிறார். அவை ரசிக்கும்படியாகவே இருக்கின்றன. முதல் பாதியில் வரும் சண்டைக்காட்சி, இதுவரை அஜித் படங்களில் இடம்பெற்ற சண்டைகளை மிஞ்சுகின்றன.

இந்தியில் அரை மணி நேரத்திற்கு பிறகு தான் அபிதாப்பை காட்டுவார்கள். ஆனால் இதில் முதல் 10 நிமிடங்களுக்குள்ளாகவே அஜித் அறிமுகமாகிவிடுகிறார், மிக எளிமையாக. ஆனால் அவரது முகத்தில் தெரியும் குழப்பமும், மர்மமும் ஆர்வத்தை தூண்டுகின்றன.

அதேபோல் அகலாதே பாடலில், அஜித் - வித்யா பாலன் இடையேயான காதல் செம க்யூட். குறிப்பாக, கர்ப்பிணியாக இருக்கும் வித்யாவுடன், அஜித் நடத்தும் போட்டோ ஷூட் ரசனைக்குரிய மான்டேஜ்கள். முதல் பாடல் பிரமாண்டத்தின் அடையாளம். கோர்ட் காட்சிகளிலும், மற்ற சில காட்சிகளிலும் வரும் வசனம் நறுக்கென ஈட்டியாய் சொருகுகின்றன.

குறிப்பாக 'யோசிச்சு நடக்கனும், யோசிச்சுகிட்டே நடக்கக்கூடாது', என அஜித் வாய் மலரும் முதல் வசனமே நம்மையும் யோசிக்க வைக்கிறது. கோர்ட் காட்சிகளில் அஜித் முன்வைக்கும் வாதமும், இதுவரை தமிழ் சினிமாவில் இடம்பெறாத புதிய பொன்மொழிகள்.

எந்தவித ஹீரோயிசமும் இல்லாத, இப்படி ஒரு படத்தில் நடிக்க வேண்டிய கட்டாயம் அஜித்துக்கு நிச்சயம் இல்லை. ஆனால் அவர் நடித்திருக்கிறார் என்றால், படத்தில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான கருத்து மக்களை சென்றடைய வேண்டும் என்பது ஒன்று மட்டும் தான் காரணமாக இருக்க முடியும்.

அதற்காக தனது ரசிகர்களை ஏமாற்றவில்லை தல. படத்தில் ஒரேயொரு ஆக்ஷன் காட்சி தான். பைக் வீலிங், கார் சேசிங், சட்டலாக பேசும் பஞ்ச் டயாக் என செம விருந்து வைக்கிறார். பின்பாதியில் அப்பாவி கணவனாக வந்து அப்ளாஸ் அள்ளுகிறார்.

அபிதாப்க்கு எந்தவிதத்திலும் குறையாமல், தன்னால் முடிந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார். ஒரு காட்சியில் அஜித்தை பற்றி மை.பா.நாராயணன் ஒரு டயலாக் பேசுவார். "அவனே (அஜித்) செத்த பொணத்துல வெத்தலைய மடிச்சு வெச்ச மாதிரி இருக்கான்", என நக்கல் அடிப்பார். எந்த ஒரு மாஸ் ஹீரோவும் தன்னை பற்றி இப்படி ஒரு வசனம் வைக்க சம்மதிக்க மாட்டார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் அஜித்துக்கு மட்டும் தான் அந்த பக்குவம் உண்டு. அந்த டயலாக் தான் படத்தில் அவரது கேரக்டர்.

எந்த படத்திலும் இல்லாத வகையில் தெளிவான உச்சரிப்புடன் டயலாக்குகளை தீரமாக பேசுகிறார் அஜித். அதற்காகவே தனி பாராட்டுகள். கோர்ட் காட்சியில், நேர்கொண்ட பார்வையுடன் வாதி, பிரதிவாதிகளைப் பார்த்து அவர் வாதாடுகள் காட்சிகள் செம. அலட்டிக்கொள்ளாமல் வந்து, கடைசி வரை நின்று ஸ்கோர் செய்கிறார் தல.

