Back
Home » திரைவிருதுகள்
நான் அடிச்ச பத்து பேருமே டான் தான்டா...... அனல் பறக்க அடித்து நேசனல் அவார்டு வாங்கிய கேஜிஎப்
Oneindia | 10th Aug, 2019 04:16 PM

சென்னை: ஒருத்தன அடிச்சு டான் ஆனாவன் இல்லைடா... நான் அடிச்ச பத்து பேருமே டான்டா... கேஜிஎப் படத்தின் பிரபல வசனம் இது. இன்றைய இளைய தலைமுறை சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் வசனம். அசத்தலான சண்டைக்காட்சி, புரட்சிகரமான கதைக்களத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட கே.ஜி.எஃப் படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.

பொதுவாக சாண்டல்வுட் படங்கள் என்றாலே, நாங்கள் இந்த கோட்ட தாண்டி வரமாட்டோம், என்ற மனநிலையிலேயே படத்தை எடுத்து திருப்தி அடைந்துவிடுவார்கள். மற்றபடி அவர்கள் நாங்க எந்த ரிஸ்க்கும் எடுக்க மாட்டோம் ரகம் தான். அவர்களைப் பொறுத்த வரையில் அவர்களின் கல்லா நிறைந்தால் போதும். ஒரு சில படங்கள் மட்டுமே அதற்க விதிவிலக்காக அமையும்.

அந்த விதிவிலக்கில் இப்போது கே.ஜி.எப் திரைப்படமும் சேர்ந்துவிட்டது. விஜய் கிரகண்டுர் தயாரிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட கேஜிஎஃப் திரைப்படம் தேசிய அளவில் இரண்டு விருதுகளை வென்றிருக்கிறது. இப்படத்திற்கு அதிரடி காட்சி அமைப்புகள் மற்றும் சிறப்பு காட்சி அமைப்புகள் ஆகிய இரு பிரிவுகளில் விருதுகளைப் பெற்றிருக்கிறது.

கே.ஜி.எப் படம் 2014ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் திரைப்படத்தின் தாக்கத்தினால் உருவாக்கப்பட்டதாகும். இந்தப்படமானது 1951ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதியில் தங்கம் இருப்பதை அறிந்து அங்கே தங்கச் சுரங்கம் அமைக்கப்பட்டு, கோலார் பகுதியே வளம் பெற்றதையும், அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் நடைபெற்ற அரசியல் கொலைகள், ரவுடியிஸத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.

கே.ஜி.எப் பகுதியில் பிறந்த ஒருவன் எப்படி டான் ஆகி அந்த கோலார் தங்க வயலுக்கே தலைவன் ஆகிறான் என்பதுதான் கதை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளையும், அடக்குமுறைகளையும் கண்டு கொதித்தெழும் அதே சமுதாயத்தை சேர்ந்த இளைஞன், சமூகச் சீர்கேடுகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறிந்து முன்னேறும் காலப் பெட்டகத்தின் புரட்சிக்கரமான கதைக் களத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படம் மும்மொழி திரைப்படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியானது.

இந்தப் படத்தில் இடம் பெற்ற வசனங்கள் பெரிதும் பேசப்பட்டன. கேங்கைக் கூப்பிட்டுட்டு வர்றவன் கேங்ஸ்டர், ஒத்தையா வர்றவன்தான் மான்ஸ்டர், வாழ்க்கைன்னா பயம் இருக்கணும் அது நெஞ்சுக்குள்ள மட்டும் இருக்கணும் அந்த நெஞ்சு எதிரியோடதா இருக்கணும் போன்ற தெறிக்க விடும் வசனங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன.

அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள் ஒவ்வொரு சீனும் ரத்தம் தெறிக்கும். நாயகன் யாஷ் அசத்தியிருப்பார். சிறுவர்கள் கூட இந்த படத்தை லயித்து பார்த்தனர். கேஜிஎஃப் படத்திற்கு சண்டைக்காட்சிக்காகவும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ்காகவும் தேசிய விருது கிடைத்துள்ளது.

தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கும் இம்மகிழ்ச்சியான தருணத்தில், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம், தேசிய திரைப்பட விருதுகள் இயக்குனரகம், ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள், திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் தனது ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்து கொள்கிறது கேஜிஎஃப் படக்கு குழு.

   
 
ஆரோக்கியம்