அஜித்துக்கு பிறகு படத்தில் அதிகம் ஸ்கோர் செய்வது ரங்கராஜ் பாண்டே தான். தனக்கு எதிரே ஒரு பெரிய ஹீரோ நிற்கிறார் என்பதை பற்றி எல்லாம் யோசிக்காமல், ஒரு தேர்ந்த நடிகரை போல நடித்திருக்கிறார். டிவி விவாதங்களில் எதிராளிகளை கிறங்கடிப்பது போல், இதிலும் அசால்ட்டாக வாதாடுகிறார். பாண்டேவை இனி நிறைய படங்களில் பார்க்கலாம் போலயே.

மாடர்ன் பொண்ணாக வந்து மனதை கொள்ளை கொள்கிறார்கள் ஷ்ரத்தாவும், அவரது தோழிகளும். ஷ்ரத்தா, அபி, ஆண்ட்ரியா என மூன்று பேருமே சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் அபி அழுவதை பார்க்கும் போது, பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

ஜெயபிரகாஷ், ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள், டெல்லி கணேஷ் என நடிகர்கள் யாரும் எந்தக் குறையும் வைக்கவில்லை. கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை கொள்ளையடிக்கிறார் வித்யா பாலன். அஜித்துக்கு செம ஜோடி.

யுவனின் பின்னணி இசையில் சண்டைக்காட்சியில் ஒலிக்கும் தீம் மியூசிக் செம பீல். அகலாதே பாடல் செம மெலடி. மற்ற பாடல்கள் கேட்கக் கேட்க பிடிக்கும் ரகம்.

நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு ஒரு எல்லைக்குள் சுருங்கி இருக்கிறது. சண்டைக்காட்சியை தவிர, மற்ற எல்லாக் காட்சிகளும் ராவான பீல் தருகிறது. எடிட்டர் கோகுல் சந்திரன் படத்தை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தி இருக்கலாம். சில காட்சிகள் மிக சாதாரணமாக, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து போகின்றன.

சதுரங்க வேட்டை, தீரன் எடுத்த எச்.வினோத் படமா இது என கேட்கும் அளவுக்கு விறுவிறுப்பு குறைவு. லாஜிக் ஓட்டைகளும் நிறைய. சண்டைக்கு போகும் போது பைக்கில் செல்லும் அஜித், திரும்பும் போது ஜீப்பில் வருகிறார். அதேபோல் அஜித் ஏன் இந்த பெண்களுக்காக வாதாட வருகிறார் என்பதற்கும் அழுத்தமான காரணங்கள் ஏதும் இல்லை.

பிங்க் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை மேலும் நீட்டி நேர்கொண்ட பார்வையாக்கி இருக்கிறார். மக்களை உணர்வுப்பூர்வமாக கவர வேண்டும் என்பதற்காக அதை செய்திருக்கிறார். ஆனால் எந்த அளவுக்கு அது ஒர்க்கவுட் ஆகும் என்பது சந்தேகமே. படத்தை வேறு பாதைக்கு அழைத்து செல்வதாகவே தெரிகிறது.

மேலும், படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து நம் தமிழக மக்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா என்பதும் சந்தேகமே. பெண் சுதந்திரம், பெண்கள் மீதான பார்வை பற்றி எல்லாம் படம் பேசுகிறது. ஒரு பெண் மாடர்ன் டிரஸ் போட்டா அவளை இந்த சமூகம் எப்படி பார்க்கும் என்பதையும் தெளிவாக காட்டியிருக்கிறார் வினோத். காலந்தொட்டு வரும் பழமொழிகளை உடைத்தெறிய சொல்கிறார். இவை அனைத்தும் நகர மக்களுக்கே எட்டுமா? எனும் சந்தேகம் இருக்கும் போது கிராமப்புறங்களில் வாய்ப்பே இல்லை. இந்த அத்தனை விஷயங்களிலும் விருப்பம் இல்லாமல் ஒரு பெண்ணைத் தொடக்கூடாது என்பதை மட்டுமே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்பலாம்.

இது அஜித் படம் இல்லை. அவரது ரசிகர்கள் விஸ்வாசம் போல் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட முடியாது. ஆனால் தல சொல்லும் அறிவுரையை நெஞ்சில் ஏந்திச் செல்லலாம்.

'நேர்கொண்ட பார்வை' நிமிர்ந்த நன்னடை போடட்டும்...

   
 
ஆரோக்கியம்